டி-20 கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி உலக சாதனை!

2026 ஆம் ஆண்டில், ஐ.சி.சி. டி-20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்கும் ஆப்ரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் கென்யாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று, நைரோபியில் நடந்த லீக் போட்டியில் ஜிம்பாப்வே, காம்பியா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஜா, 43 பந்துகளில் 15 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 133 ரன்கள் எடுத்தார். 

இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன் குவித்தது.

345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய காம்பியா அணி, 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் 290 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றிபெற்றது.

இந்த நிலையில், சர்வதேச டி-20 போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த அணிகளுக்கான வரிசையில் ஜிம்பாப்வே முதலிடம் பிடித்துள்ளது.

இதற்கு முன்பாக, நேபாளம் அணி, மங்கோலிய அணிக்கு எதிரான போட்டியில் 314 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாகப் பார்க்கப்பட்டது. 

இந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Comments (0)
Add Comment