போகன்வில்லா – என்னதான் நடக்குது?

நினைவுகளை இழத்தல் என்ற விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு பல வகைமைகளில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

அவை ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதன் வழியாகத் திரைக்கதையில் பல ஆச்சர்யகரமான, அதிர்ச்சிகரமான திருப்பங்களைச் சொல்ல முடியும் என்பதே அதற்குக் காரணம்.

அந்த வரிசையில், ‘த்ரில்’ உணர்வை ஊட்டுகிறது அமல் நீரட் இயக்கிய மலையாளப் படமான ‘போகன்வில்லா’ (Bougainvillea­).

இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோதிர்மயி இருவரும் பிரதானப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பகத் பாசில், வீணா நந்தகுமார், ஸ்ரீந்தா, ஷரப் யூ தீன், ஜினு ஜோசப் உள்ளிட்ட பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

போகன்வில்லா என்பது ‘காகிதப்பூ’ என்று நாம் வழக்கமாகச் சொல்கிற ஒரு மலர். வேலிகளில் படரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செடியில் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் இம்மலர்கள் இருக்கும்.

பெரும்பாலும் பிரேம்களை அலங்கரிக்கிற வகையில் அவற்றின் இருப்பு இருக்கும். இப்படத்தில் அந்த இருப்பே இருள் சூழ்ந்த ஒரு புதிரை மறைக்க உதவுகிறது. அது எப்படி என்று விவரிக்கிறது இதன் திரைக்கதை.

சரி, ‘போகன்வில்லா’ தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

ஒரு புதிர்!

இடுக்கி பகுதியில் டாக்டர் ராய்ஸ் தாமஸும் (குஞ்சாக்கோ போபன்) அவரது மனைவி ரீத்துவும் (ஜோதிர்மயி) வாழ்ந்து வருகின்றனர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு விபத்தில் அம்னீஷியா தாக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார் ரீத்து.

விபத்துக்கு முன் நடந்தது நினைவில் இல்லாதது போலவே, அதிர்ச்சிகரமானதாக ஏதேனும் நிகழ்ந்தால் அப்போது நடப்பவற்றைக் கூட மறந்துவிடும் பாதிப்புக்கு ஆளாகிறார். அதனால், அவரைக் கவனித்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறார் ராய்ஸ் தாமஸ்.

அவர் இல்லாத நேரங்களில் ரீத்துவைக் கவனிக்க ஒரு வேலைக்காரப் பெண்ணையும் அமர்த்தியிருக்கிறார். அப்பெண்ணின் பெயர் ரெமா (ஸ்ரீந்தா). அவரது கணவர் பிஜு (ஷரப் யூ தீன்) ஒரு கார் டிரைவர்.

வெளியே செல்ல வேண்டும் என்று ரீத்து நினைக்கும்போதெல்லாம், அவர்கள் இருவரும் உடன் வருகின்றனர்.

இந்த நிலையில், தேனியைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகரின் மகள் காணாமல் போன வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் சிறப்புப்படை அதிகாரி டேவிட் கோஷி (பகத் பாசில்) ராய்ஸின் வீட்டுக்கு வருகிறார். அந்தப் பெண்ணின் பெயர் சாயா.

அப்பெண் படிக்கும் கல்லூரிக்கு ஏழெட்டு முறை ரீத்து சென்று பார்த்ததாகவும், காணாமல் போன அன்று அவரை கேட்டில் இருந்து அழைத்துச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருப்பதாகவும் கூறுகிறார். ஆனால், ரீத்துவுக்கு எதுவும் நினைவில் இல்லை.

ஏற்கனவே, அப்பெண் காணாமல் போன தகவலை டிவி நியூஸில் பார்த்தவுடன் ‘இவரை எங்கேயோ பார்த்து பேசியதாக நினைவு’ என்று ரெமாவிடம் ரீத்து சொல்லியிருக்கிறார். அதைத் தவிர வேறெதுவும் அவரது நினைவுக்கு வருவதில்லை.

அதேநேரத்தில், சாயாவைப் போலவே மேலும் சில இளம்பெண்கள் கடந்த சில ஆண்டுகளில் காணாமல் போயிருப்பதைக் கண்டறிகின்றனர் போலீசார்.

