அடிமைகளின் போராட்டங்களை விளக்கும் வரலாற்று நூல்!

நூல் அறிமுகம்:

ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் அமெரிக்க வெள்ளையர்களுக்கும் நடக்கக்கூடிய போராட்டத்தை கனத்த எழுத்துக்களோடு ஆசிரியர் எழுதியுள்ளார்.

பெரும்பாலும் ஆசிரியர்கள் பொதுவாக ஒரு புத்தகத்தை எழுதும் போது சில மாதங்களோ அல்லது ஒரு வருடமோ கூட எடுத்துக் கொள்ளலாம் .ஆனால் இந்த புத்தகத்தை எழுதுவதற்கு ஆசிரியர் கிட்டத்தட்ட 12 வருடங்கள் எடுத்துக் கொண்டார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம் 12 வருடங்களாக தன்னுடைய மூதாதையர்களுடைய ஒவ்வொரு அடையாளங்களையும் கண்டுபிடித்து அதனை ஆவணப்படுத்தி உள்ளார் ஆசிரியர்.

ஒரு சில புத்தகங்கள் படிக்கும் போது இடை இடையே சில பத்திகள் நமக்கு ஆனந்தத்தை தரலாம் சிரிப்பை தரலாம் அல்லது அழுகையை தரலாம் இல்லை கோபத்தை கூட தரலாம் ஆனால் இந்த புத்தகம் வாசித்து முடிக்கும் வரையில் கண்களில் கண்ணீர் மட்டுமே தந்தது.

குண்ட்டா என்ற ஒரு ஆப்பிரிக்க மனிதர் தன்னுடைய தேசத்தில் இருக்கும் வரை உல்லாசமாக திரிந்து காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறான். இருந்தாலும் இந்த ஆப்பிரிக்க இன மக்களுக்கு அமெரிக்காவில் இருந்து வரும் பூச்சாண்டி களை பற்றி தம் முன்னோர்கள் கூறிக் கொண்டே வருகின்றனர்.

குண்ட்டா ஒரு நாள் எதிர்பாராத விதமாக வெள்ளையர்களிடம் சிக்கிக் கொள்கிறான். இவனோடு சேர்ந்து 98 ஆப்பிரிக்க அடிமைகளும் வெள்ளையர்களுடன் கடலில் பயணம் செய்கின்றனர்.

கிட்டத்தட்ட நான்கரை மாதங்களாக கடலில் பயணம். கடலின் அடிபாகத்தில் நடப்பதற்கு கூட இடமில்லாத அந்த ஒரு சிறு குறுகிய இடத்தில் 98 அடிமைகளையும் வெள்ளையர்கள் செய்யும் கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

ஒவ்வொரு நாளும் அவர்களின் முதுகுகளில் கசையடிகளும் அந்த கசையடிகளின் மேல் உப்பு தண்ணீரும், ஒரே இடத்தில் அவர்கள் எடுக்கும் வாந்தியும் மலமும் காய்ந்து அந்த நாற்றத்தில் நான்கரை மாதங்களாக அந்த கப்பலிலேயே பயணம் செய்கின்றனர்.

படிக்கும் பொழுதே இவ்வளவு கொடுமையாக இருக்கிறது இதை அனுபவித்தவர்களை நினைத்தால் எல்லார் கண்களிலும் ஒரு துளி கண்ணீர் வெளியே வந்து எட்டிப் பார்க்காமல் இருக்காது.

குண்ட்டா அமெரிக்காவில் ஒரு நில ஜமின் தாரரால் அடிமையாக விலைக்கு வாங்கப்படுகிறான். அடிமை என்கின்ற எண்ணம் அவனை ஓயாமல் துரத்துகிறது. நான் அடிமை இல்லை என் தேசத்திற்கு நான் செல்ல வேண்டும் என்று எத்தனையோ முறை முயற்சிக்கின்றான். அவனுடைய ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது.

