மிரள வைக்கும் கங்காருகளின் எண்ணிக்கை!

அக்டோபர்- 24  உலக கங்காரு தினம்:

ஆஸ்திரேலியாவின் அடையாளமாகவும் தேசிய விலங்காகவும் இருப்பது கங்காரு. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த, வயிற்றில் பை பொருத்தப்பட்ட ஒரு இனத்தை சேர்ந்த விலங்காகும். கங்காருகள் பொதுவாகவே கூட்டமாக வாழும் தன்மை கொண்டது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையைவிட கங்காருகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம். இவைகளின் எண்ணிக்கை சுமார் 50 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

உலக முழுவதும் சுமார் 500 மில்லியன் கங்காருக்கள், காடுகளில் வாழ்கின்றன. இந்த விலங்குகள் மக்களுடன் இணக்கமாக வாழ்வது முக்கியம்.

இதை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் அக்டோபர் 24 ஆம் தேதி உலக கங்காரு தினம் அனுசரிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிகளில் இயற்கையை பராமரிக்கும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விலங்குகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதே உலக கங்காரு தினத்தின் நோக்கமாகும்.

உலக கங்காரு தினத்தின் வரலாறு

உலக கங்காரு தினம் 2020 இல் கங்காருஸ் அலைவ் மற்றும் அனிமல் ஜஸ்டிஸ் கட்சியின் கூட்டு முயற்சிகளின் மூலம் இந்த கம்பீரமான விலங்கின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின் அவசியத்தைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

தொழில் நோக்கத்துக்காக கங்காருக்கள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் விதமாகவும் பாதுகாக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக நாட்டில் உள்ள பல கங்காருக்கள் மற்றும் பிற வனவிலங்குகள் உயிரிழந்தன.

கிட்டத்தட்ட 3 பில்லியன் கோலாக்கள், கங்காருக்கள் மற்றும் பிற பூர்வீக விலங்குகள் தீயில் உயிரிழந்ததாக அங்குள்ள அரசு அறிவித்தது.

அதைப் பாதுகாக்க ஆண்டு தோறும் உலக கங்காரு தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக கங்காரு,  13 மீட்டர் வரைக்கும் தாவும் திறனையும் உடல் அமைப்பையும் கொண்டது.

பொதுவாக கங்காருகள் முழுமையாக வளர்ச்சி அடையாத குட்டிகளைப் பெறுகின்றன. கங்காரு குட்டிகள் பிறக்கும் பொழுது மிகவும் லேசான எடையுடன் பிறக்கும்.

இதனால் உடலோடு ஒட்டி உள்ள பையில் கங்காரு குட்டிகள் வளர்கின்றன. அதனுடன் பால் கொடுக்கும் உறுப்பு அமைந்துள்ளதால் குட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.

இந்த கங்காருகளில் பல வகை இனங்கள் உள்ளன. அதிலும் சிவப்பு நிறத்தைக் கொண்ட கங்காருகள் பத்து கிலோ உடல் எடையையும், இரண்டு மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. மூன்று அடி நீளத்தில் வாலயையும் கொண்டுள்ளது.

கங்காருகள் நல்ல உறுதியான எலும்புகளையும், தசைகளையும் கொண்டிருக்கிறது.

இதனால் இவை, அதிகமான தூரங்களுக்குச் சென்றாலும் சோர்வு அடைவதில்லை.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கங்காருக்கள் உலகின் ஒரு சில பகுதிகளில் வாழ்ந்துள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா போன்ற இடங்களில் வாழ்ந்துள்ளன.

உலகின் பல பகுதிகளில் வாழ்ந்தாலும் அதிகளவில் வாழும் பகுதியாக ஆஸ்திரேலியா மட்டுமே இருக்கிறது. அங்கு நிலவும் காலநிலை அவற்றுக்கு ஏற்றதாக இருப்பதால் இது சாத்தியமாகிறது.

70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா, அண்டார்டிகாவில் இருந்து பிரிந்து தனி ஒரு கண்டமாக மாறியது.

அப்படி மாறியபோது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த பிற உயிரினங்களால் அங்கு நிலவிய காலநிலைக்கு ஏற்ப, தங்களை தக்க வைத்துக் கொண்டு வாழ முடியாமல் பலவகை உயிரினங்கள் அழிந்துவிட்டன.

பிற பகுதிகளில் வாழ்ந்த கங்காருக்காளால் அங்கு நிலவக்கூடிய காலநிலையை தாங்கிக்கொள்ள முடியாமல் அவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கின. இந்த சூழ்நிலையில் தான் கங்காருகள் வாழும் பகுதியாக ஆஸ்திரேலியா மாறியது.

இதேபோல், ஆஸ்திரேலியாவில், மற்ற உயிரினங்களால் கங்காருக்களுக்கு பெரிய பாதிப்பு என்பது இல்லை. ஆகவே அந்தப் பகுதி சற்று பாதுகாப்பான இடமாகவும் கங்காருக்கள் அதிகம் வாழ இது ஒரு காரணமாக அமைந்தது.

எப்பொழுதும் சுறுசுறுப்பாக ஓய்வின்றி இருக்கும் விலங்கினமாக கங்காரு இருக்கிறது.

எதிரிகளைத் தாக்குவதற்கு பின் கால்களையும், முன் கால்களில் உள்ள நகங்களையும் பயன்படுத்துகின்றன.

நன்கு நீந்தக் கூடிய விலங்காகவும் இருக்கிறது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் என்கிறார்கள் விலங்கியல் ஆய்வாளர்கள்.

பொருளாதாரத்துக்காகவும் மற்ற தொழிலுக்காக அதன் இனம் அழிக்கபடுகிறது. அதனை பாதுகாக்கும் நோக்கத்துடன் உலக கங்காரு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு, இதன் கருப்பொருள் “கங்காருக்களுடன் இணைந்து வாழ்வது”. ஆஸ்திரேலியாவில் இருக்கும் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு பலம் வாய்ந்த கங்காரு உயிரினங்களுடன் இணக்கமாக வாழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment