ஒவ்வொரு ஓவியத்தின் பின்னணியிலும் ஒரு சுவாரசியம்!

பாமரன்

எனக்கும் எங்கண்ணன் சிவகுமாருக்கும் என்றைக்கும் ஏழாம் பொருத்தம்தான்.

அவர் அதிகாலை நாலு மணிக்கு எந்திருச்சா நான் மூனரைக்கே எந்திருச்சு ஒன்னுக்கூத்தீட்டு வந்து படுக்கிற ரகம்.

அவரு உடம்பை கின்னுனு வெச்சுக்க யோகாசனம் எல்லாம் பண்ணுனா நான் உடம்பை எந்தெந்தவிதமா எல்லாம் சீரழிக்கலாம்ன்னு சிந்திச்சுகிட்டு இருக்குற ஆளு. அவர் கம்பராமாயணம்-னா நான் ராவண காவியம்.

இப்படி அம்புட்டு பொருத்தமும் கூடி வர்ற ஒரே உறவு அடியேன் தான். ஆனாலும் அந்த மனுசனுக்கு என் மீதான பாசத்துக்கு மட்டும் எப்போதும் பஞ்சமிருக்காது.

“அடே… அடே… நான் என்ன புண்ணியம் பண்ணுனனோ இன்னைக்கு… நீ அதிசயமா போன் எடுத்துட்டே…” என்பார்.

“உனக்காகத்தான் உங்கூர்லயே மகாபாரத சொற்பொழிவு சி.டி. வெளியிடறேன். அதுவும் கர்ணனோட பெருங்கொடையைப் பத்தி எப்படிப் பேசீருக்கேன்னு வந்து பாரு…” என அழைப்பு வரும்.

அவர் எழுதிய புத்தகங்களை “அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னாலே, “அய்யய்யோ…! இந்த மனுசன் நாளைக்கு பெஞ்ச் மேல நிற்க வெச்சு புத்தகம் பத்தி கேள்வி மேல கேள்வியா கேட்பாரே” என்று கிலி பிடித்துவிடும்.

அப்படித்தான்… அவர் எழுதிய “சித்திரச்சோலை” புத்தகத்தையும் அனுப்பி வைத்து ரெண்டே ரெண்டு வருசம்தான் ஆச்சு.

முன்னாடியே படிச்சாலும் உட்கார்ந்து எழுதறதுக்கு ஒடம்பு வளையணுமே…? அவரைப்போல சிரசாசனம்…

பத்மாசனம் மாதிரி எதுவும் தெரியாது நமக்கு. எழுத்தாசனம் என்று ஒன்றை யாராவது கண்டுபிடித்தால்தான் உண்டு. சரி… விஷயத்துக்கு வருவோம் மக்களே.

நம்மில் பலருக்குத் தெரிந்ததெல்லாம் நடிகர் சிவகுமாரைப் பற்றித்தான். ஆனால் அந்த நடிகனுக்குள் ஒளிந்திருந்த மகத்தான ஓவியக் கலைஞன் சிவகுமாரைப் பற்றி அறிந்திருப்பவர்கள் அதில் கொஞ்சம் குறைவாகத்தான் இருப்பார்கள் என்பது எனது எண்ணம்.

ஓவியக்கலையின் மீதான காதலால்

கோவையின் சூலூர்ப்பக்கமுள்ள குக்கிராமத்தில் இருந்து சென்னைக்கு ரயிலேறி போய்ச்சேர்ந்த இடம்தான் ராயப்பேட்டை கோபாலபுரம் முதலாம் தெருவில் இருந்த 4 ஆம் நம்பர் வீடு. துணைக்கு டுடோரியலுக்கு படிக்கப்போகும் மாமா மகன் ரத்தினம்.

1958 ஆம் ஆண்டு தனது ஆதர்ச கதாநாயகனான சிவாஜியைப் பார்ப்பதற்காக கண்ணு மச்சான் கூட்டிப் போக ஆச்சர்யத்தின் உச்சிக்கே போகிறார் ஓவியர் சிவகுமார். உடம்பு முழுக்க பவுடர் பூச்சோடு ஜட்டியோடு வந்து நிற்கும் தன் கதாநாயகனைக் கண்டவுடன் அந்தரத்தில் மிதக்கிறது மனம்.

பள்ளிப்பருவத்திலேயே தான் வரைந்திருந்த சிவாஜியின் ஓவியத்தையும் கையோடு கொண்டு போயிருக்க… அதில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறார் அந்த “வணங்காமுடி”.

அவரிடம் ஓவியக்கல்லூரியில் படிக்கப் போகும் செய்தியைச் சொல்ல…

”இதைவிட நான் வேற ஒரு இடத்துக்கு அனுப்பறேன். ’மோகன் ஆர்ட்ஸ்’னு ஒரு கம்பெனி இருக்கு. சினிமாவுக்கு கட்-அவுட்… பேனர் எல்லாம் வரைஞ்சு தர்ற கம்பெனி. அவங்க 60 அடி உயரத்துல ”வணங்காமுடி”ல நான் விலங்கோட நிற்கிற உருவத்தை கட்-அவுட்டா வரைஞ்சு தியேட்டர்ல வெச்சு மிரட்டுனவங்க. கலர் போட்டோவ விட பல வண்ணங்களச் சேர்த்து அருமையா வரைவாங்க. அங்க போய்ச் சேர்ந்துக்க. நான் சொல்றேன்…” என்றிருக்கிறார் சிவாஜி.

இப்படித்தான் 1958-ல் தொடங்குகிறது சிவகுமாரின் ஓவியப் பயணம்.

சிவாஜி சொன்னபடியே மோகன் ஆர்ட்ஸ்-ல் பயிற்சி ஓவியனாய்ச் சேர்கிறார். ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழே இடுப்பில் ஒரு காடாத் துணியைச் சுற்றிக்கொண்டு வேர்த்தொழுகும் உடம்போடு பெரிய பெரிய பேனர்கள் வரையும் தன் சக ஓவியர்களது ஓவிய நுட்பங்களும்… வலிகளும் என விரிகிறது புத்தகம்.
 
அன்றைக்கு இத்தகைய பேனர் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் ஓவியமேதை கே. மாதவன். இவர் பிரமாண்டமான ”சந்திரலேகா” படம் தமிழில் இருந்து இந்தியில் எடுத்தபோது கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரிக்கு 60 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்த பம்பாயையே பிரமிக்க வைத்தவர்.

இவரது மாமா மகன் தான் ஓவியர் ஆர். நடராஜன். அவரது அறிமுகம் ஓவிய உலகின் பல கதவுகளைத் திறந்துவிடுகிறது சிவகுமாருக்கு.

பேனர் ஆர்டிஸ்டாவது லேசுப்பட்ட காரியமல்ல… அது மிகக் கடினமான உழைப்பைக் கொடுத்தாலும் குறைவான ஊதியத்தைக் கொடுக்கும் தொழில் என்பதை உணர்ந்து மோகன் ஆர்ட்ஸ் இல் இருந்து வெளியேறி வந்து திக்குத் தெரியாமல் நிற்க…

“ஏன் வாழ்க்கையை வீணாக்கறே. ஊருக்குப் போயி, பழையபடி இஞ்சினீயரிங் காலேஜ்ல சேர்ந்து படி…” என்று ஓவியர் நடராஜன் சொல்ல…

“சார்! ஓவியக்கலை மேல நான் வச்சிருக்கிற வெறியை இப்ப உங்களால புரிஞ்சுக்க முடியாது. ஆனா என்னிக்காவது ஒரு நாள், நீங்க பாராட்டற மாதிரி நான் படங்கள் வரைஞ்சு தீருவேன்” என்று ஆவேசமாய்ப் பொங்கி அழ…

சென்னை ஓவியக் கல்லூரியில் சேர கடிதம் கொடுத்து அனுப்புகிறார் குருநாதர் நடராஜன். நுழைவுத் தேர்வில் தேர்வாகி கல்லூரிக்குள் கால் வைக்கிறார் சிவகுமார். அப்போது அது ஆறு வருட கோர்ஸ்.

கல்லூரியில் சேர்ந்த பின்னர் தினந்தோறும் இரவு நடராஜன் அவர்களது அறையில் அவர் வரைவதைப் பின் நின்று மணிக்கணக்கில் கவனிப்பதுதான் ஓவியர் சிவகுமாரது வேலை.

இடையில் திருச்சி, தஞ்சை, செஞ்சி என கோயில்கள்… கோட்டை கொத்தளங்கள் போன்ற இடங்களுக்குச் செல்வதும்… சென்று அங்கேயே கிடைத்த இடத்தில் தங்கி, கிடைத்ததைத் தின்று…. மணிக்கணக்கில் நின்று நேரில் கண்டதை தத்ரூபமாக வரைவதும்தான் பணி.

அப்படி வரைந்ததையெல்லாம் மும்பையைக் கலக்கிய ஓவியமேதை கே. மாதவன் அவர்களிடம் காண்பிப்பதும்… அதைக்கண்டு அவர், ”அட… ஓர் அற்புதமான ஓவியக் கலைஞன் உருவாகிக் கொண்டிருக்கிறான்” என உள்ளுக்குள் பூரிப்பும் உதட்டில் சிரிப்புமாய் உற்சாகப்படுத்துவதும் வழக்கம்.

ஆனால் நம்மாளுக்குத்தான் சினிமா தேவதை அடிக்கடி கனவுகளில் வந்து கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறாளே… அந்தக் கனவும் ஒருநாள் நனவாக… உற்சாகத்தோடு ஓவியமேதை மாதவனைப் போய்ப் பார்த்து, “ஐயா… ஒரு சந்தோசமான செய்தி. நான் சினிமாவுல நடிக்கப் போறேன்” என்று சொல்ல ஐந்து நிமிடம் எதுவும் பேசாமல் மெளனமாய் அமர்ந்திருக்கிறார் மாதவன்.

“ஏன்யா! ஒன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க?” என்று மிஸ்டர் சிவகுமார் வினவ…

“ஒரு ஓவியன் செத்துப் போயிட்டான். அதுக்கு துக்கம் கொண்டாடிட்டிருக்கேன்…” என்று கடுப்பாகக் கூற…

“ஐயா, நான் அதுக்கப்புறமும் வரைவேன்”ன்னு ஓவியர் சாரி… நடிகர் சிவகுமார் எடுத்துரைக்க…

“மயிரைப் புடுங்குவே போடா” என்று “வாழ்த்தி” வழியனுப்புகிறார் மாதவன்.

இடையில் இவர் ஹீரோ ஆனதும்… இவரது படத்தையே மோகன் ஆர்ட்ஸ்-ல் இருந்த அந்தக்கால ஓவிய நண்பர்கள் பேனரில் வரைந்ததும்… அதைக்கண்டு நெகிழ்ந்ததும்… என்பதெல்லாம் இந்த நூலில் வரும் சுவாரசியமான சமாச்சாரங்கள்.

”சித்திரச்சோலை” எனும் இந்நூலை தி இந்து குழுமத்தின் தமிழ் திசை எண்ணற்ற புகைப்படங்கள்… ஓவியங்களோடு வெளியிட்டிருக்கிறது.

இவை எல்லாவற்றை விடவும் மனதை உலுக்கும் இன்னொரு சேதியும் உண்டு. நடிகராகியும் எட்டு வருடம் ஓவியத்தைக் கைவிடாமல் குருநாதர் நடராஜன் சாரோடு மைசூருக்கு ஸ்பாட் பெயிண்டிங் செய்யச் சென்றது… கிடைத்த ஓய்வு நேரத்தில் வரைந்த ஓவியங்களை அவரிடம் காண்பித்து திருத்தங்களைச் செய்து கொண்டது…

ஒரு கட்டத்தில் சோவியத் கலாச்சார அரங்கில் குருநாதர் நடராஜன் அவர்களது ஓவியக் கண்காட்சியையே சீடன் சிவகுமார் திறந்து வைத்தது… என ஓடிய பொழுதுகளில் ஓர் இடைவெளி.

சினிமாவில் பிஸி ஆகிவிட்டபடியால் ஓவியர் நடராஜன் அவர்களைப் பார்த்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதை உள்ளுணர்வு உணர்த்த, ஆளைக் காணாது தேடத் தொடங்குகிறார் சிவகுமார்.

