‘ப்ளடி பெக்கர்’ – என்ன வகைமை படம் இது?!

ஒரு திரைப்படம் பார்க்கப் போகும் முன்னர், அது என்ன வகைமையில் அமைந்தது என்பதை நோக்குவது சில ரசிகர்களின் வழக்கம். அவர்களுக்குப் பிடித்த வகைமையாக இருக்கும் பட்சத்தில், அதனைக் காண்பார்கள்; இல்லாவிட்டால், அந்தப் படத்தைப் புறக்கணிப்பார்கள்.

சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகைமையில் சில படங்களின் திரைக்கதை ட்ரீட்மெண்ட் அமையும். மிகச்சில படங்கள் என்ன வகைமையில் அமைந்துள்ளதென்று ரசிகர்களுக்கும் தெரியாது.

அரிதாக, சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கும் கூட தெரியாமல் போகும். அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது ‘ப்ளடி பெக்கர்’.

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், அவரது உதவி இயக்குநரான சிவபாலன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி, தெலுங்கு நடிகர் பிருத்விராஜ், சுனில் சுகாதா, டி.எம்.கார்த்திக், பிரியதர்ஷினி ராஜ்குமார், அர்ஷத் உள்ளிட்ட பலரோடு ராதாரவி கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

வகைமையைக் கண்டறிவதில் குழப்பம் ஏற்படும் அளவுக்கு ‘ப்ளடி பெக்கர்’ எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது?

ஒரு பிச்சைக்காரனின் கதை!

பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார் ஒரு நபர் (கவின்). அவர் ஒரு சிறுவனை வளர்த்து வருகிறார்.

மாற்றுத்திறனாளி போல நடித்து ஏமாற்றும் அந்தப் பிச்சைக்காரரைக் கண்டாலே அந்தச் சிறுவனுக்குக் கோபம் வருகிறது.

‘ஏமாற்றிப் பிழைப்பது சரியா’ என்று கொதிப்பு ஏறுகிறது.

ஒருநாள் அந்தச் சிறுவனுக்கு ‘பெப்பே’ காட்டிவிட்டு, ஒரு வண்டியில் ஏறுகிறார் அந்தப் பிச்சைக்காரர்.

அந்த வாகனம் நேராக ஒரு பங்களா வாசலில் நிற்கிறது.

அதனைக் கண்டதுமே, அந்தப் பிச்சைக்காரர் அதிர்கிறார். அங்கு தரப்படும் விருந்து சாப்பாட்டைத் தாண்டி, அந்த வீடு மட்டுமே அவர் கவனத்தை இழுக்கிறது.

அந்த வீட்டுக்குள் நுழைகிறார் அந்தப் பிச்சைக்காரர். அங்கு ஒரு பெண்ணும் ஒரு ஆணும் இருக்கின்றனர். இருவருமே அவரைக் கவனிக்கவில்லை.

அங்கிருந்து வெளியேறலாம் என்று அவர் நினைத்தாலும், அதனைச் செய்ய முடிவதில்லை. காரணம், தானியங்கி பூட்டு பொருத்தப்பட்ட கதவைத் திறக்க முடிவதில்லை.

அங்கிருப்பதை உண்டு, சொகுசு மெத்தையில் தூங்கும் அந்தப் பிச்சைக்காரர், நள்ளிரவில் கண் விழிக்கிறார். ஏதோ சத்தம் எழுவதைக் காண்கிறார்.

கதவு சாவித்துவாரம் வழியே அந்த ஆண் எதையோ பார்ப்பதைக் காண்கிறார். அந்தப் பிச்சைக்காரர் அந்த கதவருகே சென்று, உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்கிறார். அந்த ஆணின் சடலத்தை அந்தப் பெண் வெட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது, அந்த ஆண் (ரெடின் கிங்ஸ்லி) பிச்சைக்காரர் அருகே நிற்கிறார். ‘ஆவியான நான் உன் கண்ணுக்கு தெரிகிறேனா’ என்கிறார். அவ்வளவுதான்.

அருகிலிருக்கும் பொருட்களைத் தட்டிவிட்டுவிட்டு, தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று அந்தப் பிச்சைக்காரர் ஓடுகிறார். மாடிப்படிக்கட்டுகளில் உருண்டு கீழே விழுந்து மயக்கமடைகிறார்.

பிச்சைக்காரர் கண் விழிக்கையில், எதிரே அந்தப் பெண் மட்டுமல்லாமல் இன்னொரு நபரும் இருக்கிறார். ஒரு வயதான பெண்ணும் இளைஞரும் அங்கு வருகின்றனர்.

