சக மனிதர்களின் நேர்மையை அங்கீகரிக்க வேண்டும்!

கவிஞர் கரிகாலனின் நெகிழ்ச்சியான அனுபவம்

கற்றதும் பெற்றதும்:

இங்கு எல்லோரும் அங்கீகாரத்துக்கு ஏங்குகிறார்கள். நம்மை மற்றவர்கள் அங்கீகரிக்க எப்படி ஆசைப்படுகிறோமோ, அவ்வழி, நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

வழக்கமாக ஒரு பெண்ணிடம் மீன் வாங்குவேன். எனக்கு மீனைப் பார்த்து வாங்கத் தெரியாது. அந்தப் பெண்ணிடம் மீனின் பெயரைச் சொல்வேன். தேவையான அளவைச் சொல்வேன். சொல்லிவிட்டு காசைக் கொடுத்துவிடுவேன்.

பிறகு, அருகில் உள்ள ஒரு கடையில் காஃபி குடிப்பேன். அங்குள்ள மேனேஜரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருப்பேன். திரும்பினால், அந்தப் பெண் மீனை சுத்தம் செய்து, வெட்டி, கவரில் போட்டு வைத்திருப்பார்.

அளவு சரியாக இருக்குமா? பழைய மீனைக் கொடுத்திருப்பாரா? யோசித்ததே இல்லை. இதுவரை அவர் என்னை ஏமாற்றியதும் இல்லை.

பெரியார் நகரில் ஒரு முதியவர். காய்கறி கடை வைத்திருக்கிறார். அவரிடமும் அப்படிதான். காய்களைத் தேர்ந்தெடுத்து வாங்க எனக்குத் தெரியாது. அவரே எடுத்துத் தருவார். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சரி. இவர்கள் எனக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.

ஆரம்பத்தில் தெரியவில்லை. இவர்கள் ஏன் நமக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்? நான் அவர்களை, அவர்களிடம் உள்ள நேர்மையை, எனக்கே தெரியாமல் அங்கீகரித்திருக்கிறேன். அவர்களை நம்புவது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது.

மனிதர்கள் அடிப்படையில் நேர்மையானவர்கள். அவர்களது நேர்மையை நாம் அங்கீகரிக்க வேண்டும். நம்மை ஒருவர் நம்புகிறார் எனும்போது அவர்களது பொறுப்பு கூடுகிறது. எப்படியாவது, அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமே! அவர்கள் முயல்கிறார்கள்.

ஒரு நாள் மழை. வழக்கம்போல தேவையான மீனை சொல்லிவிட்டு காஃபி கடைக்குப் போனேன். வரும்போது ஒரு காஃபி பார்சல் வாங்கிவந்து அந்தப் பெண்ணுக்கு கொடுத்தேன். அவர் முகத்தில் தோன்றிய அந்த அற்புதமான உணர்வுக்கு முன்னால் நான் செலவு செய்த சிறு காசு, ஒரு பொருட்டே அல்ல.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களை சக மனிதர்கள் ஏமாற்றிவிடுவார்களோ? என்கிற அச்சத்தோடே இருக்கிறார்கள்.

இதனாலேயே பூக்களை அணிய வேண்டிய இடத்தில், முட்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். அந்த முட்களைக் களைய ஒவ்வொருவரும் முனைப்பு காட்ட வேண்டும்.

ஒருவருக்கு நீங்கள் காசு பணம் கொடுத்து உதவ வேண்டாம்.

“உன்னை நான் நம்புகிறேன். உன் வேலையை உன்னால் திறம்பட செய்யமுடியும். அடுத்தவர்களுக்கு நல்லது செய்யும் குணம் உன்னிடம் இருக்கிறது. நீ ஏமாற்ற மாட்டாய்.” என்பதை சகமனிதர்களிடம் ஒரு சமிக்ஞையால் உணர்த்துங்கள்.

நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள் நல்லவர்கள் என நம்பும்போதுதான் நாம்மாலும் நல்லவர்களாக முடியும்.

சந்தேகமும், நம்பிக்கையின்மையும், நல்லவற்றை தரிசிக்க விடாத இருள்.

ஒரு நாள் நம் மனதிலும் சிறுமை எழும். அட, வீதியோரம் மீன் விற்கும் பெண் எவ்வளவு நேர்மையானவராக இருக்கிறார். நாம் வழுவலாமா? மனதை மாற்றிக்கொள்வோம்.

வாழ்க்கையில் வெற்றிபெறுவது வேறொன்றுமில்லை. அது நம்மைச் சுற்றி வாழ்பவர்களின் நல்லெண்ணங்களைப் பெறுவது. அவர்களை வென்றெடுப்பது.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment