அன்பின் சிப்பிகளைத் திறப்போம்…!

நூல் அறிமுகம்: சிறகுகளின் இசை!

கல் நீரின் கூர்மையால் செதுக்கப்பட்டு ஒரு சாதாரண கூழாங்கல்லாகி பளிங்குபோல் மினுமினுக்கும் தன்மையுடையதாகிறது. மிகக் கடினமான இரும்பு நெருப்பின் பாய்ச்சலால் மிருதுவாகி, இளகி மென்மையாகிறது.

கல்லாகவும், இரும்பாகவும் இருக்கும் மனித மனதை பளிங்காக்கி மினுமினுப்பாகவும், இளக்கி மென்மையாகவும் மாற்றவல்ல இரு கருவிகள்தான் அன்பும், மன்னிப்பும்.

மிகச் சிக்கலான மனித மனதிற்குள் இந்த அன்பையும், மன்னிப்பையும் துளையிட்டு இறக்குவதற்குத்தான் கவிதை என்னும் ஆயுதத்தை மொழி வடிவில் கையில் எடுத்து கவிதைகளை எழுதி இருப்பதாக இந்நூலின் ஆசிரியர் பரிதி கூறுகிறார்.

கவிதை என்பது இலக்கிய வகைமைகளுள் உள்ள மொழியின் உச்ச வடிவம். மனிதர்களுடனும், இயற்கையுடனும், இறைமையுடனும் பேசுவதற்கு கவிதை எனும் உச்ச வடிவத்தை ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

சாந்தமாகப் பேசும் வரிகள், கருணையால் நிறைந்த வரிகள். நின்று நிதானித்துப் பேசும் வரிகள், வினாக்களைத் தொடுத்து விடைகளைப் பெறும் வரிகள்,

எது சரி? எது தவறு? என விடை காண முடியா வரிகள், வாழ்வின் சாராம்சத்தைப் பேசும் வரிகள், படைப்பின் அவலத்தைச் சாடும் வரிகள், வெப்பத்தைக் கக்கும் அனல் வரிகள், மென்மையை உமிழும் தேன் வரிகள்,

நகைச்சுவை கலந்த கிண்டல் வரிகள், சமூகத்தை ஓங்கி அறையும் சுடும் வரிகள், நெஞ்சைப் பதற வைக்கும் கீறல் வரிகள், தியானிக்க வைக்கும் இறை வரிகள்,

மொழியின் அழகில் பயணம் செய்யும் செழிப்பான வரிகள் என கவிஞன் பல வரிக் குதிரைகளில் பயணப்பட்டிருப்பது வழியெங்கும் தென்படுகிறது.

“எண்ணத்தின் வேகத்தை எழுத்திலே காட்டுபவன் கவிஞன்”,

“சொற்களில் சிலை வடிக்கும் சிற்பி கவிஞன்”,

“கவிதை உயிர், சொற்கள் அதன் உடல்” என்பவை யெல்லாம் மிகச்சிறந்த சிந்தனைக்குரிய வரிகள்.

கவிதை பல சூழ்நிலைகளில் நெய்யப்பட்டிருந்தாலும், பல கருப் பொருள்களில் சூல் கொண்டிருந்தாலும் அன்பையும், கருணையையுமே பிரதானப்படுத்தி செயல்பட்டிருக்கிறது.

“அன்பின் சிப்பிகளைத் திறப்போம்
பல முத்துக்கள் கிடைக்கும்”…..

“அன்பெனும் நிலாத்துண்டைய குஞ்சுகளிடம் ஊட்டியது”…..

“அன்பினால் மனம் எழும் அதிசயம்”…..

என்ற வரிகளின் மூலம் அந்த செயல்பாடு வெளிப்படுகிறது.

கவிதை என்பது நிகழ்கால சூழ்நிலைப் பற்றியும் விவாதிக்க வேண்டும். அப்பொழுது தான் அது வருங்கால க வரப்பிரசாதமாக இருக்கமுடியும். கால சந்ததிக்குப் பயன்படும் – “மண்ணின் தாகம்” என்ற தலைப்பில் கவிதை இவ்வாறு பேசுகிறது.

“இது
என் பூமி
என் தேசம்….
மரணபயமற்ற தமிழ் மண்ணுக்காக…. நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்…..”

என்பன போன்ற சிந்தனைகள் எல்லாம் நிகழ்கால சூழலை மன உரத்தோடு பேசுகிறது.

கவிஞனின் கவிதை ஓட்டம் உணர்வலைகளின் உந்துதலோடு அதிவேகமாக ஓடுகிறது.

மனிதத்தை மனிதனாகக் காணவும், சமூக அக்கறையோடு செயல்படவும் கவிதை செய்யப்பட்டிருக்கிறது.

“உதிரும் இலைகள்” என்ற தலைப்பில் இயற்கையை இறைநிதைத் தன்மையாகச் சித்தரிக்கும் பாங்கு படைப்பை வியப்பாகப் பிரதிபலிக்கச் செய்கிறது.

சமூகத்தின் மீது எந்த அளவு கோபமும், ஆற்றாமையும் இருக்கிறதோ, அதே அளவு அல்லது ஒருபடி மேலே அதன் மீது பரிவும், பாசமும் பல கவிதைகளில் வெளிப்படும் பக்குவம் பாராட்டிற்குரியது.

மன்னிப்பின் மாபெரும் கருணையைப் பற்றியும் கவிதை பல இடங்களில் கோடிட்டுக் காட்டுகிறது. முழு மனிதனாய் இருப்பதன் தேவையை பின்வரும் வரிகள் வலியுறுத்துகிறது.

“இன்று முதல்
ஒரு
சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்
மனிதர்களுக்கு மட்டும்
முகம் காட்டுவதென்று”.

இந்த எண்ணமும், எழுத்தும் சிந்தனையைப் படிப்பவர் உள்ளத்தில் பதியவைத்துப் பயன்பெறவைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அனைத்துமே மெல்ல மெல்ல தேனீ சேர்க்கும் தேனடை சொல்ல சொல்ல இனிக்கும் கவிதை வரிகள்.

*****

நூல்: சிறகுகளின் இசை  (கவிதை தொகுப்பு)
ஆசிரியர்: பரிதி
வானவில் பதிப்பகம்
பக்கங்கள்: 150
விலை: ரூ.135/-

Comments (0)
Add Comment