எம்.ஜி.ஆர். என்ற மகா மனிதரைச் சந்தித்தேன்!

கவியரசர் கண்ணதாசன்

1980 ஆம் ஆண்டு மே மாதம்.

தமிழகத்தில் அப்போது தான் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது.

கலைத்தவர் இந்திராகாந்தி.

சளைக்கவில்லை எம்.ஜி.ஆர். இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டு 129 தொகுதிகளில் வெற்றி.

மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர்.

அதற்கான தேர்தல் வேலைகளில் எம்.ஜி.ஆர். இருந்தபோது அவரைச் சந்தித்த கவிஞர் கண்ணதாசன், அந்த அனுபவத்தை அப்போது வார இதழ் ஒன்றில் எழுதிக் கொண்டிருந்த ‘சந்தித்தேன்.. சிந்தித்தேன்’ தொடரில் எழுதினார்.

அந்த அனுபவம் உங்களுடைய பார்வைக்கு :

“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.”

“அவர் உற்சாகமாக இருக்கிறார். சிரித்த முகத்தோடிருக்கிறார். திடகாத்திரமாகவும், சுறுசுறுப்போடும் இருக்கிறார், முன்பைவிடப் பளபளப்பாக இருக்கிறார்.

மதுரையில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு சென்னை வந்த எம்.ஜி.ஆரை இன்று (ஞாயிற்றுக் கிழமை) ஆற்காடு முதலி தெருவில் சந்தித்தபோது, நான் ஆச்சர்யப்படவில்லை.

சுமார் ஒன்றரை மணி நேரம் என்னோடு அவர் பேசிக் கொண்டிருந்தார். அதிலே தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம் தெரிந்தது.

நியாயம்தான். தமிழ்நாடு பூராவிலும் அவர் மீது ஓர் அனுதாபம் இருக்கிறது.

“நாங்கள் இந்திரா வரவேண்டும் என்று விரும்பினோமே தவிர, எம்.ஜி.ஆர் போக வேண்டும் என்று விரும்பவில்லை” என்பது ஏழை எளிய மக்களின் வாதம்.

“டில்லிக்கு இந்திரா, நம் ஊருக்கு எம்.ஜிஆர்” என்றே எங்கே பார்த்தாலும் பேசுகிறார்கள்.

அதை நேரிலேயே கேட்டு, மக்கள் வெள்ளத்தைச் சந்தித்துத் திரும்பிய அவர், நாணயமான நடத்தையை இந்த நாட்டு மக்கள் மதிக்கிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்.

அவரைவிட்டு விலகிச் சென்றவர்கள் கூட அவரைப் பற்றி எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லையே!

சட்டசபை கலைக்கப்பட்டதிலிருந்து நேற்று வரை நான் எம்.ஜி.ஆரைச் சந்திக்கவில்லை. காரணம் இந்திரா காங்கிரசோடு கூட்டு வைத்துக் கொள்ளும் வாய்ப்பை அவர் தவற விட்டதில் எனக்கு வருத்தம் இருந்தது.

ஆனால் நான் அவர் மீது காட்டிய பகையையும், அவர் என் மீது காட்டிய அன்பையும் எப்படி மறக்க முடியும்? ஆகவே இன்று அவரைச் சந்தித்தேன்.

குறைந்தபட்சம் 135 இடங்களை அ.தி.மு.க பெறும் என்று அவர் நம்புகிறார்.

நாட்டு மக்கள் ஓட்டுப் போடக் கற்றுக் கொண்டுவிட்டார்கள். இனி அவர்கள் மனோபாவத்தைக் கணிப்பது கடினமான காரியமல்ல.

வங்காளத்தையும், கேரளாவையும் போல அவருக்குப் பத்து, இவருக்குப் பத்து என்ற நிலைமை எப்போதுமே தமிழ்நாட்டில் இல்லை.

ஓட்டுச் சீட்டை ஒரே மாதிரிப் போட்டு ஒரு கட்சியை மெஜாரிட்டிக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள்.

நிர்வாகத் திறமையில் எம்.ஜி.ஆர் ஒரு சர்ச்சிலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனங்களின் மனோபவத்தைக் கணிப்பதில் எப்போதுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவர் என்னிடம் அரசியலைப் பற்றி ஏதும் அலட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக என்னோடு வந்திருந்த என் மகன் கலைவாணனுக்கு ஒரு மணி நேரம் புத்திமதிகளைக் கூறினார்.