அந்த பங்களாவின் வாரிசு நீதான். அப்படி நீ நடிக்க வேண்டும்’ என்று அந்தப் பிச்சைக்காரரை மிரட்டுகின்றனர் அந்த நால்வர். ஏனென்றால், உண்மையான வாரிசுதான் அந்த வீட்டில் ஆவியாகத் திரிகிறார்.

வேறு வழியில்லாமல் அதனைச் செய்யத் தயாராகிறார் அந்தப் பிச்சைக்காரர்.

அந்த பங்களாவுக்குச் சொந்தக்காரர் மறைந்த நடிகர் சந்திரபோஸ் (ராதாரவி).

அவருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். அவர்களனைவருக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர்.

சந்திரபோஸ் மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்கள் அனைத்தும் அந்த நால்வருக்குச் சென்று சேரும் வகையில் அவர் உயில் எழுதி வைக்கவில்லை.

அவருக்கு முறை தவறிப் பிறந்த குழந்தைக்குத்தான் அந்த சொத்துக்கள் சென்று சேரும் என்று உயிலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த நபர் தான் ஏற்கனவே கொலையாகியிருக்கிறார். சந்திரபோஸின் வாரிசுகளில் மூத்த மகள் குடும்பம் தான், அந்த பிச்சைக்காரரை நடிக்குமாறு மிரட்டுகிறது.

அந்தப் பிச்சைக்காரர் அந்த குடும்பத்தினர் முன்னே நின்று ‘நான் தான் இந்த சொத்துகளுக்கு வாரிசு’ என்கிறார். அடுத்த நொடியே, அவர்கள் அனைவரும் அவரைக் கொல்லத் தயாராகின்றனர்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மட்டும் பிச்சைக்காரருக்கு ஆதரவாக இருக்கிறார். ஆவியாகத் திரியும் அந்த உண்மையான வாரிசும் உதவத் தயாராக இருக்கிறது.

அதையும் மீறி, வெறி கொண்ட மிருகங்களாக அந்தப் பிச்சைக்காரரை அக்குடும்பத்தினர் துரத்துகின்றனர்.

அப்போது, அவர்களில் சிலர் மரணமடைகின்றனர். அதனைச் செய்தது அந்தப் பிச்சைக்காரர் இல்லை. ஆனால், அக்குடும்பத்தினர் அவரைத்தான் சந்தேகிக்கின்றனர்.

அவர்களது பிடியில் இருந்து அந்த பிச்சைக்காரர் உயிரோடு தப்பித்தாரா, இல்லையா என்று சொல்கிறது ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் மீதி.

ஹாரர், காமெடி, த்ரில்லர், ஆக்‌ஷன், பேமிலி, மிஸ்டரி என்று பல வகைமைக்கான காட்சிகள் இதன் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கின்றன.

பல்வேறு வகைமையில் அமைந்தாலும், தனது திரைக்கதை ட்ரீட்மெண்ட் வழியே புதுவிதமான காட்சியக்கத்தைத் தருகிறது ‘ப்ளடி பெக்கர்’. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

கலவையான உணர்வெழுச்சி!

கவின் இதில் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில், சில காட்சிகளில் குளோஸ்அப்பில் தெரிகிறது அவரது முகம்.

இரண்டாம் பாதியில் அழுகையை வெளிப்படுத்துகிற ஷாட் ஒன்றில் மூக்கில் நீர் ஒழுகும்போதும் வசனம் பேசியிருக்கும் விதம், அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

ரெடின் கிங்ஸ்லி இப்படம் முழுக்க வருகிறார். ஆங்காங்கே காமெடி ஒன்லைனர்களை விசிறி எறிகிறார். ஒரு காட்சியில் அவர் மனம் கலங்கி அழுகிறார். அது ரசிகர்களுக்குப் புதிதாக இருக்கும்.

ராதாரவி ஒரேயொரு காட்சியில் வந்தாலும், மற்றனைவரையும் திகைக்கச் செய்யும் வகையில் நடித்துவிட்டுச் செல்கிறார்.

மிகப்பெரிய நடிகரின் வாரிசுகளாக, இதில் நான்கு பேர் நடித்துள்ளனர். அவர்களில் பிருத்விராஜ், பிரியதர்ஷினி ராஜ்குமார் இருவரும் தெரிந்த முகங்கள். பிரியதர்சினியின் கணவராக டி.எம்.கார்த்திக் நடித்திருக்கிறார்.

