தமிழ் சினிமா இயக்குனர்களில் தனித்துவமானவர்களுக்கென்று ஒரு பட்டியல் இடலாம். அதில் இடம்பெறும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு பாலா, அமீர், ராம் புதிதாக இயக்குனர்கள் தலையெடுத்தபோது, அவர்களில் தனது முத்திரையை ரசிகர்கள் உணரும்விதமாகப் படங்கள் தந்தவர். ’துள்ளுவதோ இளமை’யில் இயக்குனராக அவர் பெயர் இடம்பெறபோதும், அதுவே அவரது தொடக்கமாக அமைந்தது. அப்படம் முதல் ’நானே வருவேன்’ வரை மொத்தமாக 12 படங்கள் இயக்கியிருக்கிறார். அவையனைத்தும் ‘இது செல்வராகவன் படம்’ என்று ரசிகர்கள் சொல்லத்தக்கவகையில் சில காட்சிகளைக் கொண்டிருக்கிறது. அதுவே அவரது தனித்துவம்.
செல்வராகவன் இயக்கிய படங்களில் ‘7ஜி ரெயின்போ காலனி’ மிக முக்கியமானது. ஏனென்றால், ‘காதலைத் தவிரத் திரையில் சொல்ல வேறு உணர்வுகளே இல்லையா’ என்ற கேள்விக்குப் பதிலாக அமைந்த அந்தப்படமும் காதலையே கருப்பொருளாகக் கொண்டிருந்தது. புதுமுகங்களைக் கொண்டும் பிரமாண்ட பட்ஜெட்டில் படம் உருவாக்கலாம் என்று சொன்னது. ’நீரோட்டத்தில் காத்து நின்று மீன் பிடிக்கும் கொக்காக’, தன் வாய்ப்புக்காகக் காத்துக் கிடந்த எத்தனையோ சாதாரண மனிதர்களை அசாதாரணமானவர்களாக உணரச் செய்தது. அனைத்துக்கும் மேலாக, ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. அதுவே, அப்படம் செய்யும் மாயாஜாலங்களில் மிக முக்கியமானது.
அப்படிப்பட்ட ‘7ஜி ரெயின்போ காலனி’ வெளியாகி இருபதாண்டுகள் ஆகின்றன என்றால் நம்பக் கடினமாகத்தான் இருக்கிறது. 2004-ம் ஆண்டு அக்டோபர் 15 அன்று இப்படம் தமிழில் வெளியானது. மூன்று வாரங்களுக்குப் பிறகு ‘7ஜி பிருந்தாவன் காலனி’ என்ற பெயரில் தெலுங்கிலும் வந்தது. இரண்டுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
காதலும் உண்டு..!
அன்றைய காலகட்டத்தில், ‘கண்டிப்பாகக் காதலித்தாக வேண்டும்’ என்ற நிபந்தனையைச் சுமந்துகொண்டு எவரும் திரியவில்லை. ஆனால், இன்றைய நிலைமை அதற்கு நேர்மாறாக இருப்பது கண்கூடு. அந்த வகையில், ‘7ஜி ரெயின்போ காலனி’ படமானது ஒரு தலைமுறையின் மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்ததாகவும் சொல்லலாம்.
அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசிக்கிற இரு வேறு குடும்பங்கள். அவற்றைச் சார்ந்த ஒரு ஆணும் பெண்ணும் இரு வெவ்வேறு உலகங்களை மனதுக்குள் காண்கின்றனர். சமூக, பொருளாதார வேறுபாடுகள் அதன் பின்னே இருக்கின்றன. அவற்றை மீறி, அந்தப் பெண் மீது அந்த ஆண் காதல் கொள்கிறான். அப்பெண்ணும் அவன் மீது காதலுடனே இருக்கிறாள். ஒரு கணத்தில் அந்த காதலை இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர். அதன்பிறகு, திருமணம் நோக்கி அவர்களது காதல் நகரவில்லை. அந்த நிலை எதனால் ஏற்பட்டது என்று சொன்னது ‘7ஜி ரெயின்போ காலனி’ கிளைமேக்ஸ்.
செல்வராகவன் திரையில் காட்ட விரும்பிய உலகத்திற்கு ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, படத்தொகுப்பாளர் கோலா பாஸ்கர், கலை இயக்குனர் ஜிகே என்று பலரும் இணைந்து உரு கொடுத்திருந்தனர்.
முக்கியமாக, யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை காண்பவர்களை மெஸ்மரிசம் செய்தது; படத்தோடு ஒன்ற வைத்தது. கனா காணும் காலங்கள், நினைத்து நினைத்து பார்த்தால், கண் பேசும் வார்த்தைகள், ஜனவரி மாதம், நாம் வயதுக்கு வந்தோம் என்று பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நீண்ட இப்படத்தின் உள்ளடக்கம் சோகத்தை மையப்படுத்தியது. ஆனாலும், திரும்பத் திரும்ப இப்படத்தைப் பார்த்தவர்கள் பலர். காரணம், இரண்டு கற்பனைப் பாத்திரங்களுக்கு இடையேயான காதல் காண்பவர்களின் மனதில் இருந்த ஏக்கங்களின், வேதனைகளின், நினைவுகளின் சீற்றத்தைத் தணிக்கச் செய்யும் ஆற்றலைக் கொண்டிருந்தது.
