கடவுள் அனுப்பும் மனிதர்கள்!

நெகிழும் கவிஞர் கரிகாலன்

பிள்ளைகளைத் தேர்வறையில் விட்டு அன்னையர் காத்திருந்த காலம் போய்விட்டது. இன்று அம்மாவை தேர்வு மையத்தில் விட்டு வியன் காத்திருக்கிறான்.

சிந்து, சபியா இருவருக்குமே, இன்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி நுழைவுத் தேர்வு.

இருவரும் விண்ணப்பத்தில் சென்னை தேர்வு மையத்தை தெரிவு செய்திருந்தார்கள். மூன்று நாட்களுக்குமுன் இணையத்தில் ஹால் டிக்கட் வெளியானது. சபியாவுக்கு செகந்த்ராபாத் தேர்வு மய்யம்.

ராஞ்சியிலிருந்து சென்னைவர விமான டிக்கெட் புக் செய்திருந்தார். மருத்துவ நுழைவுத் தேர்வுகள் என்றாலே சொதப்பலாகிவிட்டது.

செகந்த்ராபாத் என்றதும் அன்பு சகோதரர் ராம் வசந்த்தான் ஞாபகம் வந்தார். மாப்பிள்ளை ஹைதராபாத் வருகிறார். செகந்த்ராபாத் செல்வதற்கு, தங்குவதற்கு, அவரை ஆற்றுப்படுத்த வேண்டுமென, ராமிடம் சொன்னேன்.

‘நீங்கள் கவலையை விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் அண்ணா!’ என்றவர், மாப்பிள்ளையின் எண் வாங்கிக் கொண்டார். சபியாவுக்கு ஃபோன் செய்து, ‘நான் உங்கள் சின்ன மாமனார்! செகந்ராபாத் அருகேதான் இருக்கிறேன். புது இடம் என்கிற மன அழுத்தம் இல்லாமல் ஃப்ரியா வாங்க!’ என்று சொல்லியிருக்கிறார்.

சபியா விமான நிலையம் வந்திறங்கியதும், கார் அனுப்பி, வீட்டுக்கு அழைத்து, விருந்தளித்து உபசரித்துள்ளார்.

தனி அறையில் தங்கவைத்து இன்று சபியாவை தேர்வு அறைக்கு கொண்டு விட்டிருக்கிறார். ‘அண்ணா நீங்கள் கொடுத்து வைத்தவர். டாக்டர் என்கிற தோரணை சிறிதும் இல்லாமல், எளிமையாக பழகுகிறார் மாப்பிள்ளை!’ என்றார்.

மாப்பிள்ளையை புது ஊரில் வழிநடத்தினால் போதும் என்றுதான் ராமிடம் கூறியிருந்தேன். படிப்படியாக முன்னேறி இன்று பிஸியான தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார் ராம். ஆனால் என் மீது கொண்ட அன்பால், தன் நேரத்தை மாப்பிள்ளை சபியாவுக்காக ஒதுக்கி, அவர் தேர்வு எழுதுவதை எளிமையாக்கியிருக்கிறார்.

சில வேளை ஒரு மலை நம் பாதையின் குறுக்கே வந்ததுபோல் தோன்றும். அப்போது கடவுள்போல யாராவது ஒருவர் நம் கைபிடித்து, அந்த மலையைக் கடந்துபோக, நம் கண்ணுக்குப் புலப்படாதிருக்கும் ஒரு ஒற்றையடிப் பாதையைத் திறந்து வைப்பார்கள். ராமும் அப்படிதான்.

எங்கள் இடுக்கண் களைந்தார். காலை நான், தமிழ், வியன் மூவரும் சிந்துவை டான் பாஸ்கோ பாலிடெக்னிக் தேர்வு அறையில் விட்டோம். அங்கு, ‘I have promised god that i would give of myself to my last breath for my poor boys’ அருட்தந்தை டான்பாஸ்கோவின் வாசகம் கண்ணில் பட்டது.

சிந்து, சுடர், கார்க்கி மூவரையும் நானும் தமிழும் மட்டுமே வளர்த்துவிடவில்லை. இந்த சமூகத்தின் விளைபொருட்கள் அவர்கள். எப்போதும் பிள்ளைகள் குறித்து நாங்கள் கவலைப்பட்டதில்லை.

எப்போதாவது அவர்கள் பாதையில் சிறிது இருள் தோன்றும். அப்போதெல்லாம் ஒளி எழுப்ப ஒரு டான்பாஸ்கோவை கடவுள் அனுப்பிவைப்பார். இந்த முறை அப்படிதான், அவர் ராம் வசந்த்தை அனுப்பிவைத்தார்.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment