பழந்தமிழர் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டிய க.நெடுஞ்செழியன்!

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அரிதானவர். அதனால், தமிழகத்தில் அறியப்படாதவர். அறிந்திருந்தவர்களும் நெடுஞ்செழியனை நமட்டுச் சிரிப்புடனே கடந்து போனார்கள்.

இந்த நமட்டலுக்கு நம்மிடம் வரலாறு உண்டு. பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று பலரின் மீதும் செலுத்தப்பட்ட அசட்டு நமட்டல் இது.

நெஞ்செழியன், திராவிட சித்தாந்தத்தில் பயின்று வந்தவர். அதன் பிரதானக் காரணிகளாக கடவுள் மறுப்பையும், சாதி எதிர்ப்பையும், தமிழ்ப் பற்றையும் அவர் உருவகித்திருந்தார்.

இது ஒரு வகையில், திராவிடப் பாரம்பரியத்திலிருந்து கிளைத்து வந்த மாற்று மரபு என்று கூட சொல்ல முடியும்.

சங்கத மொழியில் பெண்பாற் புலவர்கள் இல்லை என்பதையும் சங்கத மொழி பெண்களுக்கு கல்வியறிவு தர மறுத்ததையும் இவரின் எழுத்துக்களில் காணலாம்.

இந்திய தத்துவ இயல் பற்றி எழுதியதில் குறிப்பிடத்தக்கவர். தமிழக தத்துவ இயல் பற்றி கனமான ஆய்வுகளைத் தொடர்ந்து செய்தவர். பழந்தமிழர் வாழ்வியைல சரியாக படம்பிடித்துக் காட்டியவர்.

சைவ, வைணவ மதக் கட்டுமானங்களை கட்டுடைப்பது என்று மட்டுமல்லாமல், அதன் மாற்று வடிவங்களை யோசித்ததே நெடுஞ்செழியனின் ஆகப்பெரிய பங்களிப்பு.

இத்தகைய மாற்று வடிவ யோசனைகள் இந்தியா முழுமைக்கும் பொதுவானவை என்பது நமக்குத் தெரியும்.

இந்த மாற்று யோசனைகள் மொத்தமும் பெளத்ததில் சென்று கலந்து விடுகிற காலத்தில், அதிலிருந்து விலகி ஆசீவகத்தை நோக்கி நகர்ந்தது அவர் மீது பெரும் மதிப்பையும் ஆச்சரியத்தையும் அளித்திருந்தது.

இதனால், அவர் மாற்று யோசனைகளின் மாற்றாகவும் விளங்கியிருந்தார். பெருஞ்சமயங்களுக்கு எதிரான இந்திய மாற்று – ‘பெளத்தம்’, என்ற நீரோடையிலிருந்து நெடுஞ்செழியன் விலகியதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன என்று நான் நினைக்கிறேன்.

ஒன்று, பூரண தமிழ்ச் சிந்தனை மரபொன்றை (பெளத்தமும் சமணமும் வேற்றுமொழிச் சிந்தனை மரபுகள்) வரலாற்றிலிருந்து வடிவமைக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்; இரண்டு, அது என்றென்றைக்கும் அதிகாரத்திலிருந்து விலகி இருந்திருக்க வேண்டும் என்றும் நம்பினார்.

அந்த வகையில் ஆசீவகம், எல்லா வகையான மேலாதிக்கத்திலிருந்தும் விலகியே இருந்திருக்கிறது.

வரலாற்றில் அதை எந்த அரசும் ஆதரித்ததற்கான சான்றுகள் இல்லை; அரசு மட்டுமல்ல, வெகுஜனத் தளத்திலிருந்தும் கூட ஆசீவகச் சிந்தனையாளர்கள் விலகியே நின்ற சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன.

பெருஞ்சமயங்களின் சாகரமாக விளங்கும் இந்தியச் சிந்தனை நீரோட்டத்தில் ஆசீவகத்திற்கான மரியாதை, கேலிக்கும் கண்டனத்திற்கும் அவதூறுகளுக்குமானது என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில், நேரடியான ஆசீவகப் பிரதிகள் எவையும் நமக்குக் கிடைப்பதில்லை. ஆசீவகத்திற்கு எதிராக எழுதப்பட்ட கண்டனங்களிலிருந்தும், வசைகளிலிருந்துமே நாம் அதனை ஒருவாறு யூகித்துக் கொள்கிறோம்.

இந்திய சிந்தனை மரபில் ஆசீவகத்திற்கு வழங்கப்படும் இடமும் அந்தஸ்தும், நவீன இந்தியாவில் தமிழகத்திற்கு வழங்கப்படும் இடத்தையும் அந்தஸ்தையும் ஒத்தது என்ற யோசனை நெடுஞ்செழியனின் பிரதியெங்கும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

இச்சூழலில், ஆசீவக ஆய்வுகளில் நெடுஞ்செழியன் முன்வைக்கும் கருதுகோள்கள் மரபை மீறிய, சாகச குணம் கொண்டவை.

உதாரணத்திற்கு, அவர் இந்தியா முழுமைக்கும் கிடைக்கப்பெறாத ஆசீவக நேரடிப் பிரதிகளை தமிழ் சங்க இலக்கியப் பாடல்களில் கண்டறியத் தொடங்குகிறார்.

ஏராளமான புறநானூற்றுப் பாடல்களுக்கு அவர் அளிக்கும் விளக்கங்கள் அவற்றை ஆசீவகச் சிந்தனைப் போக்கில் வாசிக்கத் தூண்டுகின்றன.

உதாரணத்திற்கு, பகுத காச்சாயனர் என்ற ஆசீவகச் சிந்தனையாளரை புறநானூற்றுப் பாடலாசிரியர் பஃகுடுக்கை நன்கணியாராக அவர் சித்தரிக்கத் தொடங்குவது புதிய வெளிச்சத்தை அளிக்கக்கூடியது.

அதன் தொடர்ச்சியாக, மற்கலி கோசரையும் புஷ்கரையும் பூரணரையும் மருகால்தலையில் வீற்றிருக்கும் அய்யனார் – பூர்ணா – புஷ்கலா தம்பதிகளிடம் கொண்டு வந்து நிறுத்தும் இடம் நம்மைச் சலனப்படுத்துவது.

அந்த வகையில், இந்தியச் சிந்தனை மரபின் ஒடுக்கப்பட்ட அதே நேரம் கலகக் குணம் கொண்ட சிந்தனை மரபாக தமிழை யோசிக்கும் வகையில் அவர் ஆசீவகத்தைக் கையாண்டார் என்பதே உண்மை. அவருக்கு என் பூரண மரியாதையும், அஞ்சலியும்.

– தர்மராஜ் தம்புராஜ்

  • நன்றி :  முகநூல் பதிவு
Comments (0)
Add Comment