நூல் அறிமுகம்: காந்த மலர்
காரைக்காலில் ஆசிரியர் இருந்த நாளில், ஒரு சிற்றூரின் பள்ளிக்கூடத்தில் சந்தித்த ஆசிரியை பதித்த, பாதித்த எண்ணங்களில் உருவானதே இப்புதினம். ஒரு இடத்தில் ஆசிரியரும் நானும் ஒத்திணைகிறோம்.
எழுதியதற்கும் பதிப்பித்ததற்கும் இடைப்பட்ட ஏழாண்டு காலத்தில் அதை நன்கு சிறப்பாக திருத்தி இருக்கலாம். ஆனால் எழுதப்பட்ட பசுமையான நினைவை நிலை நிறுத்துவதற்காக அப்படியே அச்சேற்றியதாக சொல்லி இருக்கிறார்.
நானும் அதே போல என் வீடியோக்களில் சின்னச் சின்ன தவறுகளைக் கண்டுபிடித்தாலும், தவறுகளோடே திருத்தங்களையும் சேர்த்து பதிவேற்றி விடுவேன். பிழையற்றவர் எனக் காட்ட வேண்டிய அவசியமென்ன?
ஆலங்காடு என்னும் ஒரு கிராமத்து பள்ளியின் ஆசிரியை கலைவாணி. அப்போது பொழுது விடிந்ததும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சோத்து மூட்டையை எடுத்துக்கிட்டு கூலி வேலை செய்யப் புறப்பட்டிடுவாங்க.
அப்படி வேலைக்குச் செல்லாதவர்களும் நாலு பேரு ஒண்ணா கூடி சோழி உருட்டுறதும் பாடு பேசுறதுமாய் வெட்டியாய் பொழுதைக் கழிப்பார்கள்.
அதிலிருந்து மாற்றி பிள்ளைகளுக்கு படிப்பையும் பெரிய பெண்களுக்கு கைத் தொழிலும் உண்டாக்கிக் கொடுத்து கிராமமே தலை நிமிர வைக்கிறாள்.
கலைவாணியின் மாணவர்கள் கிருஷ்ணன், ருக்மணி, குமார் ஆசிரியர் சொன்ன சொல் தட்டாத மாணவர்கள். கிருஷ்ணனும் ருக்குவும் ஊருக்கு கீரியும் பாம்புமாய் இருப்பார்கள். ஆனால், உள்ளுக்குள் ஒரு இதமான உறவு இழையோடிக்கிட்டு இருக்கும்.
காதலை வெளிக்காட்ட வகையின்றி சீண்டலாக வந்து விழுந்து கொண்டு இருந்தது. இந்த இளசுகளின் காதல் கதைக்கு இடையே சேர்க்கப்பட்ட சுவையூட்டி.
ஊர்க்காவல் தெய்வமான கருப்பசாமியைக் காணோம் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள் கிராமத்து மக்கள்.
விசாரிக்கும் போது ஒரு அருவாளைத் தான், கருப்பசாமி கடவுளாக தம்மைக் காக்கும் தெய்வமாக வழிபடுவது தெரிகிறது.
ஒருவேளை அந்த அருவா தங்கத்திலேயோ வெள்ளியிலேயோ செய்திருப்பார்களோ என விசாரிக்கும் போது அது துருப்பிடிச்ச இரும்பு தான் ஆனால் தம்மைக் காவல் காக்கும் தெய்வம் என்கிறார்கள்.
இந்த நிகழ்வின் தொடர்ச்சியாய் கிராம மக்கள் எவ்வளவு வெள்ளந்தியாய், அதன் காரணமாக எளிதில் கோபப்படுபவராக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.
கலைவாணி குடும்ப வாழ்க்கையும் பாரம் நிறைந்தது தான். ஆனால் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட அவள் கணவர் மாணிக்கத்தின் முழு ஆதரவும் கிடைப்பதால் அந்த கிராம மக்களுக்கு அவள் விரும்பும் முன்னேற்றம் கொண்டு வர முடிகிறது.
சமீப காலத்தில் ஆசிரியை மாணவ உறவை கொச்சைப் படுத்திய ஒரு சில பதிவுகளை வாசித்த பின் இந்த கதையை வாசிக்கும் போது அதிகம் முன்னேறாத கிராமங்களில் ஆசிரியையை கடவுளுக்கு நிகராக மதிக்கும் உணர்வு புரிகிறது.
கிராம மக்களின் முன்னேற்றத்துக்காக எங்கு செல்ல வேண்டும் என்றாலும் ஆசிரியை மாணவரின் சைக்கிளில் அமர்ந்து தான் செல்கிறார். அதை அந்த ஊர் மக்களும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை.
ஒரு பெண்ணின் தியாக வாழ்வை அழகாகச் சொன்ன நாவல்.
******
நூல் : காந்த மலர்
ஆசிரியர் : கொற்றவன்
ஊற்று பதிப்பகம்.
விலை : ரூ. 70/-