எண்பதுகளில் நாயகியாக நடித்த சலீமா, இதில் மூத்த வாரிசாக வருகிறார். இன்னொரு மகனாக வரும் நபரும் மிரட்டல் நடிப்பைத் தந்திருக்கிறார்.

இந்த நால்வரது வாரிசுகளாக அர்ஷத், அக்‌ஷயா ஹரிஹரன் உள்ளிட்டோருடன் அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபந்துலா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

அனைவருமே நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. சில இடங்களில் ‘ஓவர் ஆக்டிங்’ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

சுனில் சுகாதா இதில் வில்லனாக வருகிறார். போர்தொழில் படத்தில் மிரட்டிய அவர், இதிலும் அப்படியொரு பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

அனைவரையும் தாண்டி கவின் ஜோடியாக வரும் மெரின் பிலிப் சட்டென்று நம் மனதைக் கவர்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷை நினைவூட்டும் அவரது தோற்றம், அடுத்தடுத்து பல படங்களில் அவரைக் காணச் செய்யலாம்.

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவில் முதல் 20 நிமிடக் காட்சிகள் பெரிய ஈர்ப்பைத் தரவில்லை. ஆனால், பங்களாவுக்கு கதை நகர்ந்தபின் கேமிராவில் பரபரப்பு தொற்றிக்கொண்ட ‘எபெக்டை’ தந்திருக்கிறது அவரது பங்களிப்பு.

படத்தொகுப்பாளர் நிர்மல் திரைக்கதையின் தொடக்கத்தில் துண்டு துண்டாகச் சில காட்சிகளைக் காட்டுகிறார்.

பின்னால் வரும் எந்தக் காட்சியோடு அவை சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்வையாளர்களே உணர்ந்துகொள்ளட்டும் என்று விட்டிருக்கிறார்.

அந்த உத்தி நம்மைக் கொஞ்சலில் ‘சுற்றலில்’ விடுகிறது.

மற்றபடி, பரபரவென்று கதை நகர அவர் உதவியிருப்பது சிறப்பு.

கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை இரு வேறுபட்ட உலகங்களை இதில் காட்ட முயற்சித்திருக்கிறார்.

பிளாட்பார்மில் வாழும் இரண்டு பேரைக் காட்டும்போது ‘செயற்கைத்தனம்’ தெரிந்தாலும், செல்வச் செழிப்புமிக்க அந்த பங்களாவைக் காட்டுகையில் அது தெரிவதில்லை.

திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப, பின்பாதியில் பரபரப்பு தொற்றும் இசையைத் தந்திருக்கிறது இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பங்களிப்பு. பாடல்கள் பெரிதாக ஈர்ப்பைத் தரவில்லை.

சுரேன் ஜி, அழகியகூத்தனின் ஒலி வடிவமைப்பு இக்கதையில் ஒரு அங்கமாக இருக்கிறது.

ஆக்‌ஷன் சந்தோஷ், மெட்ரோ மகேஷின் சண்டைக்காட்சிகள் வித்தியாசமானதொரு காட்சியனுபவத்தைத் தருகின்றன.

இன்னும் விஎஃப்எக்ஸ், டிஐ, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு என்று பல தொழில்நுட்பங்கள் கதையோட்டத்தோடு நாம் ஒன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சிவபாலன் முத்துகுமார்.

‘இந்த வகைமையில் தான் இப்படம் அமைந்துள்ளது’ என்று சொல்ல முடியாதவாறு, ஒரே கதையில் பல உணர்வுகளின் எழுச்சி நிலையைக் காட்டும் வகையில் ஒரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார்.

அந்த உணர்வு நிலைகளின் உயர்வையும் தாழ்வையும் ஒரு இசைக்கோர்வை போல அமைக்காமல் விட்டிருப்பது தான், கலவையான விமர்சனங்கள் எழக் காரணமாகியிருக்கிறது.

போலவே, திரைக்கதையில் லாஜிக் மீறல்களைத் தேடினால் கை நிறைய அள்ள முடியும். அதுவே, இப்படத்தைப் பார்ப்பதா வேண்டாமா என்ற யோசனைச் சுழலுக்குள் ரசிகர்களைத் தள்ளுகிறது.

அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கலாம்!

இதற்கு மேல் சொல்லப்படுகிற விஷயங்கள் ‘ஸ்பாய்லர் ரகம்’ என்பதால், அது வேண்டாமே என்பவர்கள் இந்த வரியோடு நிறுத்திக் கொள்ளலாம்.

திரைக்கதையின் தொடக்கத்தில், மூன்று வெவ்வேறு இடங்களில் குழந்தைகளின் இருப்பு காட்டப்படுகிறது.

அவற்றை அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தால், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைந்திருக்கலாம்.

ஆனால், அதனைச் செய்யாமல் விட்டது சிலரைத் தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்திருக்கிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம்.

கிளைமேக்ஸ் திருப்பம் நாம் எதிர்பார்த்த ஒன்றாகவே உள்ளது. அக்காட்சியை இன்னும் ‘அழுத்தமாக’ டாடா படத்தின் முடிவு போல அமைத்திருக்கலாம்.

‘நான் ஒரு பாவம் பண்ணிட்டேன்’ என்று பங்களா வாரிசுகளில் ஒருவர் அந்த பிச்சைக்காரருக்கு உதவ முன்வருவதாக ஒரு காட்சி வரும்.

அந்த பாவம் என்ன என்பது பின்னர் திரைக்கதையில் சொல்லப்படும். அது எதிர்பார்த்தது தான் என்றபோதும், அந்த காட்சி நன்றாகவே திரையில் வெளிப்பட்டிருக்கிறது.

ராதாரவி வரும் காட்சி நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் இருந்த நேர்த்தி சில காட்சிகளில் இல்லை.

குறிப்பாக, வீட்டை விட்டு வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டபிறகு, மீண்டும் நாயகன் அந்த வீட்டுக்குள் நுழைவதாக வருமிடத்தைத் திரைக்கதையில் நன்றாக அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கலாம். அது நிகழவில்லை.

இந்தப் படத்தில் எந்தவொரு காட்சியும் ‘எக்ஸ்ட்ரா’வாக இல்லை. தேவையற்ற பாத்திரம் என்று எதுவுமில்லை. ஆனால், அவற்றை மீறிச் சில இடங்கள் ‘அதீதமாக’த் தெரிகின்றன. அவற்றை ‘ட்ரிம்’ செய்திருக்கலாம்.

நாயகன் முதல் வில்லன் தரப்பு வரை அனைவரையும் ஒரே கோட்டில் நிற்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதனைத் தவிர்த்துவிட்டு, ‘க்ளிஷே’ என்றபோதும், சில பாத்திரங்களுக்குச் சில சலுகைகளை வழங்கியிருக்கலாம். அதனைச் செய்யவில்லை.

ஒரு கட்டத்தில், ‘பார்வையாளர்கள் அனைவரையும் சைக்கோ கொலையாளிகளாக இப்படம் மாற்றிவிடுமோ’ என்ற கேள்வி எழுகிறது.

‘மனிதநேயம் இல்லா மனிதர்கள்’ என்று தனியாக ஒரு அத்தியாயத்தை நுழைத்து, நல்லவேளையாக அப்படியொரு நிலைக்கு ஆளாக்காமல் காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர்.

முக்கியமாக, கவின் கண்களுக்கு ரெடின் பாத்திரம் ஏன் தெரிகிறது என்பதற்கான விளக்கம் இல்லை. அதிலிருந்தே, திரைக்கதையில் சில காட்சிகள் விடுபட்டிருப்பதை உணர முடிகிறது.

அது போன்ற குறைகளைப் புறந்தள்ளிவிட்டால், ‘ப்ளடி பெக்கர்’ நாம் இதுவரை உணர்ந்திராத வகைமையில் ஒரு படம் பார்த்த திருப்தியைத் தரும். ‘அது ஓகே’ என்பவர்கள் இப்படத்தை ரசித்துக் கொண்டாடுவார்கள்.

– உதயசங்கரன் பாடகலிங்கம்.

#ப்ளடி_பெக்கர்_விமர்சனம் #Bloody_Beggar_Review #இயக்குநர்_சிவபாலன் #Director_Sivabalan #கவின் #Kavin #ரெடின்_கிங்ஸ்லி #Reddin_kingsly #நடிகர்_பிருத்விராஜ் #Actor_Prithviraj #சுனில்_சுகாதா #Sunitha_sugaadha #டிஎம்_கார்த்திக் #TM_Karthick #பிரியதர்ஷினி_ராஜ்குமார் #Priyadharshini_Rajkumar #அர்ஷத் #Arshadh #ராதாரவி #Radharavi

ப்ளடி பெக்கர் விமர்சனம்
Comments (0)
Add Comment