எங்கு தேடியும் தென்படாத அவரை மேலும் தீவிரமாக தேடும் படலத்தில் இறங்க… இறுதியாகத் தெரிய வந்திருக்கிறது… தன் குருநாதர் ஓவியர் நடராஜன் அடைக்கலமாகி இருப்பது ஓர் அனாதை விடுதியில் என்று.

இனி வருவதை நாம் விவரிப்பதை விடவும் ஓவியர் சிவகுமாரது வரிகளிலேயே வாசிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
.
”ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி எதிரில் காட்டுக்குள் உள்ள அனாதை விடுதியில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அதிர்ந்து போய்விட்டேன்.

ஒருநாள் பகல் 12 மணிக்கு மாரடைப்பு வந்து ரோட்டில் விழுந்து விட்டார். யாருமே ஒருநாள் முழுவதும் கவனிக்கவில்லை. சூரிய ஒளி தாக்கி (SUN STROKE) விழுந்தவரின் கண்பார்வை பாதிக்கப்பட்டு விட்டது. மறுநாள் யாரோ புண்ணியவான் பார்த்து தர்மாஸ்பத்திரியில் சேர்த்து குணமாகி, இப்போது அனாதை இல்லத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.

அங்கு, கிழிந்து போன லுங்கியில் ஓட்டை விழுந்த முழங்கை பனியனில், 10 நாள் வெள்ளைத் தாடியுடன் அவரைப் பார்த்து அப்படியே தரையில் உட்கார்ந்து அழுதேன். போய் கட்டிப்பிடித்துக் கொண்டேன். யாரோ ஒரு தன்னார்வலர் நடத்தும் அனாதை இல்லம். வேளைக்குச் சாப்பாடு என்பதெல்லாம் கிடையாது. காலை, மாலை விமானப்பயணிகள் சாப்பிட்டு மீதம் விட்ட ரொட்டி, கேக், பிரைடு ரைஸ் சேகரித்து வந்து ராத்திரி 11 மணிக்கு எழுப்பித் தருவார்களாம்.

கொடுமை, கொடுமை. உடனே ‘உதவும் கரங்கள்’ வித்யாகருக்கு போன் செய்து என் குருநாதர் மோசமான நிலையில் உள்ளார். எப்படியும் அவருக்கு அடைக்கலம் தரவேண்டும்’ என்றேன்.

தனியாக ஒரு பெரிய அறை- புதிதாக கட்டப்பட்ட இல்லத்தில் ஒதுக்கித் தந்தார். வயது 86 ஐ தாண்டியாயிற்று. அசைவம் விரும்பிச் சாப்பிடுவார். என் உதவியாளர் மூலம், சென்னையில் பிரியாணி வாங்கி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பகல் 12 மணிக்கு தவறாமல் அனுப்பி வைத்தேன்.

சூர்யா – ஜோதிகா திருமணத்திற்கு 14 நாள் முன்பு இவ்வுலகை விட்டு விடைபெற்றுக் கொண்டார்.

ஒரு ஓவியனின் சகாப்தம் இப்படி முடிந்து விட்டது. இந்தியாவில் ஓவியனாகப் பிறப்பது பாவம், சாபம் என்று அடிக்கடி சொல்வேன். ஓவியர் மாதவனும் நடராஜனும் பிரான்சில் பிறந்திருந்தால் அவர்கள் திறமைக்கு இருவரும் ஆளுக்கு ஒரு தீவு சொந்தமாக வாங்கியிருப்பார்கள். என்ன செய்வது?.”

இப்படி மனதைப் பிசையும் எண்ணற்ற சம்பவங்கள் ”சித்திரச்சோலை” நூலில். இதில் வாய்விட்டுச் சிரிக்க வைப்பவையும் உண்டு. கலங்க வைப்பவையும் உண்டு.

’விளையாட்டுப் பிள்ளை’ படப்பிடிப்பில் “அப்பாவைப் பத்திப் பேச உனக்கு யார்றா தைரியும் குடுத்தது?”ன்னு வசனம் பேசியபடியே சிவகுமாரை ஓங்கி அறைய வேண்டும் நடிகை பத்மினி.

