ஜோதிகா. தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த நாயகிகளில் ஒருவர். இன்றும் அவர் நடித்த படம் வெளியாகிறது என்றால், முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கத் திரளும் கூட்டம் கணிசம்.
அது, அவரது நடிப்புத்திறன் எவ்வளவு பேரால் ரசிக்கப்படுகிறது என்பதற்கான சான்று. அதனாலோ என்னவோ, இன்றும் அவர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அவ்வாறில்லாத வாய்ப்புகளுக்கு ‘நோ’ சொல்லிவிடுகிறார். அதுவும் கூட, அவரது ரசிகர்களின் தீவிர ‘ரசிகத்தன்மை’க்கு ஒரு காரணம்.
அப்படிப்பட்ட ஜோதிகா, இன்று தனது 46 வயதை நிறைவு செய்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தான் முதலில் நம்மைத் தொற்றுகிறது.
இருபத்தைந்து ஆண்டுகளாக அவரைத் தமிழ் ரசிகர்கள் கண்டு வருகின்றனர் என்பதும், இப்போதும் அவர்களுக்குப் பிடித்தமான பாத்திரங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் அதற்கடுத்த ஆச்சர்யங்கள்.
பாவனைகளுக்கு முக்கியத்துவம்!
பிரியதர்ஷன் இந்தியில் இயக்கிய ‘காதலுக்கு மரியாதை’ ரீமேக் ஆன ‘டோலி சஜா கே ரஹ்னா’வில் நாயகியாக அறிமுகமானவர் ஜோதிகா.
நக்மாவின் இளைய தங்கை என்பதால், அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கலாம். ஆனால், அதற்கடுத்துப் பெரிதாகப் படங்கள் ஏதும் அவரைத் தேடிச் செல்லவில்லை.
அப்போது, இயக்குநர் வசந்த் சாய் தான் ஜோதிகாவை ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் நாயகியாக ஆக்கினார்.
அதன் வழியே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாக வேண்டியவர், ‘வாலி’ படத்தில் சோனாவாக வந்து வசீகரித்தார்.
அப்படத்தில் இருந்த அவரது ஐந்தாறு நிமிட இருப்பே, அவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் உருவாகப் போதுமானதாக இருந்தது.
பிறகு ‘முகவரி’ படம் வெளியானது. அதில், வழக்கமான ஒரு நாயகியாகவே நடித்திருந்தார் ஜோதிகா.
காதல் காட்சிகள் மட்டுமல்லாமல் இதர உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவர் நடித்திருந்த விதம் அக்கால நாயகிகளிடத்தில் இருந்து வேறுபட்டிருந்தது.
அவர் வெளிப்படுத்திய முகபாவனைகளில் ‘அதீத நடிப்பு’ தெரிந்தது. ஆனாலும், ரசிகர்கள் அதனை அவரது இயல்பாக எடுத்துக்கொண்டார்கள்.
‘குஷி’ படத்தில் அதுவே அவருக்கென்று தனிப்பட்ட அடையாளமாக மாறிப்போனது. விஜய்யைத் தேடி அவரது வீட்டுக்குச் செல்லும் காட்சி, அவர் நடித்த முத்திரைக் காட்சிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
அதில், சுவரொட்டியை விஜய் கிழித்துப் போட, அதனை தனது நைட் ட்ரஸ் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஆத்திரத்துடன் அவர் திரும்பி வருவார்.
அக்காட்சிக்கு தியேட்டரே அதிரும் அளவுக்குச் சிரிப்பொலி எழுந்தது.
விஜயகுமாரை விஜய் கல்லூரி வளாகத்திற்குள் அழைத்து வரும் காட்சியிலும் அதே போன்றதொரு வரவேற்பினைத் தந்தார்கள் ரசிகர்கள்.
‘ரிதம்’, ‘தெனாலி’, ‘சினேகிதியே’, ‘டும் டும் டும்’, ‘ஸ்டார்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘12பி’, ‘ராஜா’, ‘ஒன் டூ த்ரி’, ‘தூள்’ என்று பல படங்களில் இது போன்ற உணர்வினைப் பெற்றனர் ரசிகர்கள்.
அந்த காலகட்டத்திற்குப் பிறகு, கொஞ்சம் ‘மெச்சூர்டு லேடி’யாக ஜோதிகாவைக் காட்டின பிரியமான தோழி, காக்க காக்க போன்ற படங்கள். ‘சந்திரமுகி’ அதில் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது. ‘வேட்டையாடு விளையாடு’ அதற்கான கிளாசிக் உதாரணமாகிப் போனது.
