தாயைப் போன்று அரவணைக்கும் என் கல்லூரி!

பள்ளிப் படிப்பு முடிந்துவிட்டது. அடுத்து ஒரு நல்ல கல்லூரியில் அப்பா, அம்மா சேர்த்து விடுவார்கள்; கல்லூரியில் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்; மகிழ்ச்சியாக நாட்களைக் கடந்து விடலாம் என்று இருக்கும் மாணவர்கள் மத்தியில், ஒரு சிலருக்கு கல்லூரியின் முகப்பு வாயிலில் கால் வைப்பதே ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும்.

2014-ம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஆசை ஆசையாகக் கல்லூரிக்குச் செல்வேன்; சிறந்த நடன ஆசிரியர் ஆக வருவேன் என்று காத்துக்கொண்டிருந்த சமயத்தில் மிகப்பெரிய புயல், வாழ்க்கையைத் திருப்பிப் போட்டுவிட்டது.

இனி கல்லூரிப் படிப்பு இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. வாழ்வில் பல இன்னல்களைக் கடந்து, ஏன் வாழ்கிறோம், எதற்காக வாழ வேண்டும் என்றுகூட எண்ணினேன்.

சட்டென்று மனதில் சிறு உறுத்தல். நான் ஏன் பிறந்தேன், என் பிறப்பின் காரணம் என்ன? என்ற கேள்வி என்னை மறுபடியும் வாழ்க்கைப் பாதைக்குக் கூட்டி வந்தது.

அதன்பிறகு, புத்துணர்ச்சியோடு மீண்டும் ஒரு புது வாழ்க்கை கிடைத்த உணர்வு. மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும், பிறப்பின் காரணம் ஏதோ ஒன்று இருக்கும். விதிப்படி அந்த செயல் அவன் எங்கு இருந்தாலும் அவர்களிடம் வந்து சேரும் என்பதை உணர்ந்தேன்.

நம் எண்ணங்களுக்கு வலிமை உண்டு என்பதை முன்பே உணர்ந்திருந்தேன். அப்படி ஒரு நிகழ்வு என் வாழ்வில் மீண்டும் நிகழ்ந்தது. எனக்கு யாருமே இல்லை என்ற வெறுமை மனநிலையில் இருந்த நேரம், நிச்சயம் மனதிற்கு நெருக்கமான ஒரு உறவு வந்து சேரும் என எனக்குத் தோன்றியது.

அந்த சமயத்தில் தான் எனக்கு அறிமுகமானாள் காயத்ரி. யதார்த்தமாக ஒரு காபி கடையில் சந்தித்தோம். சாதாரணமாகத் தொடங்கிய எங்கள் உரையாடல் வாழ்க்கைப் பற்றிய புரிதலைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நீண்டது.

உணர்வுப்பூர்வமான உரையாடலின் தொடர்ச்சியாக, என்னைக் கல்லூரிப் படிப்பைத் தொடரச் சொல்லி உற்சாகப்படுத்தினார்.

நான் சிரித்துக் கொண்டு, இப்போது எந்தக் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைக்கும் என்று கேட்டபோது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாகச் சொன்னாள். நான் நம்பவில்லை.

அடுத்த நாள் கல்லூரியில் இருந்து அழைப்பு. ஒரு நொடி நான் திகைத்துப் போனேன். பேராசிரியர் கவிதா அவர்கள் என்னை கல்லூரிக்கு வாம்மா என்று சொன்னார். அடுத்த கணமே கண்ணீர் மட்டும் தான் என் கண்களில்.

கடுமையான காய்ச்சல் என்ன செய்வது என்று புரியவில்லை. இருந்தாலும் எனக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை நான் ஒரு போதும் தவறவிட மாட்டேன் என்று எண்ணி என்னுடன் வேலை செய்து கொண்டிருந்த சக நண்பனின் உதவியோடு கல்லூரிக்கு முதல்முறை வந்து காலடி எடுத்து வைத்தேன்.

அடுத்த நிமிடம் இனம்புரியாத ஒரு பலம் என்னிடம் வந்ததைப்போல் ஒரு உணர்வு. இயற்கை அழகில் மிகப் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் என் கல்லூரியைப் பார்க்கும்போது எனக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

இந்தக் கல்லூரி உருவாகக் காரணமாக இருந்த அன்னை ஜானகி அம்மையார் அவர்கள், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரையைப் போலவே, பலரை வாழ வைத்திருக்கிறார். வாழ்ந்து மறைந்தபோதும் அவரால் பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜானகி அம்மையாரின் ஆசியினால் ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி கற்றுவரும் இந்தக் கல்லூரியில் நானும் ஒரு மாணவியாக இருந்து கல்வி கற்பதைப் பெரும் பேராக உணர்கிறேன்.

நான் முதல் நாள் கல்லூரிக்கு வந்த பொழுதே, எனக்கு என் கல்லூரி, கல்வி என்ற ஒன்றைத் தாண்டி நல்ல மனிதர்களின் அன்பு, அரவணைப்பு, உணவு என்று தந்து என்னை மகிழ்ச்சியில் உறையச் செய்தது. எந்த மாணவிக்கும் இல்லாத சிறப்பை என் கல்லூரி எனக்குக் கொடுத்தது.

அது மட்டுமல்ல, என் சூழ்நிலையைப் புரிந்து, எனக்கு உதவி செய்ய என் கல்லூரியின் தலைவர், முனைவர் குமார் ராஜேந்திரன் ஐயா அவர்கள் எனக்கான கல்லூரிப் படிப்புக்கான உதவியை சிரித்த முகத்தோடு செய்தார்.

அது மட்டும் அல்ல, மேலும் பல உதவிகளை எனக்கு பலர் மூலமாக செய்து உதவினார். அவர் எனக்கு மட்டும் என்று இல்லை, என்னைப் போன்ற எத்தனையோ மனிதருக்கு உதவிகள் செய்து வருகிறார். அவருக்கு நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் மிகை ஆகாது.

இந்தக் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைப்பதற்கு பேராசிரியர் கோதை அவர்கள் பெரிதும் உதவி செய்து இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி நான் கட்டாயம் சொல்லி ஆக வேண்டும் எனக்காக பலமுறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்று பேசி என் சார்பான அனைத்து வேலைகளையும் செய்து தந்து இருக்கிறார்கள்.

நான் காரணம் கேட்டபோது, நீ மறுபடியும் படித்து நல்ல உயர்வான நிலைமைக்கு வரவேண்டும். அது மட்டும் தான் எனக்கு வேண்டும் என்று சொன்னார்கள்.

என்னைக் கல்லூரியில் பார்க்கவில்லை என்றால் உடனே போன் செய்து விசாரிப்பார்கள். இவர்களுக்கு நான் மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இவர்கள் மட்டும் அல்ல, கல்லூரியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் என் மீது அன்பும் அரவணைப்பும் செலுத்துவார்கள்.

நான் எப்போது சென்றாலும் ஒரு குழந்தையை எப்படி அன்பாக அரவணைத்து உபசரிப்பார்களோ, அதுபோல எனக்கு ஏதும் சாப்பிடக் கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துவார்கள்.

என்னுடைய நடனத் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் எனக்கு அன்பும், மதிப்பும் செலுத்துவதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.

ஏன், இந்தக் கல்லூரியை சுத்தம் செய்யும் வயதான அம்மாமார்கள் அனைவரும் என்னை கண்டால் புன்னகை செய்து அன்பாகப் பேசுவார்கள்.

இவை அனைத்தையும் தாண்டி என் கல்லூரி எனக்கு ஒரு  ‘தாய்’க் குடும்பத்தைத் தந்திருக்கிறது என்பது எனக்கு பேரானந்தம்.

நான் கல்லூரிக்கு வராத சந்தர்ப்பத்தில்கூட ஒரு நல்ல உணவு கொண்டு வந்தால், உடனே  “வந்து சாப்பிட்டுப் போம்மா” என்று என்னை அழைப்பார்கள். இத்தனை நன்மைகளை எனக்கு என் கல்லூரி தந்திருக்கிறது என்று நான் உணரும்போது உள்ளம் பேரானந்தம் அடைகிறது.

இவை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போக முடியும். என்னை வாழ வைக்கும் என் அன்புக் கல்லூரிக்கு இந்த மாணவியின் சிரம் தாழ்த்திய நன்றிகள்.

வாழ்க தமிழ்நாடு.. வளர்க என் அன்புமயமான கல்லூரி (எம்ஜிஆர் ஜானகி கல்லூரி)… நான் கல்லூரியைத் தெரிவு செய்யவில்லை. கல்லூரி என்னைத் தெரிவு செய்திருக்கிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே.

– தனுஷா

#எம்ஜிஆர்_ஜானகி_கல்லூரி #ஆசிரியர்கள் #mgr_janaki_college_arts_and_science_for_women #mgr_college #mgr_janaki_college #janaki_mgr # #teachers #students #எம்ஜிஆர்_ஜானகி_கல்லூரி #mgr_janaki_college #Dr_MGR_Janaki_College_of_Arts_and_Science_for_Women #Dr_MGR #MGR #Janaki #எம்ஜிஆர்_ஜானகி #டாக்டர்_எம்ஜிஆர்_ஜானகி_மகளிர்_கலை_மற்றும்_அறிவியல்_கல்லூரி #சத்தியபாமா_எம்ஜிஆர்_மாளிகை #_sathyabama_mgr_maaligai #mgr_janaki_college #ஜானகி #எம்ஜிஆர் #டாக்டர்_எம்ஜிஆர்_ஜானகி #டாக்டர்_எம்ஜிஆர்_ஜானகி_கல்லூரி #ஜானகி_எம்ஜிஆர்_கல்லூரி

Comments (0)
Add Comment