நெஞ்சைத் தொடும் காட்சி!
முழுமையான காதல் படமாக இருந்தபோதும், இதில் நெஞ்சைத் தொடும் சென்டிமெண்ட் காட்சிகளும் உண்டு. அதற்கு ஒரு உதாரணம், இப்படத்தில் விஜயன், சுதா, ரவி கிருஷ்ணா சம்பந்தப்பட்ட காட்சி.
தந்தையை ‘அவன்.. இவன்..’ என்று ஏக வசனத்தில் பேசுகிற ஒரு இளைஞனிடத்தில், ‘ஒரு பொண்ணா நான் திட்டுறது, அடிக்கறது வலிக்கலை, ஆனா இத்தனை வருஷமா உன்னை வளர்த்து ஆளாக்கின அப்பா பேசுறது வலிக்குதா’ என்று கேட்கிறாள் அவனது காதலி. அன்றைய தினம், ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் மெக்கானிக் பணிக்கான நியமன கடிதம் அவன் கையில் இருக்கிறது.
அந்த கடிதத்தை தந்தையிடத்தில் கொடுக்கிறான். அவர் வாங்கிப் பார்த்துவிட்டு, ‘இந்த வேலைக்குதான் நீ லாயக்கு’ என்கிற தொனியில் பேசுகிறார். ‘தந்தையைப் பார்த்து தான் கொண்டிருக்கும் மதிப்பீடே சரி’ என்பதுபோல, அவன் கடந்து போகிறான்.
நள்ளிரவில், அதே தந்தை தனது மகன் கொண்டுவந்த கடிதத்தை எடுத்துப் பார்த்துப் பூரிக்கிறார். அதனைப் பார்த்து சிரிக்கிறார் தாய். ‘ரொம்பத்தான் பெருமை’ என்று மனைவி சொல்ல, ‘பின்ன, நான் இல்லாம வேற யாரு பெருமைப்படுவா’ என்று அந்தக் கணவர் பெருமிதப்படுவார். அவர்களது பேச்சைக் கேட்டு, தூங்கும் பாவனையில் படுத்திருக்கும் மகன் பொங்கும் கண்ணீரை அடக்கிக் கொள்வான்.
அதிகாலையில் அந்த மகன் எழுந்து வரும்போது, பால் பாக்கெட் உடன் எதிரே வருவார் அந்த தந்தை. அதுநாள் வரை கொண்டிருந்த புரிதல் உடைந்து முற்றிலும் புதிதான ஒன்று உருவானதை உணர்த்தும் வகையில், அவரைக் கடந்து செல்லத் திணறுவான் அந்த மகன்.
தெலுங்கு பதிப்பில், இதே காட்சியில் சந்திரமோகன் நடித்திருப்பார். ஆனால், அதனை விடத் தமிழ் பதிப்பே ஒரு படி மேலாக நிற்கிறது. மொழி பேதம் மட்டுமே அதற்குக் காரணமில்லை.
விஜயனின் குரலில் நிறைந்து நிற்கும் தந்தையின் பெருமிதம் அபரிமிதமாக இருப்பதை இப்போதும் ஒருவரால் உணர முடியும்.
அந்தக் காட்சியைக் கண்டபோதெல்லாம் கண்ணில் நீர் பெருக்கெடுக்கும். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காட்சிகளில் அதற்கும் ஒரு இடமுண்டு.
மீண்டும் அதே கூட்டணி!
ஒரு வெற்றிப்படத்தில் பணியாற்றியவர்கள் மீண்டும் ஒன்றிணையலாம். இன்னொரு வெற்றிப் படத்தை உருவாக்கலாம். ஆனால், அந்தக் கூட்டணியால் அதே போன்றதொரு படத்தை மீண்டும் தரவே முடியாது. அது, காலம் செய்த கோலம். அதனை மீளாக்கம் செய்வது ஒருபோதும் இயலாதது.
அது தெரிந்தோ என்னவோ, பலரும் ஒரு வெற்றிப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குகின்றனர். அந்த வகையில், 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாகத் தகவல்கள் இருக்கின்றன. அப்படத்தின் உருவாக்கம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்த மேலதிகத் தகவல்கள் இல்லை.
’7ஜி ரெயின்போ காலனி’யில் வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்பவனுபவம் அப்படம் பார்த்த அனைவருக்கும் நிச்சயம் கிடைத்திருக்காது.
ஆனால், அப்பாத்திரங்களின் சாராம்சத்தை அவர்கள் நிச்சயம் கடந்து வந்திருப்பார்கள். சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு நெருக்கமான தருணங்கள் அதில் நிறைய உண்டு.
அது போன்ற அம்சங்கள் அடுத்த பாகத்திலும் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் ‘7ஜி ரெயின்போ காலனி’ ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். இருபதாண்டுகள் ஆனபிறகும் தொடரும் அவர்களது சிலாகிப்பே அதனைச் சொல்லும்..!
– உதய் பாடகலிங்கம்