த.வெ.க. முதல் செயற்குழு உணர்த்துவது என்ன?

விக்கிரவாண்டியில் அண்மையில் கூட்டப்பட்ட தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது அதன் தலைவர் விஜயின் பேச்சு.

அவர் பேசியதெல்லாம் பரபரப்பான விஷயமானது. திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள் என்று பேசினாலும் பேசினார், நாம் தமிழர் இயக்கத் தலைவரான சீமான் அதைப் பிடித்துக் கொண்டு வழக்கம் போல ஆவேசமாக கொந்தளித்து விட்டார்.

திமுக தரப்பிலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும்கூட அத்தகைய பேச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தன. இத்தனைக்கும் திராவிட மாடல் அரசை கடுமையான குற்றம் சாட்டியிருந்தார் விஜய்.

தன்னுடைய முதல் மாநாட்டின் சாராம்சமாக மற்ற எந்த கட்சிகளையும்விட தனித்து அவர் முன்வைத்த ஒரு அம்சம் தமிழகத்தில் ‘கூட்டணி ஆட்சி’ என்பதுதான். அதாவது தன்னுடன் தேர்தலின்போது பங்கேற்கும் கட்சிகளுக்கு அவை பெறும் வெற்றி விகிதத்திற்கு ஏற்றபடி உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதே அதன் மையம்.

கூட்டணி குறித்த விஜயின் பேச்சை இதற்கு முன்பும் சில தலைவர்கள் முன் வைத்திருக்கிறார்கள் என்றாலும், சில தலைவர்கள் கோரிக்கைகளாக வைத்திருக்கிறார்கள் என்றாலும் அதை தன்னுடைய செயல் திட்டமாக அறிவித்திருப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் தனித்த அடையாளமாக மாறி இருக்கிறது.

இத்தனைக்கும் தேர்தல் அரசியலில் பங்கெடுத்து தன்னுடைய வாக்கு சதவீதத்தை சரிவர உணராத நிலையிலேயே இந்த முழக்கத்தை வைத்திருக்கிறார் விஜய்.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் இதுவரை திராவிட இயக்கங்கள் முன்னெடுத்து வைத்த முழக்கம். அந்த முழக்கத்தைத் தான் மாற்றி அமைத்திருக்கிறார் விஜய்.

மாநாட்டில் அதிமுக மீதான எதிர்ப்பு அதிகம் வெளிப்படவில்லை என்கின்ற விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய பேச்சில் பாஜகவின் இந்துத்துவா எதிர்ப்பு, திமுக மீதான எதிர்ப்பு, பொதுவான ஊழல்வாதிகளின் மீதான எதிர்ப்பு, ஆளுநர் பதவியே வேண்டாம் என்கின்ற கோரிக்கை – இப்படிப் பல அம்சங்கள் முதல் மாநாட்டிலே பலமான பேசுபொருளாக மாறின.

தற்போது முதல் மாநாட்டைத் தொடர்ந்து நடத்தியிருக்கின்ற தவெக-வின் முதல் செயற்குழுவில், பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வை ரத்து செய்யக் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்களும் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது முக்கியமான தீர்மானமாக போடப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட இந்த தீர்மானத்தை திராவிடக் கட்சிகளில் ஒன்றான திமுக தேர்தலுக்கு முன்பு முன்வைத்து அதே கோரிக்கை தான். தற்போது விஜய் மீண்டும் அதே தீர்மானத்தை அதாவது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடான மது ஒழிப்புக் கொள்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து விரைவில் நடக்க இருக்கும் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவனின் விஜயும் ஒரு சேரப் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது தனிச்சிறப்பு.

இந்த விழா நடப்பதற்கு முன்பே ஊடகங்கள் அது குறித்த விவாதங்களை வழக்கம்போல ஆரம்பித்துவிட்டன.

எப்படியோ அதிமுக தரப்பில் ஜெயக்குமார், திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி, நாம் தமிழர் இயக்கம் சார்பில் சீமான் மாதிரி விஜயும் ஊடகங்களில் தொடர்ந்து பேசப்படும் மையமாக தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்த அவரது சுற்றுப் பயணங்களும் செயல்படும் விதமும் தான் தமிழக அரசியலில் அவரை தனித்து இனம் காட்டி 2026 தேர்தலுக்கு வழி வகுத்து கொடுக்கும்.

– யூகி

Comments (0)
Add Comment