ஆணாதிக்கத்தைக் கட்டுடைக்கும் ‘அல்லி அரசாணி’!

நாடக இயக்குநர் வெளி ரெங்கராஜன் விளக்கம்

என்னுடைய இயக்கத்தில் 18-ம் நூற்றாண்டின் நாட்டார் கதைப் பாடலான ‘அல்லி அரசாணி மாலை’ வரும் டிசம்பரில் நிகழ்த்தப்பட உள்ளது என்று முகநூலில் அறிவித்துள்ளார் நாடக இயக்குநரான வெளிரெங்கராஜன்.

இதுபற்றி எழுதியுள்ள அவர், “நாட்டார் புராணமான அல்லி அரசாணி மாலையில் செவ்வியல் சம்பிரதாயத்துக்கு மாற்றான ஒரு ஆணாதிக்க எதிர்ப்புக்குரல் தீவிரமாக ஒலிக்கிறது.

பிரபலமான மகாபாரதத்தின் கதைக்கூறுகள் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு ஒரு தமிழ் நாட்டுப்புறக் கதையாடல் பின்புலத்தில் பெண்ணின் ஒரு மாறுபட்ட கட்டுமானம் முன்நிறுத்தப்படுகிறது.

இதில் அல்லி தன்னுடைய போர்த்திறன், நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடன் தன்னுடைய எதிரிகளான அர்ஜுனன், பீமன், கிருஷ்ணன் ஆகியோரின் ஆண்மையை திட்டமிட்டு தகர்க்கிறாள்.

சனாதன பாலியல் சமன்பாடு தலைகீழாக்கப்பட்டு ஒரு தன்னிச்சையான சுயத்திறன்மிக்க பாலியல் பெண்படிமம் இக்கதைப் பாடலில் முன்வைக்கப்படுகிறது.

ஆண்மை, பெண்மை தொடர்பான மாறாத கருத்தாக்கங்களை மறுவடிவாக்கம் செய்து அதுவரை பிரபலமாக செல்வாக்கு செலுத்திய ஆண்மையக் கோட்பாடுகளை நாட்டார் கதைப்பாடலான அல்லி அரசாணி மாலை துணிச்சலாக கட்டுடைப்பு செய்துள்ளது.

அதிலிருந்து நாடகத்துக்கான ஒரு நிகழ்த்துப் பிரதியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment