உன் குத்தமா… என் குத்தமா…?

செய்தி:

நடிகர் பார்த்திபன், சமீபத்தில் சென்னையிலிருந்து கோவைக்கு ‘வந்தே பாரத் ரயிலி’ல்  செய்தபோது வழங்கப்பட்ட உணவு தரம் இல்லாமல் இருந்ததாக புகார் அளித்திருக்கிறார்.

இதையடுத்து அந்த உணவை விநியோகித்த காண்ட்ராக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

கோவிந்து கமெண்ட்:

நடிகர் பார்த்திபனும் வடிவேலும் சேர்ந்தால் காமெடி காட்சிகள் அமர்க்களப்படும். முக்கியமாகக் கவனிக்கவும் படும். தற்போது நடிகர் பார்த்திபன் வந்தே பாரத் ரயிலில் பயணித்ததுகூட தனி கவனம் பெற்றிருக்கிறது.

பயணத்தின்போது அவருக்கு வழங்கப்பட்ட அசைவ உணவு அவ்வளவு தூரத்திற்கு சாப்பிட முடியாத அளவுக்கு இருந்திருக்கிறது. சும்மா இருப்பாரா பார்த்திபன்?

உடனடியாக ‘கிறுக்கல்கள்’ கவிதைத் தலைப்பை எல்லாம் நினைவுப்படுத்தி தான் சாப்பிட முயன்ற அசைவ உணவைப் பற்றி அவருடைய மொழியிலேயே ஒரு கிறுக்கு கிறுக்கி புகாராகக் கொடுத்திருக்கிறார்.

அந்தப் புகாருக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலும் வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட உணவை விநியோகித்த காண்ட்ராக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி ஒன்று தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘அழகி’ திரைப்படத்தில் பார்த்திபன் தோன்றும் காட்சியை ஒளிபரப்பியதோடு இளையராஜா பாடும் இந்தப் பாடலையும் பொருத்தம் கருதி ஒளிபரப்பியது.

“உன் குத்தமா… என் குத்தமா… யாரை நானும் குத்தம் சொல்ல?”

இந்தப் பாடலின் வரிப்படியே ரயிலில் பயணித்த பார்த்திபனை குற்றம் சொல்வதா? அல்லது பார்த்திபன் புகார் அளித்த அதே உணவை மிகுந்த சகிப்புத் தன்மையுடன் சாப்பிட்டு செரிமானமாக்கி எந்தப் புகாருமே அளிக்காமல்போன சாராசரி பயணிகளைக் குறை சொல்வதா? அல்லது பார்த்ததுமே அஜீரணத்தை ஏற்படுத்திய அசைவ உணவை ஓடும் ரயிலுக்கிடையே வழங்கிய காண்ட்ராக்டரை குற்றம் சொல்வதா? யாரை நாம் குற்றம் சொல்ல…?

Comments (0)
Add Comment