அமரன் – ராணுவ பின்னணியில் ‘கிளாஸ்’ சினிமா!

‘சிவகார்த்திகேயன் நடிச்ச படம்னா குடும்பத்தோட போகலாம்’ என்ற எதிர்பார்ப்பு உருவாகி, கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளாகி விட்டன.

இடைப்பட்ட காலத்தில், அவர் நடிப்பில் வெளியான படங்களில் வேலைக்காரன், ஹீரோ, கனா போன்ற சிலவற்றில் மட்டுமே அவர் சீரியசான பாத்திரங்களை ஏற்றிருக்கிறார்.

ஆனால், இதர படங்களைப் போன்று அவை பெருவெற்றியைப் பெறவில்லை. அந்த ஒரு விஷயமே, மறைந்த முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக் கதையான ‘அமரன்’னில் அவர் நடித்திருப்பது குறித்துக் கேள்விகளை எழுப்பியது.

தற்போது, அந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

எப்படி இருக்கிறது ‘அமரன்’?

வழக்கமான பார்முலாவில் இருந்து விலகி, ஒரு உண்மைக்கதையில் எந்தளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன்?

ராணுவப் பின்னணியில் கதை!

ராணுவத்தில் மேஜர் ஆக உயர்வு பெற்ற முகுந்த் வரதராஜனின் (சிவகார்த்திகேயன்) மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் (சாய் பல்லவி) பார்வையில் ‘அமரன்’ திரைக்கதை விரிகிறது.

காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள படைகளில் ஒன்றான 44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் பணியாற்றியவர் முகுந்த். மனதில் தைரியத்தை மட்டுமல்லாமல் தெளிவான சிந்தனையையும் கொண்டவர்.

முகுந்த் கல்லூரியில் பயில்கையில், அவருக்கு அறிமுகமானவர் இந்து. முதல் பார்வையிலேயே, அவருக்கு முகுந்தைப் பிடித்துப் போகிறது.

கூச்ச சுபாவம் கொண்ட இந்து, மெல்லத் தைரியமான பெண்ணாக மாறுகிறார். அதற்குக் காரணம் முகுந்த். அதனால், அவரது மனதை முழுமையாக ஆக்கிரமிக்கிறார். இருவரது நட்பும் மெல்ல காதலாக மலர்கிறது.

அந்த விஷயத்தைத் தனது பெற்றோர், சகோதரிகளிடத்தில் பட்டென்று சொல்லிவிடுகிறார் முகுந்த்.

ஆனால், அதே போன்று கேரளாவிலுள்ள தனது பெற்றோர், சகோதரர்களிடத்தில் இந்துவால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெற்றோரின் விருப்பத்தை மீறி, முகுந்த் உடன் பழகுகிறார் இந்து.

அந்த காலகட்டத்தில், ராணுவ இளநிலை அதிகாரிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெறுகிறார் முகுந்த். 49 வார காலப் பயிற்சியை முடித்து, ஜம்மு காஷ்மீரில் பணியில் சேர்கிறார். லெப்டினண்ட், கேப்டன், மேஜர் என்று அவருக்குப் பல பதவி உயர்வுகள் கிடைக்கின்றன.

இடைப்பட்ட காலத்தில் இந்து உடனான காதலை மறுதலிக்கிறார். பிறகு, அவர் வீட்டுக்குச் சென்று பெண் கேட்கிறார். பதிவு அலுவலகம், கோயில், தேவாலயம் என்று மூன்று இடங்களில் இந்து உடன் அவரது திருமணம் நடந்தேறுகிறது. அந்த தம்பதிக்குப் பெண் குழந்தை பிறக்கிறது.

பெற்றோர், மனைவி, மகளின் அன்பை முழுமையாக அனுபவிக்க முடியாமல், நாட்டைக் காக்கும் கடமை முகுந்தைத் துரத்துகிறது.

தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை, ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் சுற்றிவளைத்துக் கொல்கின்றனர். அதற்குப் பழி வாங்க, உளவுத்தகவல் கொடுத்தவரைக் கொலை செய்கின்றனர் தீவிரவாத அமைப்பினர்.

அந்தச் செயல்பாட்டின் பின்னணியில் இருந்தவரைத் தேடிக் கண்டுபிடித்து கொல்லத் துடிக்கிறார் முகுந்த்.

அதற்கான நேரம் கனியும் சூழலில் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது இப்படத்தின் கிளைமேக்ஸ்.

பெரும்பாலான காட்சிகள் எல்லைப் பகுதிகளில் நிகழ்வதாகவே காட்டப்பட்டுள்ளன.

ராணுவப் பின்னணியில் அமைந்த படங்களில் நகைச்சுவை, சோகம், சென்டிமெண்ட், துரோகம் உள்ளிட்ட உணர்வுகளைக் கொண்ட காட்சிகளைச் சில படங்களில் பார்த்திருப்போம். ’அமரன்’னில் அது போன்ற அபத்தங்கள் அறவே இல்லை.

அதேநேரத்தில், பார்வையாளர்கள் ‘போரடிக்கிறது’ என்று சொல்லாத வகையில் ரொம்பவே சுவாரஸ்யமாகத் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

சில காட்சிகள் ‘க்ளிஷே’வாக தெரிந்தாலும், தனது தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து காட்சியாக்கம் செய்திருக்கும் விதம் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.

வியத்தகு உழைப்பு!

இது ஒரு உண்மைக் கதை. அதற்கேற்ப, பெரும்பாலான காட்சிகள் திரையில் கற்பனையாகத் தெரிவதில்லை. அதற்கான முன்கள உழைப்பை ‘அமரன்’ குழுவினர் மேற்கொண்டிருக்கின்றனர்.

கதை, காட்சியமைப்பு, கள வடிவமைப்பு, நடிப்புக் கலைஞர்களின் உடல்மொழி, ஆவணப்படமாகத் தோற்றமளிக்காதவாறு திரைக்கதையை வடிவமைத்திருக்கும் விதம் என்று பல விஷயங்களைக் கைக்கொண்டிருக்கின்றனர்.

நடிப்பைப் பொறுத்தவரை, சிவகார்த்திகேயன் பட வரிசையில் ‘அமரன்’ ஒரு தனித்துவமான படம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

போஸ்டர் வடிவமைப்பில் அவரை ‘முகுந்த்’ ஆக ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டியவர்கள் கூட, படத்தின் காட்சிகளைக் கண்டதும் முடிவை மாற்றிக் கொள்வார்கள். அது, அவரது நடிப்புக்குக் கிடைக்கிற வெற்றி.

சாய் பல்லவி இதில் இந்துவாக நடித்திருக்கிறார். திரைக்கதை அவரது பார்வையில் விரிவதோடு, அந்த பாத்திரத்திற்குத் தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம் அளப்பரியதாக உள்ளது. அதனை உணர்ந்து ‘சிக்சர்’ அடித்திருக்கிறார் சாய் பல்லவி.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவருமே முகுந்த் – இந்துவைப் போன்று உருவ ஒற்றுமை கொண்டவர்கள் இல்லை. ஆனால், அவர்களைப் போன்ற தலைமுடி அமைப்பு, ஆடை அணியும் விதம், உடல்மொழி உள்ளிட்டவற்றால் அக்குறையை ஈடு செய்திருக்கின்றனர்.

இவர்கள் தவிர்த்து விக்ரம் ஆக நடித்துள்ள புவன் அரோரா, அமித் சிங் ஆக வரும் ராகுல் போஸ், முகுந்தின் தந்தையாக நடித்தவர், தாயாக வரும் கீதா கைலாசம், ராணுவ வீரர்களாக நடித்தவர்கள், இந்துவின் தந்தையாக நடித்தவர், ‘பிரேமலு’ ஷ்யாம் மோகன், சீரியல் நடிகர் ஸ்ரீ, லல்லு என்று பலர் நம் மனம் கவரும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் சி.ஹெச். சாய் இதில் அறிமுகமாகியிருக்கிறார்.

இப்படத்தில் அவர் பதிவு செய்துள்ள ஒவ்வொரு பிரேமும் பொக்கிஷம். அதுவும் பல காட்சிகளில் எக்கச்சக்கமான ஷாட்கள் இடம்பெற்றிருக்கின்றன.

படத்தொகுப்பாளர் கலைவாணன் இப்படத்தில் முன்பின்னாக நகரும் திரைக்கதையின் ஊடே மையப்பாத்திரங்களின் மனவோட்டத்தைக் கடத்தியதில் வெற்றிவாகை சூடியிருக்கிறார்.

இன்னும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர், சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ், ஸ்டீபன் ரிச்டர், ஒலி வடிவமைப்பைக் கையாண்ட ஸிங்க் சினிமா என்று பல கலைஞர்களின் உழைப்பு திரையை விட்டு நம் பார்வை அகலாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் ஹே மின்னலே, வெண்ணிலவு சாரல், உயிரே பாடல்கள் வழியே சட்டென்று மனதுக்குள் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்.

அவர் தந்திருக்கும் பின்னணி இசை, பல காட்சிகளில் கேமிராவின் வேகத்தோடு இணைந்து போட்டி போட்டிருக்கிறது. படத்தின் முக்கிய யுஎஸ்பியாக அது திகழ்கிறது.

படம் முழுக்க ஒரேவிதமான வண்ணக் கலவையை நம் கண்கள் எதிர்கொள்கின்றன. டிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் மட்டுமே அப்படியொரு விளைவு சாத்தியப்படும்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இந்த படத்தில் பிரமாண்டம் என்பதை பிரேம்களில் காட்டவில்லை. மாறாக, காட்சிகளின் தன்மை ஊடே அதனை நமக்குக் கடத்துகிறார்.

