இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று உலகம் முழுக்கப் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழும் மண்ணில் தமிழ் கலை, கலாசாரத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், திரைப்படத் தயாரிப்பும் ஒன்றாக இருந்து வருகிறது.
குறிப்பாக, இலங்கையில் இருந்து அவ்வப்போது தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் அவை திரையிடப்படுவது மிகவும் அரிது.
அந்த வகையில், தான் இயக்கிய ‘மண்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் புதியவன் ராசையா தந்திருக்கும் திரைப்படமே ‘ஒற்றை பனைமரம்’.
2009 போருக்குப் பிறகு, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை எவ்வாறாக உள்ளது என்று கூறும் வகையில் இப்படம் இருப்பதாகச் சொன்னது படக்குழு. இதன் ட்ரெய்லரும் கூட, அதையே வெளிக்காட்டியது.
இந்தப் படமும் அதைத்தான் பிரதிபலிக்கிறதா? எப்படி இருக்கிறது இது தரும் திரையனுபவம்?
சிதைந்த வாழ்வு!
அப்படித் தனது கர்ப்பிணி மனைவியை இழந்த சுந்தரம் (புதியவன் ராசையா), அனாதரவாக நின்ற சிறுமியைத் தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார். அப்பெண் சிறிது மனநல சிதைவுக்குள்ளானவர். எந்நேரமும் ஒரு புல்லாங்குழலைக் கையில் வைத்துக்கொண்டு, அதனை இசைப்பவர்.
தன்னுடன் இணைந்து சண்டையிட்ட கணவனைப் போரில் இழந்தவர் கஸ்தூரி (நவயுகா). அகதிகள் முகாமில் உள்ள ராணுவ அதிகாரிகளால் அவர் அத்துமீறலுக்கு ஆளாகிறார்.
கஸ்தூரியைத் தனது மனைவி என்று சொல்லி அழைத்து வரும் சுந்தரம், அஜாதிகாவுடன் சொந்த ஊரான கிளிநொச்சிக்குத் திரும்புகிறார்.
அங்கு பாலா என்பவரது நண்பரின் உதவியோடு, ஒரு வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டின் உரிமையாளரான சம்பந்தம் பிரிட்டனில் வசிக்கிறார்.
கஸ்தூரி மலையகத்தில் இருந்து வந்தவர் என்பதால், சாதி வேறுபாட்டை வெளிப்படுத்தும் பக்கத்து வீட்டுப் பெண்மணி அவரிடம் இருந்து விலகி நிற்கிறார். விரோதம் பாராட்டுகிறார்.
சுந்தரம் தனக்குத் தெரிந்த இரு சக்கர வாகன ரிப்பேர் வேலைகளைச் செய்து சம்பாதிக்கிறார். ஒருநாள், அவர் அங்குள்ள மக்களைத் திரட்ட முயற்சிப்பதாகச் சொல்லி கைது செய்கிறது காவல் துறை. தனியிடத்தில் அடைத்து வைத்து, அவரை அடித்து சித்திரவதை செய்கின்றனர்.
கையில் காசு இல்லாத காரணத்தால், தெரிந்த நபர்கள் மூலம் வேலைக்குச் செல்ல முயற்சிக்கிறார் கஸ்தூரி. ஆனால், அவர் போரில் ஈடுபட்டவர் என்பதை அறிந்து எவரும் வேலை தருவதாக இல்லை.
இந்தச் சூழலில், வீட்டின் உரிமையாளர் சம்பந்தம் நாடு திரும்புகிறார். தனது வீட்டை விட்டு உடனே வெளியேற வேண்டுமென்று கஸ்தூரியையும் அஜாதிகாவையும் நிர்ப்பந்திக்கிறார்.
அதன்பின் என்ன நடந்தது? போலீசாரால் கைது செய்யப்பட்ட சுந்தரம் என்னவானார் என்று சொல்கிறது ‘ஒற்றை பனைமரம்’ படத்தின் மீதி.
போருக்குப் பிறகு, தமிழ் மக்கள் இலங்கையில் எப்படிப்பட்ட வாழ்வை மேற்கொள்கின்றனர் என்று சொல்கிறது இப்படம்.
அவர்களை ஏய்த்துப் பிழைப்பவர்கள் என்ன செய்கின்றனர்? கணவரை இழந்த பெண்மணிகளைக் குறி வைத்து அலையும் ஒரு கூட்டம் என்னவெல்லாம் செய்கிறது?
அங்குள்ள பகுதிகளில் அந்நியர்களின் குடியேற்றம் எதனால் நிகழ்கிறது? கடந்த காலத்தில் அங்கிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதனால் நிகழ்ந்தது என்ன என்பது உட்படப் பல விஷயங்களைப் பேசுகிறது.
எந்தச் சார்பும் இன்றி, ஒரு சாதாரண மனிதரின் பார்வையில் விரிகிறது இதன் திரைக்கதை. அதனால், எந்த தரப்பும் எளிதாக எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்கிற சுழலுக்குள் சிக்கியுள்ளது இப்படம்.
சில சர்ச்சைகள்!
