ஒரு திரைப்படம் உருவாக்கப்படும்போது, அதில் ஈடுபடுபவர்களின் எண்ண ஓட்டங்கள் வெவ்வேறு மட்டங்களில் இருக்கும். அதனை மீறி, அந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து இருக்கும்போது கிடைக்கும் பலன் அளப்பரியதாக இருக்கும். பிறகு, அந்தப் படம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவது தனிக்கதை. சில நேரங்களில் அப்படிப்பட்ட பின்விளைவுகளை அப்படங்களில் பணியாற்றியவர்களே உணர்ந்து தெளிந்தது தனித்துவமானதாக இருக்கும்.
அந்த வகையில், ‘என்னுடைய நடிப்பு வாழ்க்கையில் இதுவரை நடித்த படங்களின் மிகவும் பிடித்த படம் பேராண்மை’ என்று சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. அவ்வாறு அவர் சொல்லும் அளவுக்கு அப்படம் இருக்கிறதா, அப்படியென்ன மாற்றத்தை அது அவருக்குள் விதைத்தது என்கிற கேள்விகள் சிலருக்கு எழலாம்.
ஒரு ‘அசாதாரணமானவனின் கதை’!
அந்தச் சூழலில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனாகப் பேராண்மை படத்தில் நடித்திருந்தார். அதில், அவர் கட்டுறுதி மிக்க ஒரு மலைவாழ் மனிதராகத் தோற்றம் தந்திருந்தார். திரையில் அப்படியொரு தோற்றத்தைக் கொணர்வதற்காக அவர் பல மாதங்கள் உடற்பயிற்சிகளுக்காக மெனக்கெட்டிருந்த விதம் ஈடிணையற்றதாக இருந்தது.
அதே நேரத்தில், ‘இவர் வனப்பகுதியில் வாழும் மக்களில் ஒருவர்தான்’ என்று நம்பும் அளவுக்குத் திரையில் உடல்மொழியையும் வெளிப்படுத்தியிருந்தார் ஜெயம் ரவி. மிக முக்கியமாக, தனது குரல் ஒலிக்கும் விதத்தையே அப்படத்திற்காக மாற்றியிருந்தார்.
அதுவரையிலான படங்களில் இடம்பெற்ற உணர்வெழுச்சிமிக்க காட்சிகளில் அவரது குரல், பம்மிப் பாயும் ஒரு விலங்கைப் போலவே இருந்தது. ஆனால், அதில் உறுதியும் கம்பீரமும் குறைந்திருந்தது அல்லது குலைந்த நிலையில் இருந்தது என்றே சொல்லலாம். அதனைத் தலைகீழாக மாற்றிக் காட்டினார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். போலவே, ஆக்ஷன் நாயகனுக்கு இப்படித்தான் காட்சியமைக்க வேண்டும் என்ற வரையறைகளையும் அப்படத்தில் சுக்குநூறாக்கி இருந்தார்.
‘பேராண்மை’யில் ஜெயம் ரவிக்கு ஜோடி இல்லை. நாயகிகளாக நடித்தவர்களோடு பாலியல்ரீதியில் நெருக்கம் பாராட்டுவதாகவும் கதையமைப்பு இல்லை. ஐந்து நாயகிகளில் ஒருவர் மட்டும் ஒருதலைக்காதல் புரிவதாகக் காட்டப்பட்டிருந்தது. அதுவும் கூடத் திரைக்கதையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்காது.
வில்லன் கூட்டத்தை அழிக்க ஒற்றையாளாகக் கிளம்பிச் செல்ல மாட்டார் நாயகன். சக மனிதர்கள் தன்னை மதிக்காதபோதும், அவர்களது புரிதலின்மையைப் பெரிதாகக் கருதாமல் செயல்படுவதாக அப்பாத்திரத்தின் இயல்பு அமைக்கப்பட்டிருந்தது. இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அவர்களையே நசுக்கும் வகையில் கண்களுக்குப் புலப்படாத சில சக்திகள் செயல்படலாம் என்ற உண்மையை அப்படம் உணர்த்தியது. அது, வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருந்து ‘பேராண்மை’யை வேறுபடுத்திக் காட்டியது.
மிக முக்கியமாக, மிகச்சாதாரணமானவராகத் திரையில் காட்டப்படும் ஒரு மனிதர் எந்த தருணத்தில் அசாதாரணமானவராகத் தனது சகாக்களுக்குத் தெரிகிறார் என்பதைச் சொன்னது இப்படம். உண்மையிலேயே, பெரும் ஆண்மை மிக்கவராக அதன் நாயக பாத்திரமான ‘துருவன்’ அமைந்திருந்தது.
அதன் காரணமாக, அப்படத்தின் வசனங்களில், சில காட்சிகளில் தென்பட்ட பிரச்சார நெடியையும் மீறி வெற்றி பெற்றது.