சினிமாவில் நடிக்கும் கலைவாணன் உடம்பை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் சில ஆசனங்களைச் செய்து காட்டினார்.

கலைத்துறையில் அரை நூற்றாண்டாக வளர்ந்து கொண்டிருக்கும் அவர், உடம்பைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முறை கண்டு என் மகனே கூட ஆச்சர்யமடைந்தான்.

தேர்தல் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில் அது பற்றிப் பரபரப்பே கொஞ்சம் கூட அவரிடம் காணப்படவில்லை.

“வெறும் கறி, மீனிலே உடம்பைக் காப்பாற்ற முடியாது. கீரை வகைகள் நிறையச் சாப்பிடு” என்றார் அவர்.

இடையிடையே வருகிற டெலிபோன் கால்களுக்கு அமைதியாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரிடம் நிதி கொடுப்பதற்கென்றே, ஒரு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருந்தது.

நான் மதுரை வீரனையோ, மன்னாதி மன்னனையோ, ராஜா தேசிங்கையோ, நாடோடி மன்னனையோ சந்திக்கவில்லை. மக்களின் விசுவாசத்துக்குப் பாத்திரமான ஒரு மகா மனிதனைத் தான் அப்போது சந்தித்தேன்.

‘எழுதினால் கண்ணதாசன் தான் எழுத வேண்டும்’ என்று அவர் சொன்ன காலங்களும் உண்டு.

‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று மறுத்த காலங்களும் உண்டு. ஆனால் கவிதையில் அவர் என்னை ரசித்ததைப் போல, யாரையும் ரசித்ததில்லை.

‘எதிரி என்றால் எதிரி; நண்பன் என்றால் நண்பன்’ என்பதுவே அவரது கொள்கை. நண்பன் என்று சொல்லிக் கொண்டு முதுகிலே குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.

ஒரு படத்தில் அவருக்காக நான் வசனம் எழுதினேன்.

“என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக் கெட்டவர்கள் இல்லை” என்று.

அது இன்று பலிக்கிறது.

நம்பாமல் சென்று விட்டவர்கள் இன்று அஞ்ஞாத வாசம் செய்கிறார்கள். நம்பித் துணை நிற்போர், நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அவருடைய ஜாதகம் அசுர ஜாதகம், விழுவது போல் தெரியும், எழுந்து விடுவார். நீண்டகால வீழ்ச்சியை அவர் சந்தித்ததே இல்லை.

தமிழர்கள், அவரைத் ‘தமிழன்’ என்றே அறிவார்கள். அவரை வேறு பாஷைக்காரர் என்றோ, கப்பல் பேரத்தில் ஊழல் செய்தவர் என்றோ சொல்லப்படுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

நாட்டு மக்கள் முழுக்க முழுக்க அரசியல் தெளிவு பெற்றுவிட்ட நேரத்தில், இந்தத் தேர்தல் நடக்கிறது.

தேர்தல் அறிக்கைகளும், விதவிதமான சுவரொட்டிகளும், மேடை முழக்கங்களும் வெறும் தேர்தல் காலக் கடமைகளே! அவற்றைப் பார்த்துவிட்டோ, கேட்டுவிட்டோ மக்கள் ஓட்டுப் போடுவதில்லை.

கம்யூனிஸ்டுகளும், முக்குலத்தோரும், நெடுமாறனும் செல்வாக்குப் பெற்ற மதுரையைத் தேர்ந்தெடுத்ததிலிருந்து அவரது ஆழ்ந்த அறிவு தெரியவில்லையா?

‘இந்திராவா, எம்.ஜி.ஆரா?’ என்று வந்தபோது மக்கள் இந்திராவைத் தேர்ந்தெடுத்தார்கள்.

எம்.ஜி.ஆரா, தி.மு.க வா என்று வரும் போது…

பொறுத்திருந்து பார்ப்போம்.”

நன்றி : ‘சந்தித்தேன்.. சிந்தித்தேன்’ – கவிஞர் கண்ணதாசனின் நூலில் இருந்து…

கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.

Comments (0)
Add Comment