மக்களின் கதாநாயகர்கள் யார்?

ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன்

நாட்டுப்புறவியலின் முன்னோடியான பேராசிரியர் நா.வானமாமலையுடன் இணைந்து தன்னுடைய ஆய்வுகளைத் துவக்கிய ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய பல நூல்கள் கூடுதலான உழைப்பை உள்ளடக்கியவை. ஆய்வுலகில் விவாதங்களை உருவாக்கியவை.

1943-ம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் பிறந்த சிவசுப்பிரமணியனுக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.

ஆஷ் துரையும், இந்தியப் புரட்சி இயக்கமும், வ.உ.சி.யும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும், சமபந்தி அரசியல், பிள்ளையார் அரசியல், பொற்காலங்கள் ஒரு மார்க்கீசிய ஆய்வுரை, அடிமை முறையும், தமிழகமும் பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் இவை ஒரு உதாரணங்கள் மட்டுமே. இப்படிப்பல நூல்கள்.

இவை எல்லாமே சிவசுப்பிரமணியனின் சமூகப் பார்வையைத் தீவிரமாக முன்னிறுத்திய நூல்கள்.

அவருடனான நேர்காணலிலிருந்து ஒரு பகுதி.

“நம்ம கிட்டே ஆண்டவர்களின் தலைமுறை வரலாறு தான் இருக்கு. சோழர், சேரர், பாண்டியர், அப்புறம் கவர்னர் ஜெனரல்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள் பட்டியல் இப்படி இருக்கு.

சமூக வரலாறுன்னு வரும்போது எதிர்ப்புக்குரல் கண்டிப்பா இருக்கும். இதை ஆதிக்கச் சாதிகள் எழுதிய கல்வெட்டு, செப்புப் பட்டயங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தான் எடுக்க வேண்டியிருக்கு. ஆனா, மக்கள் கிட்டே முழுமையாக எடுக்கணும்னா வழக்காறுகள் தான் ஒரே வழி.

மக்களின் கதாநாயகர்கள் யார்? நெடுஞ்செழியனோ, ராஜராஜசோழனோ மக்கள் கதாநாயகர்கள் இல்லை. முத்துப்பட்டன், காத்தவராயன், சின்னத்தம்பி இவங்க தான் மக்கள் கதாநாயகர்கள்.

இவை தான் கதைப் பாடல்களா இருக்கு. வாய்மொழிக்கதையா இருக்கு. வழிபாட்டுச் சடங்குகளா இருக்கு. அதை எல்லாம் தொகுக்கும்போது, நாம் ஒரு எதிர்க்குரலைக் கேட்க முடியும்.

அதில் உள்ள எதிர்க்குரலையும், மரபு மீறிலையும் பார்க்கிறோமா? வழிபாட்டைப் பார்க்கிறோமா? இது ஒரு கேள்வி. அறிவியல் பூர்வமான நாத்திகர்கள் எண்ணிக்கை இங்கே மிகக் குறைவு. நாத்திகத்தையே பெருமைக்குரிய ஒன்றா ஆக்கமுடியாது. மற்றவர்கள் கும்பிடுறாங்க. நாம விடுபட்டிருக்கோம்.

சமூகச் சிந்தனையில்லாம இதை மறுக்கிறோம்ங்கிற அளவில் சிலரால நாத்திகரா இருக்கமுடியும். மத்தவங்க கிட்டே இருந்து நாம வித்தியாசமானவங்கன்னு பெருமைப்படலாம்.

ஆனால், நாம் சமூகத்தில ஒரு இயக்கத்தை உண்டாக்க வேண்டும். ஒரு எதிர் அணியைக் கட்ட வேண்டும் எனும்போது, அடிப்படைத் தன்மைகள் மீறாதவாறு சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டும்.

உதாரணமா, முருகன் வழிபாடு, நாட்டார் வழிபாடு இருக்குது. முருகன் வழிபாட்டைப் புறக்கணிக்கலாம். சிலர் திருமாலைக் கும்பிட மாட்டேன். முருகன் தமிழ்க்கடவுள்ம்பாங்க.

முருகனும், விஷ்ணுவும் ஒண்ணு தான். அதுல நிறுவனச் சம்பந்தம் உண்டு. ஆனா, ஒரு முத்துப்பட்டனை, காத்தவராயனை, மதுரை வீரனை அப்படிப் பார்க்க முடியாது.

ஏனெனில், இவர்கள் முடங்கிக்கிடந்த காலத்தில், மீறிக் காதலித்தது, தன் வீரத்தால் மற்றவர்களின் அதிருப்தியைச் சம்பாதித்தது, இதெல்லாம் ஒரு எதிர்ப் பண்பாடு.

இவனைப் பார்க்கலைன்னா அவதார புருஷனா ஆக்கிடுவாங்க. தன்னுடைய அடையாளத்தை ஒடுக்கப்பட்ட மக்களும் இழந்திடுவாங்க.

சமூகவியலளாருக்கு அந்தக் கடமை இருக்குது. அவர்களின் சமூக அடையாளத்தை இழக்கவிடக்கூடாது.”

– மணா தொகுத்து வெளியிட்ட நேர்காணல்களின் தொகுப்பான “ஆளுமைகள்-சந்திப்புகள்-உரையாடல்கள்” என்று நூலில் ஒரு பகுதி.

Comments (0)
Add Comment