அதற்கு முந்தைய காட்சியில்தான் சிவாஜியிடம் அறை வாங்கி பத்மினியின் பல் ஆட்டம் கண்டிருந்தது. அந்த நடுக்கத்தில் வசனத்தில் கோட்டை விட்டபடியே சிவகுமாரை அறைய…
மீண்டும் அதையே ஏழு டேக் எடுத்திருக்கிறார்கள். ஆக மொத்தம் 7 x 8 என மொத்தம் 56 அறை விழுந்து சிவகுமாரின் கன்னம் பூசணிக்குப் போட்டியாய் உப்பியிருக்கிறது.

1958-ல் வரைந்த பத்மினியின் படத்தை 2006-ல் பரிசளித்ததும் அதே ஓவியம் அவர் இவ்வுலகை விட்டுப் புறப்பட்டபோது தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்ததையும் வாசிக்கும்போது நெகிழ வைக்கிறது.

”திரைத்துறைதான் உனக்கு சரியானது” என ஊக்குவித்த மாஸ்டர் சந்தானராஜ்…

அறுபதுகளிலேயே உலகப்புகழ் பெற்ற ஓவியர் ஆதிமூலம்…

தெருவிலோ புழுதியிலோ எங்கு பூனையைக் கண்டாலும் படமெடுத்து ஓவியமாக்கும் பூனை பாஸ்கர் (ஆர்.பி.பாஸ்கர்)….

தனது கண்பார்வை 35% பறிபோனாலும் பூதக்கண்ணாடி உதவியுடன் தனது ஓவிய நூலை முழுமையாக்கித் தந்த ஓவியர் மனோகர் தேவதாஸ், ஓவியர் சில்பி, ஓவியர் செல்வம், அவரது புதல்வர் ஓவியர் மணியம் செல்வம், பத்திரிகை ஓவியங்களுக்கும் நவீன ஓவியங்களுக்கும் இடையே இருந்த பெரும் சுவரை தகர்த்தெறிந்த நம்ம தல ட்ராட்ஸ்கி மருது என எண்ணற்ற ஓவியர்கள் குறித்தும் அவர்களது ஓவியங்கள் குறித்தும் அறிந்து கொள்ள நம்மைக் கரம் பிடித்து கூட்டிச் செல்கிறது சிவகுமாரின் “சித்திரச்சோலை” நூல்.

பெரியார், காமராஜர், காந்தி, கலைஞர், கலைவாணர், ராஜாஜி, ஜெமினி என அவர் வரைந்த ஒவ்வொரு ஓவியத்தின் பின்னணியிலும் ஒரு சுவாரசியமான தகவல் ஒளிந்திருக்கிறது.

மாபெரும் கலைஞர்கள், மனிதநேயம் மிக்க மனிதர்கள், அன்பைத் தவிர வேறெதையும் சொந்தமாகக் கொண்டிராத எளியவர்கள் என அநேகரைப் பற்றிய நினைவுகளோடு நம்மை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார் ஓவியர் சிவகுமார்.

அந்த உலகம் அன்பு சூழ்ந்த மனிதர்களால் பின்னப்பட்ட உலகம்.

– பாமரன் 
(24.10.2024)

#ஓவியர்_சிவகுமார் #நடிகர்_சிவகுமார் #ஓவியமேதை #கே_மாதவன் #டி_ஆர்_ராஜகுமாரி #சிவாஜி #ஓவியர்_ஆர்_நடராஜன் #மோகன்_ஆர்ட்ஸ் #ஓவியக்கலை #சூர்யா #ஜோதிகா #பத்மினி #ஓவியர்_ஆதிமூலம் #ஓவியர்_மனோகர்_தேவதாஸ் #ட்ராட்ஸ்கி_மருது #artist_sivakumar #actor_sivakumar #writer_pamaran #sivakumar #k_madhavan #sivaji #mohan_arts #padmini #artist_athimoolam #trasky_maruthu #பாமரன் #artist_manohar_devadoss #surya #jothika  #சித்திரச்சோலை_நூல் #chithirasolai_book

Comments (0)
Add Comment