தனக்கு அவர்களைக் குறித்து எதுவும் தெரியாது என்று ரீத்து சொன்னாலும், ஏதோ ஒரு பிணைப்பு அவர்களோடு அவருக்கு இருப்பதை உணர்கிறார் டேவிட் கோஷி.

ரீத்துவைத் தவிர வேறு எவரையும் அப்பெண்கள் காணாமல் போன வழக்கில் விசாரிக்க முடியாது எனும் நிலையில், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழுக்கின்றனர் போலீசார்.

அப்போது, கிரிமினாலஜிஸ்ட் மீராவின் (வீணா நந்தகுமார்) உதவியை நாடுகின்றனர்.

மீரா மெல்ல பேச்சு கொடுத்து, ரீத்துவின் இயல்பு மட்டத்தை அறிய முயற்சிக்கிறார். அப்போது, அவர் குறித்த பல தகவல்கள் போலீசின் பார்வைக்கு வராமல் போயிருப்பதை அறிகிறார். அதற்குப் பிறகு, அவரும் காணாமல் போகிறார்.

அந்தக் கணத்தில், ‘என்னதான் நடக்குது’ என்ற பதற்றம் நம்மைத் தொற்றுகிறது.

சாயாவைப் போன்று காணாமல் போன இளம்பெண்கள் என்னவாயினர்? அந்த புதிருக்கு விடை கிடைத்ததா என்று நீள்கிறது ‘போகன்வில்லா’வின் மீதி.

பசுமை படர்ந்திருக்கும் இடுக்கி நிலப்பரப்பு, இப்படத்தில் சாம்பலும் நீலமும் கலந்த வண்ணத்தில் தோற்றமளிக்கிறது.

அது மேற்கத்திய படங்களைப் பார்த்த உணர்வைத் தோற்றுவித்தாலும், கதைக்குப் பொருத்தமாக இருப்பதை ஏற்கத்தான் வேண்டும்.

அது மட்டுமல்லாமல், ஒரு புதிரில் விடையைத் தேடுவதற்குப் பல கேள்விகளைத் தருவது போன்று இக்கதை முழுமையாக ரீத்துவைச் சுற்றியே நகர்கிறது. அந்த புதிர் விடுபடும் இடம் உண்மையில் ஆச்சர்யத்தைத் தருகிறது.

அதேநேரத்தில், ஏற்கனவே இந்தக் கோணத்தில் போலீசார் விசாரித்திருக்கலாமே என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அது மட்டுமே ‘போகன்வில்லா’வின் பலவீனம். அதனைக் கடந்துவிட்டால், நிச்சயமாக இப்படம் சுவாரஸ்யத்தைத் தரும்.

வித்தியாசமான ‘ஜோதிர்மயி’!

’தலைநகரம்’ படத்தில் ‘த்ரிஷா கிடைக்கலேன்னா திவ்யா’ என்று வடிவேல் வசனம் பேசுவாரே, அந்த திவ்யாவாக நடித்தவர் ஜோதிர்மயி.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘போகன்வில்லா’.

நரைத்து பஞ்சுபஞ்சாக இருக்கும் தலைமுடி, நினைவுகள் இல்லாத வருத்தம், எதிர்ப்படும் எதையும் புதிதாகப் பார்க்கும் மிரட்சி என்று இப்படம் முழுக்க வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தருகிறார். ஆனால், ஒருகட்டத்தில் அது ‘ஓவர்டோஸ்’ ஆக மாறியதைச் சரிப்படுத்தியிருக்கலாம்.

குஞ்சாக்கோ போபன் ஒரு அழகான நாயகன். விதவிதமான வகைமைப் படங்களில் நடித்தபோதும், இன்னும் புதிதாகவே திரையில் தெரிகிறார். இதிலும் அப்படியே. ஆனால், அவருக்கான ‘ஸ்கோப்’ பெரிதாகக் காட்சிகளில் வெளிப்படவில்லை.

பகத் பாசில் இதில் ஒரு பாத்திரமாகத் தோன்றியிருக்கிறார். ‘ஆவேஷம்’ போன்ற படங்களில் திரை முழுக்க ஆக்கிரமிப்பவர், இதில் ‘சும்மா’ வந்து போயிருப்பதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஸ்ரீந்தா மற்றும் ஷரப் யூ தீனுக்குக் கூட இதில் பெரிதாக முக்கியத்துவம் இல்லை. இவர்கள் தவிர்த்து வீணா நந்தகுமார், ஜினு ஜோசப் உட்பட இப்படத்தில் சுமார் ஒரு டஜன் பேர் வந்து போயிருந்தால் அதிகம்.

