‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற புத்தகத்தில் தன்னைப் பற்றி கவிஞர் வாலி இப்படிச் சொல்கிறார்.
“என் வாழ்வும், வளமும் பிறரது வாழ்த்துகளால் தான் நான் பெற்றேனே தவிர, என் திறமை, புலமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
அதனால் தான் எவரேனும் என்னை வாழ்த்தினால் என் மனம் குதலை மொழி பேசும் மதலை போலக் குதூகலிக்கிறது.
என்னுடைய சினிமாத் துறையில், பிற கவிஞர்களின் வருகைப் பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை..
உண்மையைச் சொல்லப் போனால், அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே கிடையாது.
காரணம், இன்னொரு கவிஞன் வந்து என் இடத்தைப் பிடித்துக் கொண்டு விடுவான் என்கிற அற்பச் சிந்தனை எல்லாம் என் மனத்தில் அரும்பியதில்லை.
எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை;
எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான் – நான் யார் குறுக்கே புகுந்துவிடக் கூடாது என்று சொல்ல?
அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்”