மிகப்பெரிய மாற்றத்தை, தொடர் செயல்பாடுகளைக் காட்டுகிற இடங்களில் ‘மாண்டேஜ்’ போன்று பல ஷாட்களை அடுத்தடுத்துக் காண்பிக்கிறார். அந்த அபார உழைப்பு வியக்க வைப்பதாக இருக்கிறது.

அதேநேரத்தில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமெண்ட் காட்சிகள் தனித்தனி துண்டுகளாகத் தெரியாமல், ஒரு மாலையில் கோர்க்கப்பட்ட வெவ்வேறு மலர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.

மிகப்பெரிய மெனக்கெடல் வழியே அதனைச் சாதித்திருப்பது ‘அமரன்’னின் ப்ளஸ்.

சில நிறைகள்!

வழக்கமான கமர்ஷியல் படங்களில் எந்தத் தேவையும் அற்று வன்முறைக் காட்சிகளை நிரப்புகிற சூழலில், ராணுவப் பின்னணியில் அமைந்த ‘அமரன்’னில் முகம் சுளிக்க வைக்கிற சித்தரிப்பு இல்லை.

சிவகார்த்திகேயன் படங்களுக்கு வரும் ‘பேமிலி ஆடியன்ஸை’ மனதில் வைத்து இந்த மாற்றத்தை அமல்படுத்தியிருக்கலாம். ஆனால், அது படத்தின் உள்ளடக்கத்தில், கதை சொல்லலில் ஒரு குறையாகத் தெரியவில்லை.

முகுந்த் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ் குடும்பத்தினர், அவர்களைச் சார்ந்தவர்கள் வருத்தப்படுகிற வகையில் எந்தக் காட்சியும் இல்லை.

தம்பதியரின் அந்தரங்கத்தைக் காட்டுகிற காட்சிகளில் கூட எல்லை மீறல் இல்லை. கற்பனை என்ற பெயரில், அபத்தங்களைச் சேர்க்கவில்லை.

மிக முக்கியமாக, ராணுவப் பின்னணியில் சொல்லப்படுகிற கதையில் அதன் செயல்பாடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது அருமை. அதுவே, அப்பின்னணியில் ஒரு ‘கிளாஸ் சினிமா’ என்ற எண்ணத்திற்கு வலு சேர்க்கிறது.

ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் மீசை, தாடி வளர்க்கலாம் என்பது முதல் தேடுதல் வேட்டையின்போது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சுற்றி வளைக்கும் ‘ஆபரேஷன்’கள் வரை பல புதிய தகவல்கள் இடம்பெற்றிருப்பது ‘செறிவான உள்ளடக்கம்’ இருப்பதைக் காட்டுகிறது.

படத்தின் முடிவு நன்றாகத் தெரிந்தபிறகும், பார்வையாளர்கள் அதனைக் காணத் தயாராக இருப்பது சாதாரண விஷயமில்லை.

அதுவும் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி போன்ற நாயகன் நாயகி இடம்பெற்ற படமொன்றில் அதனைச் சாதிப்பது இன்னும் கடினம். ஆனால், சிறப்பான காட்சியாக்கத்தின் வழியே அதனைச் சாதித்திருக்கிறது ‘அமரன்’.

அதற்குக் காரணமாக, நாயகன் மற்றும் நாயகி மீதான ரசிகர்களின் அபிமானத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

அந்த புத்திசாலித்தனமும் இப்படத்தின் நிறைகளில் ஒன்றாக உள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ரசிகர்களைக் கவர்கிற படமாகவும் இது நிச்சயம் இருக்கும்.

போலவே, இந்தி ரசிகர்களையும் இது ஈர்க்கும். அதற்காக, இப்படத்தில் கதை நிகழும் களங்கள் பொதுவானதாக அமைக்கப்படவில்லை.

அந்தந்த பகுதிகளின் கலை, கலாசார அம்சங்களைத் தாண்டி ‘ராணுவத்தினரின் தியாகம்’ என்ற ஒற்றை அம்சம் அனைவரையும் ஈர்க்கும்.

அந்த வகையில், இப்படத்தின் இடைவேளைக் காட்சியும் கிளைமேக்ஸும் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்.

இப்படத்தில் நிச்சயம் குறைகள் இருக்கும். அதனை நாம் தேடிக் கண்டறிய வேண்டும். தியேட்டரில் அதற்கான வாய்ப்புகளை ‘அமரன்’ படக்குழு தரவில்லை. அதற்காகவே, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் குழுவினரின் உழைப்பைப் பாராட்டலாம்!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
அமரன் விமர்சனம்
Comments (0)
Add Comment