அமெரிக்காவின் 47வது அதிபராகிறார் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த வகையில், அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

இதில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பும் களம் கண்டனர்.

அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.

இந்திய நேரப்படி இன்று காலை 5 மணி அளவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. அப்போதிருந்தே குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 270 வாக்குகளைவிட அதிக வாக்குகளைப் பெற்று, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றிக்குப் பின்னர் உரையாற்றிய ட்ரம்ப், “இதுவரை யாரும் பார்த்திராத இயக்கம் இது. வெளிப்படையாகச் சொன்னால், எல்லாக் காலத்திலும் இது மிகப்பெரிய அரசியல் இயக்கம் என்று நான் நம்புகிறேன். இப்போது, ​​​​அது ஒரு புதிய முக்கியத்துவத்தை அடையப் போகிறது. ஏனெனில், நம் நாட்டை சரிப்படுத்த நாங்கள் உதவப் போகிறோம்.

நம் எல்லைகளை நாங்கள் சரிசெய்யப் போகிறோம். நம்பமுடியாத அரசியல் வெற்றியை நாங்கள் பெற்றிருக்கிறோம். அமெரிக்கர்களுக்காக நாம் வரலாறு படைத்திருக்கிறோம்.

உங்களுக்காக, உங்கள் குடும்பத்துக்காக, உங்களின் எதிர்காலத்துக்காக என்னுடைய ஒவ்வொரு மூச்சிலும் நான் போராடுவேன். நம் நாட்டின் குழந்தைகளுக்கு வலுவான, பாதுகாப்பான, வளமான அமெரிக்காவை வழங்கும் வரை நான் ஓயமாட்டேன். இது உண்மையில் அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்” என்று கூறினார்.

Comments (0)
Add Comment