அகதிகள் முகாம்களில் பெண்களின் மீதான ராணுவத்தினரின் அத்துமீறல்கள், தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம், வடக்குப் பகுதியிலும் தலைநகரிலும் வாழும் தமிழர்கள் மலையகத்தில் வாழ்பவர்கள் மீது காட்டும் சாதீய வேறுபாடு,
கிழக்குப் பகுதியில் இருக்கும் முஸ்லிம் மக்களோடு கொண்டிருந்த முரண் என்று பல விஷயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசியிருக்கிறது ‘ஒற்றை பனைமரம்’.
இயக்குனர் புதியவன் ராசையா தன் சார்பை வெளிப்படுத்தா வண்ணம் இப்படத்தை உருவாக்க முனைந்திருக்கிறார்.
அது, இதனைக் காண வரும் ரசிகர்களிடத்தில் இரு வேறு எண்ண அலைகளை உருவாக்கலாம்.
இப்படத்தில் கைம்பெண்களாக வாழும் தமிழ் பெண்களில் சிலர் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகக் காட்டப்பட்டுள்ளது. பதின்ம வயது மகள் உள்ள ஒரு நடுத்தர வயது தாய் ரகசியமாகப் பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்வதாகவும் இதில் காட்டப்பட்டுள்ளது.
அவ்விஷயங்கள் எல்லாமே முதன்மைப் பெண் பாத்திரத்தை இழிவுபடுத்துவதாக வரும் காட்சியில் பதிலடி கொடுக்கப் பயன்படுத்தப்படுவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவை சர்ச்சைகளை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.
அதேநேரத்தில், மொத்தப்படமும் போருக்குப் பிந்தைய மக்களின் வாழ்வை மட்டுமே பேசுகிறது. அதனால், பெருமிதங்களுக்கு இடம் தராமல் சமகாலச் சங்கடங்களைத் தாங்கள் பேச விரும்பியதாக, இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் புதியவன் ராசையா.
புதியவன் ராசையா மையப் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். அவரது நடிப்பு ஒரு நடுத்தர வயது மனிதரைக் காட்டுகிறது. போர்க்குணத்தை உடல்மொழியில் காட்டிய வகையில் அவர் கவனத்தை ஈர்க்கிறார்.
நவயுகா குமாரராஜா இதில் கஸ்தூரியாக நடித்திருக்கிறார். வசனத்தை மெதுவாக நினைவூட்டிச் சொல்லும் மிகச்சில ஷாட்களில் மட்டும், அவரது நடிப்பு செயற்கையாகத் தெரிகிறது.
அஜாதிகாவின் பாத்திரத்தைப் பெரிதாகத் திரைக்கதையில் இயக்குனர் விளக்க முற்படவில்லை.
அதேநேரத்தில், அப்பாத்திரம் குறித்து நாம் பலவற்றைக் கற்பனை செய்ய வைத்திருக்கிறார். அதற்கேற்றவாறு அஜாதிகாவின் நடிப்பு அமைந்திருக்கிறது.
இவர்கள் தவிர்த்து பெருமாள் காசி, நூர்ஜஹான், ஜெகன் மாணிக்கம் உட்படச் சுமார் ஒரு டஜன் பேர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர்கள் மகிந்த அபிசின்சே மற்றும் சிஜே ராஜ்குமார் பங்களிப்பு, தொடக்க காட்சிகளில் சாதாரணமாகத் தெரிகிறது. பிறகு, கேமிரா நகர்வுகள் மூலம் படத்தின் ஆக்கத்தைச் செறிவுபடுத்தியிருக்கிறது ஒளிப்பதிவு.
காட்சிகள் நீள்வதாக நினைக்கவிடாமல் தடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ். குறிப்பால் உணர்த்தும் விஷயங்களைச் சட்டெனத் திரைக்கதை கடந்து சென்றாலும், அதனைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்கு இடம் தந்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இப்படத்தில் மின்னணு சாதனங்கள் எதையும் பயன்படுத்தவில்லை.
அஜாதிகா வரும் காட்சிகளில் விதவிதமாகப் புல்லாங்குழல் இசையைப் பயன்படுத்தியிருக்கிறார். போலவே, கிளைமேக்ஸ் காட்சியிலும் பின்னணி இசை அருமை.
இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரம் திரையில் ஓடுகிற ஒரு படத்தில் வரலாற்றை மட்டுமல்ல, ஒருவரது வாழ்க்கையையும் முழுமையாகச் சொல்ல முடியாது.
அந்த வகையில், ஓடைத் தண்ணீரைக் கையிலெடுத்துப் பருகும் நிலையையே ஒப்புநோக்க வைக்கிறது ‘ஒற்றை பனைமரம்’.
இப்படத்தைப் பார்வையாளர்கள் கொண்டாடலாம்; கடுமையாக விமர்சிக்கலாம்;
ஆனால், இதனை எவராலும் புறந்தள்ள முடியாது. அதற்கேற்ற திரைமொழி இப்படத்தில் உண்டு.
பிரச்சாரப் படமாக அல்லாமல், ஒரு திரைப்படத்தில் சமகால நிகழ்வுகளின் சாரத்தைச் சொல்வது அத்தனை எளிதல்ல.
இப்படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என்ற எண்ணம் மனதின் அடியாழத்தில் உருவானாலும், திரையோடு ஒன்றச் செய்யும் உள்ளடக்கம் அனைத்தையும் மறக்கச் செய்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும்?!
– உதயசங்கரன் பாடகலிங்கம்