நூல் அறிமுகம்: நிலவு எனும் கனவு!
8 அத்தியாயங்களை கொண்ட அற்புத அறிவியல் நூல் தான் ‘நிலவு எனும் கனவு’.
1) கோள்கள் மற்றும் துணைக்கோள்கள் 2) புவியும் நிலவும் 3) நிலவுக்குச் சென்ற முதல் விண்கலம் 4) மனிதனின் முதல் நிலவுப் பயணம் 5) நிலவை ஏன் மறந்தோம் 6) ஏன் இரண்டாம் நிலவுப் பயணம்? 7) நிலவின் சமீபத்திய ஆராய்ச்சிகள் 8) கனவை நனவாக்குவோம்.
இந்த நூல் எதிர்காலத்திற்கான அறிவியல் பயணங்கள் குறித்து எளிய தமிழில் பேசுகிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிலவுக்கான ஆராய்ச்சி மீண்டும் முக்கியத்துவம் அடைந்துள்ளது.
நிலவில் சென்று குடியேறுவது எப்போது சாத்தியமாகும்? எப்படி அது சாத்தியமாகும்? என்பதை இந்த நூலில் வழியாக நாம் அறிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 முதல்முறையாக சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையுங்கியது.
இந்த மாபெரும் சாதனையை ஒவ்வொரு இந்தியரும் எப்படிக் கொண்டாடி மகிழ்ந்தனர்!
சந்திரயான் சாதனையைப் பற்றியும், மனிதர்கள் விரைவில் சந்திரனில் வாழத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் என்ன? என்பதையும் இந்த நூலினை வாசிப்பதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.
கடல் அலையை உற்று நோக்கும் பொழுது, சில சமயம் உள்வாங்கும் சில சமயம் பொங்கி எழும், உயர்ந்த அலையும், தாழ்ந்த அலையும் எப்படி ஏற்படுகிறது? செயற்கைக்கோள்கள் எப்படி பூமியைச் சுற்றி வலம் வருகின்றன? கடல் அலைகள் மூலம் மின்சாரம் எப்படி உற்பத்தி செய்கிறார்கள்? பூமியின் ஈர்ப்பு விசையால் நிலவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? இது போன்ற நமது கேள்விகளுக்கு மிக அருமையாக எளிய தமிழில் நமக்கு விடை தந்துள்ளார் நூலாசிரியர்.
செவ்வாய்க் கிரகம் போல் இன்னும் பல கிரகங்களுக்கு சென்று விடலாம் என்ற மனிதனின் கற்பனைக்கு அடித்தளம் நிலவுதான்.
எனவே நிலவைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேலும் விரிவடைய வேண்டும்.
நிலவு புவியிலிருந்து விலகிச் செல்கிறது என்பது உண்மையா?
மாதாமாதம் ஏன் கிரகணங்கள் ஏற்படுவதில்லை?
நிலவில் ஏன் காற்று இல்லாமல் போனது?
கடலில் அலைகள் உருவாவதற்கும் நிலவுக்கும் என்ன சம்பந்தம்?
புவியின் ஈர்ப்பு விசை நிலவை பாதிக்குமா?
நிலவுக்கு செல்வதற்கு எவ்வளவு செலவாகும்? எத்தனை நாள் ஆகும்?
விண்வெளி நிலையம் உருவான வரலாறு.
செவ்வாய்க் கிரகத்திற்கு செல்ல நிலவு வழியாகப் பயணிப்போம்.
நிலவில் ஏன் கூடாரம் அமைக்கக் கூடாது?
நிலவுப் பயணத்தின் குறிக்கோளை அடைவதற்கு ஏன் மனித குலம் ஒன்றாகச் செயல்பட வேண்டும்?
இது போன்ற அறிவியல் வினாக்களுக்கு விடை தேடி, நமக்கு அறிவியல் விருந்து படைத்துள்ளார் நூலாசிரியர்.
நிலவுப் பயணத்தின் குறிக்கோளை அடைவதற்கு மனித குலம் ஒன்றாக இணைந்து செயல்படுவது அவசியம்.
எனவே வரும் இளைய தலைமுறை, குறிப்பாக மாணவர்கள் தங்கள் இளம் பருவத்திலேயே இது போன்ற ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும்.
நிலவு பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ள மாணவர்கள் தயாராகும் பொழுது அதைச் சார்ந்த துறைகளும் நிறுவனங்களும் எளிதில் உருவாக்க முடியும் என்பதை கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர்.
இதன் மூலம் நிலவில் மனிதன் குடியேறி வேறு கிரகங்களுக்கு எளிதில் சென்றுவிட முடியும் என்ற நமது கனவு நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் வாசிக்கும் அன்பர்களுக்கு இந்த நூல் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
தமிழக அரசின் ‘சிறந்த அறிவியல் எழுத்தாளர்’ என்ற விருது பெற்ற நூலாசிரியர் பெ. சசிகுமார் இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். 20-க்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த தமிழ் நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
*****
நூல்: நிலவு எனும் கனவு!
ஆசிரியர்: அறிவியல் அறிஞர் முனைவர் பெ. சசிகுமார்
புதையல் பதிப்பகம்
விலை: ரூபாய் 180 /-
தொடர்புக்கு: 9865257071
மின்னஞ்சல் : puthayalpublication@gmail.com
நன்றி: பிரபாகர்