நியூ லெஃப்ட் ரெவ்யூ பத்திரிக்கையில் (Sep – Oct 2024) பெர்ரி ஆண்டர்சன் எழுதிய அஞ்சலிக் கட்டுரையைப் படித்தபோதுதான் ஃபிரெட்ரிக் ஜேம்சன் (1934-2024) கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் நாள் இறந்து விட்டார் என்ற செய்தி எனக்குத் தெரிந்தது.
இதைப் பற்றி இந்திய நாளேடுகளிலோ வயர் போன்ற தளங்களிலோ ஏதேனும் செய்தி வெளியாகி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன், ஒன்றும் கிடைக்கவில்லை.
1990களில் நிறப்பிரிகை இதழ் வெளியாகிக் கொண்டிருந்தபோது இப்படி ஒரு மரணம் நேர்ந்திருந்தால் அது தமிழ்நாட்டிலிருக்கும் சிந்தனையாளர் ஒருவரின் மரணத்தைப் போல இங்கே கவனிக்கப்பட்டிருக்கும், குறைந்தபட்சம் சில அஞ்சலிக் கட்டுரைகளாவது வெளிவந்திருக்கும்.
கடந்த 30 ஆண்டுகளில் அந்தச் சூழல் இல்லாமல் போய்விட்டது. ஃபிரெட்ரிக் ஜேம்சன் தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் குறித்த விவாதங்கள் நடந்த நேரத்தில் பேசப்பட்ட சிந்தனையாளர்களில் ஒருவர்.
பெர்ரி ஆண்டர்சன், டெரி ஈகிள்டன் ஆகியோரோடு இணைத்து அறியப்பட்ட மேற்கத்திய மார்க்சியர்களில் (western marxists) ஒருவர்.
“பின்நவீனத்துவத்தைக் கொண்டாடுவதோ அல்லது அதை முற்றாக மறுப்பதோ அறிவுபூர்வமாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ சாத்தியமில்லை” எனக் கூறியவர் அவர்.
“மார்க்ஸின் எழுத்துகளில் வெளிப்படையாகக் காணப்படாத ஏகபோகம் (monopoly) அல்லது ‘கிளாசிக்கல்’ ஏகாதிபத்தியம் என்று அழைக்கப்படும் முதலாளித்துவத்தின் ஒரு புதிய கட்டத்தை அடையாளம் காண்பதற்கு லெனின் வழிகாட்டினார்.
இந்தப் புதிய உருமாற்றம் முன்பே நிரந்தரமாக அடையாளம் காணப்பட்டுப் பெயரிடப்பட்டிருக்கிறது என நீங்கள் நம்பவேண்டும்; அல்லது புதிய சூழ்நிலைகளின் கீழ்ப் புதிதாக அடையாளப்படுத்த வேண்டும் என நினைக்கலாம்.
மார்க்சிஸ்டுகள் இந்த இரண்டாவது, முரண்பாடான முடிவை ஏற்க விரும்பவில்லை” எனக் குறிப்பிட்ட ஜேம்சன், எர்னெஸ்ட் மண்டேல் எழுதிய ‘லேட் கேபிடலிசம்’ என்ற நூல்,
முதன்முறையாக முதலாளித்துவத்தின் மூன்றாம் கட்டத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்குகிற கோட்பாடாக வெளியானதையும், அதுவே ‘பின்நவீனத்துவம்’ பற்றிய தனது சிந்தனைகளை சாத்தியமாக்கியது எனவும் தெரிவிக்கிறார்.
முதலாளித்துவத்தின் அந்த மூன்றாம் கட்டத்தினுடைய கலாச்சார உற்பத்தியின் தர்க்கத்தைக் கோட்பாடாகப் புரிந்து கொள்வதற்குப் பின் நவீனத்துவ சிந்தனை தேவை எனத் தெரிவித்தார் (Marxism and Post Modernism)
இதைத்தான் “பின்நவீனத்துவக் கலாச்சாரம் பற்றிய ஃபிரெட்ரிக் ஜேம்சனின் எழுத்துகள், அத்துடன் எப்போதும் நெருக்கமாக இணைந்திருப்பதும் அதை வடிவமைப்பதுமான பொருளாதார மாற்றங்கள் குறித்த புரிதலின் அடிப்படையிலானவை.
பின் நவீனத்துவம் குறித்த ஜேம்சனின் அசலான சிந்தனை 1970 களில் வெளியான எர்னஸ்ட் மண்டேலின் ‘லேட் கேபிடலிசம்’ என்ற ஆய்வு நூலினால் தூண்டப்பட்டது” என பெர்ரி ஆண்டர்சன் குறிப்பிடுகிறார் (மேற்குறித்த நூலின் முன்னுரை) .
ஃபிரெட்ரிக் ஜேம்சன் ஏராளமாக எழுதியிருக்கிறார். மூன்றாம் உலக இலக்கியம் குறித்து Third -World Literature in the Era of Multinational Capitalism என்ற கட்டுரையில் அவர் தெரிவித்த கருத்து, இந்தியாவைச் சேர்ந்த மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அஹமது (Jameson’s Rhetoric of Otherness and the “National Allegory”) உட்பட பலரது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
“மூன்றாம் உலக இலக்கியம் என்ற அடையாளம் ஒவ்வொரு நாட்டின் தனித்துவ அடையாளத்தை மறுக்கிறது.
அத்தகைய சாராம்ச வாத அணுகுமுறை ஏற்புடையதல்ல” என்ற அய்ஜாஸ் அஹமதுவின் கூற்று கவனத்துக்குரியதுதான் எனினும் அந்தவொரு கட்டுரைக்காக ஜேம்சனின் சிந்தனைகளை ஒதுக்கிவிட முடியாது.
அவரது பிற எழுத்துகள் ஐரோப்பியச் சூழலுக்கு மட்டுமின்றி நமக்கும் பொருந்தக் கூடியவையாகும்.
ஃபிரெட்ரிக் ஜேம்சன் அவர்களுக்கு எனது அஞ்சலி.