சூர்யா – ஜோதிகா திருமணத்திற்கு முன்பாக, இருவரையும் திரையில் ஒருசேரக் காட்டிய படம் ‘சில்லுன்னு ஒரு காதல்’. அதில் இருவரது நடிப்பும் ‘அசாதாரணமானதாக’ இருக்கும்.
முக்கோணக் காதல் கதையாக இருந்த காரணத்தால், அப்படம் வெளியான காலமே அதற்கு எதிரானதாக அமைந்தது.
ஆனால், அதையும் மீறி ‘நியூயார்க் நகரம்’ பாடலின் இதம் இன்றளவும் மனதுக்குள் உலா வருகிறது.
ராதாமோகனின் ‘மொழி’ தயாரிப்பில் சில காலம் இருந்தது. ஜோதிகாவின் திருமணத்திற்குப் பின்னர் வெளியானது.
அப்படத்தில் அவரது நடிப்பு, ‘திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டாரே’ என்று ரசிகர்கள் ஆதங்கப்படும் அளவுக்கு இருந்தது.
அந்தப் படத்தில் மிக நுணுக்கமான உணர்வுகளை, அசைவுகளை வெளிப்படுத்தியிருப்பார் ஜோதிகா.
தொடக்க காலத்தில் தமிழ் மொழி புரியாமல் முக பாவனைகளுக்கு முக்கியத்துவம் தந்து நடித்தவர், அந்தப் படத்தில் அதனை மட்டுமே வெளிப்படுத்துவது எப்படி என்பதில் தனது அனுபவத்தின் சாரத்தை வெளிக்காட்டியிருப்பார்.
கதைத் தேர்வில் கவனம்!
திருமணத்திற்குப் பிறகு ‘36 வயதினிலே’ படத்தில் தோன்றினார் ஜோதிகா.
அது, ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் மன வாட்டத்தை, தினசரி வாழ்வை, அதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசியிருந்தது. அந்தப் படம் வெளியானபோது, அவரது வயது 37.
பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே ஆகிய தமிழ் படங்களிலும், காதல் = தி கோர் எனும் மலையாளப் படத்திலும், இந்தியில் சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய படங்களிலும் நடித்தார் ஜோதிகா.
இந்த படங்கள் அனைத்திலும் அவரது பாத்திரங்கள் வழக்கத்திற்கு மாறானதாகவே அமைந்திருந்தன. அவற்றை ஒழுங்குபடுத்தினால் சில அம்சங்கள் பொதுவானதாகத் தென்படும்.
சுயாதீனமாகச் செயல்படுகிற பெண்ணாக, சமத்துவத்தைத் தினசரி வாழ்வில் பின்பற்றுகிறவராக, பொதுவெளியில் இயல்பான குணங்களை வெளிப்படுத்துகிறவராக, அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறவராகத் தென்பட்டிருப்பார்.
தம்பி, உடன்பிறப்பே போன்ற ‘செண்டிமெண்ட்’டுக்கு முக்கியத்துவமிக்க படங்களிலும் கூட மேற்சொன்னதை நாம் காண முடியும்.
‘காதல் – தி கோர்’ படம் அதில் இன்னும் உச்சம். அந்தப் படத்தில் ஜோதிகா நடித்துள்ள பல காட்சிகள் இதுவரை நாம் பார்த்ததில்லை என்று கூடச் சொல்லலாம்.
அதைப் போலவே சைத்தான், ஸ்ரீகாந்த் படங்களிலும் நடுத்தர வயதுப் பெண்ணாகவே தோன்றினார்.
ஆக, தன் வயதுக்கு ஏற்ற பாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜோதிகா. இன்னும் சில ஆண்டுகள் கழித்து நாயகனுக்கோ, நாயகிக்கோ தாயாகவும் அவர் நடிக்கக் கூடும்.
ஆனால், அப்போதும் கூடத் தன் பாத்திரத்திற்கான வார்ப்பில் அவர் சமரசம் செய்துகொள்ள மாட்டார்.
அந்த எண்ணத்தை அவரது ரசிகர்களிடத்தில் அழுத்தமாக விதைத்திருக்கின்றன அவரது படங்கள். அதுவே, இதர நடிகைகளிடம் இருந்து ஜோதிகாவை வித்தியாசப்படுத்துகிறது.
இந்த ‘46 வயதினிலே’ இன்னும் ஆகச்சிறந்த திரை இருப்பை ஜோதிகா வெளிப்படுத்தக்கூடும். அதற்காகக் காத்துக் கிடக்கிறது அவரது ரசிகக் கூட்டம்..!
– மாபா