குண்ட்டா வின் பல முயற்சிகள் தோல்வியில் முடிந்த பின்பு ஒரு காலையும் இழந்து வேறு வழி இன்றி தன்னுடைய முயற்சிகளை கைவிடுகின்றான்.

தான் ஒரு மனிதன் என்று உணர்வே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது குண்டாவிற்கு. மீதமுள்ள தன் வாழ்நாளில் இங்கேயே கழிக்க வேண்டுமா? அந்நிய மண்ணில் நாம் எதற்காக வாழ வேண்டும். நமக்காக இங்கே யார் இருக்கின்றனர் இந்த கேள்விகள் எல்லாம் குண்டாவை பயமுறுத்தியது.

குண்டாவிற்கு பெல் லுடன் திருமணம் ஆகிறது. எனக்கு பிறந்த குழந்தைக்கு குண்ட்டா ஆப்பிரிக்காவில் உள்ள தன்னுடைய தாய் தந்தையைப் பற்றியும் அவர்களின் மாண்டியங்கா மொழியைப் பற்றியும் கூறிக்கொண்டே வருகிறான்.

இப்படியாக இவர்கள் ஆறு தலைமுறைகளாக அடிமைகளாகவே தங்களின் வாழ்க்கையை கடத்துகின்றனர். இவர்களின் ஆறாவது தலைமுறையில்தான் இவர்களுக்கான சுதந்திரம் கிடைக்கின்றது. ஏழாவது தலைமுறையாக ஆசிரியர் அலெக்ஸ் கேலி என்பவர் பிறக்கிறார்.

இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு தலைமுறையும் தன்னுடைய அடுத்த தலைமுறைக்கு தங்களுடைய மூதாதையர்களுடைய பெயர்களையும் அவர்களுடைய மொழியையும் கடத்தியது தான்.

இப்படி அடிமை வாழ்க்கை வாழ்ந்த ஆர்ப்பரிக்க அடிமைகளின் கொடுமையான வாழ்க்கை முறையையும் அடிமையிலிருந்து தாம் விடுபட அவர்கள் செய்த போராட்டங்களையும் கூறுகின்ற ஒரு வரலாற்று நூல் இந்த ஏழு தலைமுறைகள்.

இடையிடையே ஆசிரியர் அந்த காலகட்டத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகளையும் இதில் குறிப்பிட்டுள்ளது மிக சிறப்பாக உள்ளது. அடிமைகளுக்காக போராடிய தலைவன் ஆபிரகாம் லிங்கன். அவர் அடிமைகளுக்காக போராடியதும் அதனால் அவர் கொல்லப்பட்டதும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பு.

ஆசிரியர் குண்ட்டா வின் குழந்தைப் பருவம் வாலிபம் சிறைவாசம் கடல் பிரயாணம் இவற்றையெல்லாம் அனுபவித்து எழுத வேண்டும் என்பதற்காக ஆப்பிரிக்கா சென்று கப்பலில் அடி பாகத்தில் தன்னுடைய பாதி உடைகளுடன் சென்று அவரும் அந்த வேதனைகளைபட்டு அதன் பின்னே குண்ட்டா பட்ட வேதனைகளை தத்ரூபமாக எழுத்து வடிவில் நமக்கு அளித்துள்ளார் ஆசிரியர்.

  • நளினி மூர்த்தி

புத்தகம்: ஏழு தலைமுறைகள்
ஆசிரியர்: அலெக்ஸ் ஹேலி
தமிழில்: ஏ ஜி எத்திராஜீலு
சிந்தன் புக்ஸ்
விலை:300/-

#Ezhu_Thalaimuraigal_Book_review #ஏழு_தலைமுறைகள்_நூல் #அலெக்ஸ்_ஹேலி #ஏ_ஜி_எத்திராஜீலு #alex_heli #ag_ethirajeelu

Comments (0)
Add Comment