சார் – காற்றில் கரைந்த பாடங்கள்!

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி சீரியல்கள் வழியே அறிமுகமாகித் திரைப்படங்களில் தனித்துவமான சில பாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியவர். ‘கன்னிமாடம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானவர், இப்போது இரண்டாவதாக ‘சார்’ படம் தந்திருக்கிறார்.

கடந்த 75 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி எப்படியெல்லாம் நிகழ்ந்தது என்று சொல்லும்விதமாக இப்படத்தை ஆக்கியிருக்கிறார். ’மாங்கொல்லை’ எனும் ஊரில் தடைகளை மீறி ஒரு பள்ளி எவ்வாறு வளர்ந்தது என்றும் சொல்கிறது இப்படம்.

சரி, ‘சார்’ தரும் அனுபவம் எப்படியிருக்கிறது? படத்தில் பிரச்சார நெடி இருக்கிறதா?

‘மூன்று காலகட்ட’ கதை!

1950-களில் மாங்கொல்லையில் முதன்முறையாக ஒரு ஆரம்பப் பள்ளியைத் தொடங்குகிறார் அண்ணாதுரை. அதற்கு, அவ்வூரில் ஆதிக்கம் செலுத்திவரும் கோலுச்சியார் குடும்பம் தடையாக இருக்கிறது. அதனை மீறி, அவர் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்துகிறார்.

பத்தாண்டுகள் கழித்து, அண்ணாதுரைக்குப் பைத்தியம் பிடித்ததாகச் சொல்கின்றனர் ஊர் மக்கள். அதே பள்ளியில், அவருக்குப் பின் ஆசிரியராகப் பணியாற்றும் பொன்னரசனாலும் (சரவணன்) அந்த நிலைமையை மாற்ற முடிவதில்லை.

தந்தையின் வழியில் கிராம மக்களின் கல்வி உயர்வுக்காகப் பாடுபடும் பொன்னரசன், அதனை நடுநிலைப்பள்ளியாக மாற்றுகிறார். ஆனால், மேல்நிலைப்பள்ளியாக உயர்த்த வேண்டுமென்ற அவரது ஆசை நிராசையாகிறது. அதற்குள் அவர் ஓய்வு பெறுகிறார்.

அதேநேரத்தில், தனது கனவைச் செயல்படுத்தும்விதமாக ராமநாதபுரத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் மகன் சிவஞானத்தை (விமல்) அப்பள்ளிக்கு மாற்றலாகி வரச் செய்கிறார்.

‘ஆசிரியர் என்பது ஒரு வேலை’ என்ற எண்ணம் கொண்டவர் சிவஞானம். ‘அது ஒரு தொண்டு’ என்ற சிந்தனை உள்ளவர் பொன்னரசன்.

சிவஞானத்தால் தனது தந்தையின் கனவைச் செயல்படுத்த முடிந்ததா? பள்ளியை ஒழுங்காக நடத்தவிடாமல் பொன்னரசனுக்கு இடையூறுகள் செய்த கோலுச்சியார் குடும்பம், சிவஞானம் காலத்தில் என்னவானது? சிவஞானம் ஆசிரியருக்கான எடுத்துக்காட்டாக விளங்கினாரா என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் மீதிக்கதை.

1950, 1960, 1980 என்று மூன்று காலகட்டங்களில் நிகழ்வதாக இக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட். ஆனால், அதில் பாத்திரங்களின் உருமாற்றத்தைக் காட்சிகளாக மாற்றியது கோர்வையாக இல்லை. அவற்றின் வார்ப்பும் நோக்கமும் கூடத் தெளிவாகச் சொல்லப்படவில்ல. அதனால், ஓட்டுநர் இல்லாத வாகனமாகப் பயணிக்கிறது திரைக்கதை.

குறியீடு வைத்தால் போதுமா..?!

விமல் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். எண்பதுகளில் இருந்தவர்கள் போன்று தலைமுடி, ஆடை அணியும் விதம் என்று மாறுபாடு காட்டியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் வந்த நடிகர்களின் பாணியைப் பின்பற்றியிருந்தால் இப்படத்திற்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.

நாயகியாக வரும் சாயா தேவிக்கு இக்கதையில் பெரிதாக வேலை இல்லை. ‘கடமைக்கு வந்தேன் போனேன்’ என்று அவரது இருப்பு திரைக்கதையில் அமைந்திருக்கிறது.