கல்யாண கிருஷ்ணனின் திரைக்கதை, எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு, என்.கணேஷ்குமாரின் படத்தொகுப்பு, ஜவஹர் பாண்டியன் – செல்வகுமாரின் தயாரிப்பு வடிவமைப்பு, வித்யாசாகரின் பின்னணி இசை என்று பல அம்சங்கள் இப்படத்தில் அதற்குத் துணை புரிந்தன.
பின்னர் வந்த மாற்றம்!
‘தாம் தூம்’ படம் வரை திரையில் ‘சாக்லேட் பாய்’ ஆகவே தென்பட்ட ஜெயம் ரவி குறித்த பிம்பத்தை மக்கள் மனதில் மாற்றியமைத்த படம் என்றே ‘பேராண்மை’யைக் குறிப்பிடலாம். அதற்குப் பிறகு, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் தனிப்பட்ட குணாதிசயங்கள், பொதுப்பிரச்சினைகளை அவர் அணுகும் கோணம், வாழ்க்கை குறித்த பார்வை, சக மனிதர்கள் உடனான உறவு என்று பல விஷயங்கள் அவரிடத்தில் தாக்கம் ஏற்படுத்தின என்றே சொல்லலாம். அந்த மாற்றங்கள் பின்னர் அவரது பேட்டிகளில், பொதுவெளிச் சந்திப்புகளில், அவர் நடிக்கிற படங்களின் கதையமைப்பில் கூடப் பிரதிபலித்தது எனலாம். இதனை ஜெயம் ரவியே பல பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார்.
தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன் போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெறாதபோதும், முழுக்க கமர்ஷியலான கதைகளை ஜெயம் ரவி தேடவில்லை. சமுத்திரக்கனி இயக்கிய ‘நிமிர்ந்து நில்’ படத்தில் சமூக அக்கறைமிக்க ஒரு நபராக நடித்தார்.
ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், பூலோகம் என்று பல படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
மிக நல்ல மனிதரை ‘பழம்’ என்று சொல்கிற வழக்கம் சிலரிடையே உண்டு. அப்படிப் பார்த்தால், தனது பெரும்பாலான படங்களில் அது போன்ற பாத்திரங்களில் மட்டுமே ஜெயம் ரவி நடித்திருக்கிறார். ‘எல்லா கெட்ட செயல்களிலும் ஈடுபட்டுவிட்டு, பாதிக்கதையில் நான் திருந்திட்டேன்’ என்று சொல்கிற பிற நாயக பாத்திரங்களில் இருந்து அவரது படங்கள் அதனால்தான் வித்தியாசப்படுகின்றன. அதனாலேயே, குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாகவும் அவர் கருதப்படுகிறார்.
சகலகலா வல்லவன், போகன், இறைவன் போன்ற மிகச்சில படங்கள் தவிர்த்து ஜெயம் ரவியின் படங்கள் அனைத்துமே ஏதோ ஒருவகையில் சமூக அக்கறையை வெளிப்படுத்துபவை தான். ’கோமாளி’ அதில் இன்னொரு திசையைக் காட்டியது.
பார்வையாளரை ஏமாற்றுகிற, அவருக்கு எதிரான கருத்துகளை உதிர்க்கிற, அவர்களை மோசமாகச் சித்தரிக்கிற கதைகளை, காட்சியமைப்பை ஏற்க மறுப்பதும், அதனை மாற்றத் துணிவதும் நாயக நடிகர்களுக்குத் தேவையான குணங்கள். அதனைச் செய்யாமல் ஒதுங்கி நின்றால் பெரும் வரலாற்றுப் பிழையாகி விடும். அதனைச் சரிவரப் பின்பற்றுகிற ஒரு குணம் ஜெயம் ரவியிடத்தில் தொற்றிக் கொண்டதில் ‘பேராண்மை’க்குப் பெரும் பங்குண்டு.
இப்போதும், ஜெயம் ரவி நடித்த படங்களில் ஒவ்வாத கருத்துகளைச் சிலர் சுட்டிக்காட்டலாம். அது தன் பார்வைக்கு வரும்பட்சத்தில், அவற்றை மாற்றிக்கொள்ளத் தயாராகவே இருப்பார் ஜெயம் ரவி. அதற்கான நம்பிக்கையை விதைத்த படம் ‘பேராண்மை’. அதன்பிறகு வந்த படங்களில் அது குறிப்பிட்ட அளவில் பிரதிபலித்து வருகிறது. இனியும் அது தொடரும். அது நிகழக் காரணமாக இருந்த ‘பேராண்மை’யை எஸ்.பி.ஜனநாதன், ஜெயம் ரவி உள்ளிட்ட அப்படக்குழுவினர் தந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அது நிகழ்த்திய மாற்றங்கள் பேசத்தக்கவையாக இருக்கின்றன. அதுவும் கூட ஒரு சிறப்பு தான்..!
– மாபா