தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறாரா?

ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே காலம் காலமாக உரசல்கள் இருந்து கொண்டுதான் உள்ளன.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில், இந்த உரசல் மோதலாக புதிய பரிணாம வளர்ச்சியை எட்டியது. பாஜக அல்லாத, மாநில அரசுகளை, விரோத மனப்பாங்குடன் ஆளுநர்கள் பார்க்கத் தொடங்கினர்.

தமிழகமும் விதி விலக்கு அல்ல. திமுக, ஆட்சிக்கு வந்த நாள் முதலே, ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசுடன், மோதல் போக்கைக் கடைபிடித்தார். உச்சமாக, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தார் ரவி.

அண்மையில் டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதன்பின்னர் ஆளுநர் ரவியின் செயல்பாடுகளில் மாறுதல் தென்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர், சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார் ஆளுநர் ரவி.

இந்த நிலையில்தான், சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் நடைபெற்ற ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி, ஆளுநருக்கும், ஸ்டாலினும் இடையே நேரடி மோதலை உருவாக்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

போர்க்கோலம் பூண்ட தமிழகம்

ஆளுநர் பங்கேற்ற விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், திராவிடம் என்ற வார்த்தை நீக்கப்பட்டதற்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின், தனது வலைதளப் பக்கத்தில், கடுமையான வார்த்தைகளால் ஆளுநரை அர்ச்சித்திருந்தார்.

‘இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர் – தமிழகத்தையும் – தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்” என்று ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமா உலகத்தினரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

“இது, தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ் மொழியையும் அவமதிக்கும் செயல் – நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்” என கமல்ஹாசன் ஆவேசம் காட்டினார்.

கவிஞர் வைரமுத்து, ’தமிழ்த்தாய் வாழ்த்தில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற உயிர் வாக்கியத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து தவிர்த்ததைக் காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள் – இதுபோன்ற இழிவுகள் தொடர்ந்தால் மானமுள்ள தமிழர்கள் தெருவில் இறங்குவார்கள்” என, தனது கண்டனத்தை சுட்டெறிக்கும் வார்த்தைகளில் பதிவு செய்தார்.

உயிரில்லாத, டிடியின் விளக்கம்

நிலைமை கை மீறிப்போனதால், டிடி தமிழ் தொலைக்காட்சி, ‘வள வள.. கொழ.. கொழ’வென உயிரற்ற ஓர் அறிக்கையை வெளியிட்டு சமரச முயற்சியில் ஈடுபட்டது.

டிடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் போது, கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார் – கவனக்குறைவால் நடந்த இந்தத் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை’’ என வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த விளக்கம் யாரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்பதே உண்மை.

டிடி நிகழ்ச்சிக்கு மறுநாள், (சனிக்கிழமை) தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் ரவி உள்ளிட்டோர் முழுமையாகப் பாடினர்.

ரவியை மாற்றத் திட்டம்

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் சாசனத்தின் 156 – வது விதியின்படி, ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். ஆனால், குடியரசுத் தலைவர் விரும்பும் வரை, ஆளுநர் தொடர்ந்து பதவியில் நீடிக்க அதே விதி வகை செய்கிறது.

தமிழக ஆளுநராகப் பதவி ஏற்கும் முன்பாக ரவி, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்துள்ளார். ஆளுநராக அவர் பதவி ஏற்று, 5 ஆண்டுகள் 3 மாதம் ஆகிறது.

தமிழ்த்தாய் பாடல் விவகாரத்தால், ரவியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுப்பெற்றுள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

ரவியை மாற்றிவிட்டு, புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, வி.கே.சிங், தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளராக இருந்தவர். தமிழகத்தின் கள நிலவரம் அறிந்தவர்.

– மு.மாடக்கண்ணு.

Comments (0)
Add Comment