இக்கதையின் பெரிய பலவீனம், வில்லன்களுக்கு முக்கியத்துவம் தரப்படாதது. படத்தில் யார் வில்லன் என்று நமக்குப் புரிவதே இல்லை. இதில் ‘சஸ்பென்ஸ்’ திருப்பம் வேறு இருக்கிறது.

சரவணன், ரமா நடிப்பு சொல்லும்படியாக இருக்கிறது. ஆனால், அதற்குப் பலன் ஏதும் திரையின் வழியே கிடைக்கவில்லை.

விஜச ஜெயபாலன், தயாரிப்பாளர் சிராஜ், கலை இயக்குனர் விஜய் முருகன் உட்படப் பலர் இதில் நடித்திருக்கின்றனர். போஸ் வெங்கட்டும் ஒரு காட்சியில் தலைகாட்டியிருக்கிறார்.

போஸ் வெங்கட் இப்படத்தின் கதை, திரைக்கதையைக் கையாண்டிருக்கிறார்.

‘கல்வியே இச்சமூகத்தை மடைமாற்றியது.. அதற்குப் பல தடைகளைச் சில ஆசிரியர்கள் கடக்க வேண்டியிருந்தது..’ என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறது கதை. ஆனால், திரைக்கதையில் அக்கருத்து சரிவர வெளிப்படவில்லை.

‘பொறுப்பில்லாமல் திரியும் நாயகன் ஒருகட்டத்தில் சரியான இலக்கு நோக்கிப் பயணிக்கிறான்’ என்று கதை சொல்ல முற்பட்டிருந்தாலும், அது ரசிகர்களுக்குப் புரிந்தால் தானே சுவாரஸ்யமாகத் திரையை நோக்க முடியும். அப்படிப் புரிவதற்கான வாய்ப்புகளே இப்படத்தில் இல்லை.

படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் ஸ்ரீஜித் சாரங், சில காட்சிகளை தாமதமாகச் சேர்த்திருக்கிறார். விஜய் முருகனிடம் விமல் சவால் விடுகிற காட்சி அதற்கொரு உதாரணம். அது மட்டுமல்லாமல், இப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிற வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரிஷ், கலை இயக்குனர் பாரதி புத்தர் உட்படப் பலர் இயக்குனரின் கனவுக்கு உருவம் தர முயன்றிருக்கின்றனர். இசையமைப்பாளர் சித்துகுமாரின் பங்களிப்பு அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கிறது.

அவரது இசையில் சில பாடல்கள் கேட்டவுடன் வசீகரிக்கின்றன. முன்பாதி படத்தில் அவரது பின்னணி இசை அருமை.

‘சார்’ திரைப்படத்தைப் பொறுத்தவரை, இதன் திரைக்கதை ட்ரீட்மெண்டை எவ்வாறு கையாள்வது என்பதில் தடுமாறியிருக்கிறார் போஸ் வெங்கட். வழக்கமான கமர்ஷியல் படத்தைப் போலச் சில காட்சிகளை அமைத்திருக்கிறார். சமத்துவ நீதி பேசுவதாகச் சில காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பெரியார் போன்று அண்ணாதுரை பாத்திரத்தின் தோற்றத்தைக் காட்டியது, விமலின் பாத்திரத்திற்கு மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்று பெயரிட்டது என்று சில விஷயங்களைப் பார்த்துப் பார்த்துச் சேர்த்திருக்கிறார்.

அவற்றைச் செய்தவர், இக்கதையை இன்னொருவரிடம் கொடுத்து திரைக்கதை ஆக்கியிருக்கலாம். அதனைச் செய்யாத காரணத்தால், ‘குறியீடுகள் வைத்தால் போதுமா’ என்ற கேள்வி எழுகிறது. அவர் சொல்ல முயன்ற கருத்துகள் ‘காற்றில் கரைந்த பாடங்களாக’ ஆகியிருக்கின்றன.

திரையில் ‘மெசேஜ்’ சொல்வதில் தவறில்லை. ஆனால், அதனைச் சொல்கிறேன் பேர்வழி என்று திரைக்கதையைக் கோட்டைவிடுவதைக் கிஞ்சித்தும் ஏற்க முடியாது. அதனால், ஒரு ரசிகராக ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
சார் விமர்சனம்
Comments (0)
Add Comment