ஜோதிர்மயி தவிர்த்து வேறு எவருக்கும் இப்படத்தில் முக்கியத்துவம் இல்லை. இது போன்றதொரு த்ரில்லரில் அது நிச்சயமாக இருந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் மையப்பாத்திரத்தின் வலு நமக்குத் தெரிய வந்திருக்கும். அது எதனால் ‘மிஸ்’ ஆனது என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.

ஆனந்த் சி சந்திரன் படத்தின் கதையிலுள்ள இருண்மைக்கு ஏற்றவாறு ஒளி வண்ணங்களைக் காட்சிகளில் நிறைத்திருக்கிறார். தொடக்கம் முதலே கதையில் கவனம் செல்வதால், அது நம் பார்வையில் புலனாவதில்லை என்பதே உண்மை.

ஜோசப் நெல்லிக்கல்லின் தயாரிப்பு வடிவமைப்பு, விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு, ரோனக்ஸ் சேவியரின் ஒப்பனை, தபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பு என்று பல தொழில்நுட்ப அம்சங்கள் இதில் பாராட்டும்படியாக இருக்கின்றன.

சுப்ரீம் சுந்தர், மகேஷ் மேத்யூவின் சண்டைக்காட்சி வடிவமைப்பும் அதில் அடக்கம்.

மேற்கத்திய பாணி படங்களை நினைவூட்டும்விதமாகப் பின்னணி இசை அமைப்பதற்குப் பதிலாக, பாத்திரங்களின் இயல்பைப் பிரதிபலிக்கும் வகையில் அதனை அமைத்திருக்கிறார் சுஷின் ஷ்யாம். அது வித்தியாசமான காட்சியனுபவத்தைத் தர உதவியிருக்கிறது.

லஜோ ஜோஸ் எனும் நாவலாசிரியர் எழுதிய ‘ரூத்திண்ட லோஹம்’ என்றும் கதையின் திரை வடிவம் இது.

அதற்கு எவ்வளவு தூரம் இயக்குனர் அமல் நீரட் உண்மையாக இருந்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், சில விஷயங்கள் முழுமையாக வெளிப்படவில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

சாயா காணாமல்போனபோது ரீத்து அங்கு சென்றது மட்டுமே இந்தக் கதையில் குறிப்பிடப்படுகிறது.

குறிப்பிட்ட நாட்களில் அவர் அங்கு எப்படிப் போனார் என்பதற்கான பதில்கள் சொல்லப்படவே இல்லை. சிசிடிவி காட்சிகள் தான் ஆதாரம் எனும்போது, வேறு இடங்களில் இருந்தும் அவற்றைத் திரட்ட முடியுமே என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

போலவே, இதில் வரும் பிளாஷ்பேக் காட்சியும் அந்தரத்தில் தொங்கும் ஊஞ்சலாக இருக்கிறது. இக்கதையோடு அது பிணைந்திருக்கும் விதம் சரியாகச் சொல்லப்படவில்லை. தணிக்கையில் அது சிக்கலை உருவாக்கும் என்று தவிர்க்கப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

அவ்வாறு நிகழ்ந்திருந்தால், அதுவே மாபெரும் தவறாக இருக்கும். ஏனென்றால், இப்படத்தின் கிளைமேக்ஸை நாம் சீரணிக்கும் மருந்தாக அதுவே இருக்கிறது. அப்படியிருக்க, அதனைச் சரியாகச் சொல்வது அவசியம் இல்லையா? இயக்குனர் அமல் நீரட் அதனை மறந்திருக்கிறார்.

அந்தக் குறையைத் தாண்டிச் சென்றால், ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தில் நாம் இருப்பதைப் போன்ற உணர்வையூட்டும் இந்த ‘போகன்வில்லா’. அந்த அனுபவம் வேண்டும் என்பவர்கள் மட்டும் இப்படத்தைக் காணலாம்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

விமர்சனம்
Comments (0)
Add Comment