அப்துல் கலாமை நினைவூட்டும் ‘மாணவர் தினம்’!

அக்டோபர் – 15 : உலக மாணவர் தினம்

மாணவப் பருவம் என்பது ஒரு மனிதரின் வாழ்வில் பொற்காலம் என்றே சொல்லலாம்.

எத்தனைதான் குடும்பச் சூழலும் சமூக இடர்ப்பாடுகளும் பல சோதனைகளைத் தந்தாலும், அவற்றைத் தாண்டி ஒரு மகிழ்ச்சிகரமான மனநிலையை உருவாக்குவதில் அக்காலகட்டத்திற்கு இணையாக எதையும் சொல்ல முடியாது.

அதனாலேயே, ‘இளமையில் கல்’ என்பதைப் பொதுமொழியாக வைத்திருக்கிறது தமிழ் சமூகம். அந்த வயதில் என்ன கற்றாலும் அது ஆழமாக மனதில் பதியும் என்பதும் ஒரு காரணம்.

அத்தகைய மாணவப் பருவத்தைக் கடந்து வந்தபிறகு, ‘சோலையைக் கடந்தோம்’ என்று சொல்லாடலில் ஈடுபடுபவர்களாகவே பெரும்பாலானோர் இருக்கின்றனர்.

மிகச்சிலருக்கு அந்தக் காலம் குறித்த பெரிதாகப் பெருமிதமோ, எரிச்சலோ இருக்காது. வெகுசிலர் மட்டுமே அந்த ‘கல்விக் காலத்தை’ அமிர்தத்தைப் பருகுவது போல அனுஅனுவாக ரசித்தவர்களாக இருக்கின்றனர்.

அத்தகைய அனுபவத்தைப் பிறரும் பெற வேண்டுமென்று எண்ணுபவர்களாக இருக்கின்றனர்.

‘கல்வி ஒரு சுமை’ என்ற எண்ணத்தைத் தூக்கியெறிந்தாலே, அத்தகைய நிலையை எய்துவிட முடியும் என்ற நம்பிக்கையை விதைப்பவர்களாக இருக்கின்றனர்.

அப்படிப்பட்டவர்களை ஆசிரியர்களாகப் பெற்ற மாணவர்கள் பாக்கியவான்கள்.

கல்வி கற்கும் காலம் என்பது தவழும் குழந்தை நடை பயில்வதில் தொடங்கி தலை நிமிரச் செய்யும் ஒரு வாழ்வைத் தேர்தெடுப்பது வரை தொடரும். அதற்கிடையே, பல பருவங்களை ஒரு குழந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதில் சில நடைமுறைச் சிக்கல்களும் பருவகாலத்திற்கான முகிழ்த்தல்களும் அடங்கும்.

அதையெல்லாம் கடப்பதுவே இயல்பு என்றும், அதற்காகக் கல்வியைப் புறந்தள்ளக் கூடாது என்றும் உணர்த்தினாலே போதும்.

இளஞ்சிறுமியரும் சிறுவர்களும் உற்சாகமாகக் கல்வி நிலையங்களுக்குப் படையெடுப்பார்கள்.

அதற்கான விதைகளைப் பல சான்றோர் இம்மண்ணின் ஊன்றிச் சென்றிருக்கின்றனர்.

அவர்களில் ஒருவர் தான், முன்னாள் குடியரசுத் தலைவரான மறைந்த ஏபிஜே அப்துல்கலாம்.

நாற்பதாண்டு காலத்திற்கும் மேலாக, இந்திய பாதுகாப்பு ஆய்வு மேம்பாட்டு அமைப்பில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்குண்டு.

அந்த வாய்ப்பினைப் பெறத் தான் எத்தனை போராட வேண்டியிருந்தது, எப்படிப்பட்ட தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது, அனைத்தையும் தாண்டி குடியரசுத் தலைவர் பதவியை எவ்வாறு அடைய முடிந்தது என்பதனைப் பிற்காலத்தில் அவர் இளைய தலைமுறையினரிடம் பகிர்ந்திருக்கிறார்.

அந்த தகவல்கள் ஒவ்வொன்றும் மாணவப் பருவத்தில் இருப்பவருக்கான பால பாடங்கள்.

இளம் வயதில் மட்டுமல்ல, இறக்கும் வரை தன்னை ஒரு மாணவனாகவே கருதியவர் அப்துல் கலாம். அந்த மனப்பாங்கினால் தான், கல்லூரிப் பருவத்தில் எம்ஐ ரக விமானத்தை ஓட்ட வேண்டுமென்ற கனவைத் தள்ளாடும் வயதில் அவரால் நிறைவேற்ற முடிந்தது.

அந்த வகையில், எந்த வயதிலும் கற்பதற்கான துணிச்சலும் தெளிவும் இருக்க வேண்டுமென்பதைத் தனது செயல்பாட்டினால் உணர்த்தியவர்.

அதனாலேயே, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதியன்று ‘உலக மாணவர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

நம் நாடு மட்டுமல்லாமல், நம்மோடு இணக்கமான உறவு பாராட்டுகிற பல நாடுகளில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அதையும் தாண்டி, மாணவப் பருவம் கொண்டாட்டத்திற்குரியது; ஆழ்ந்த கற்றலை விதைப்பதற்கானது என்பதை அறிந்தவர்கள் இத்தினத்தை மனதாரப் பின்பற்றுகின்றனர்.

எந்த வயதிலும் கற்கலாம்!

ஜி.யு.போப் தனது கல்லறையில், ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று பொறிக்கச் சொன்னதாக ஒரு தகவல் உண்டு.

அது, இறப்புக்குப் பிறகும் ஒருவர் தன்னை இந்த உலகம் எப்படி நோக்க வேண்டுமென்று விரும்பியதைப் பறை சாற்றும்.

’மாணவன் என்பவர் யார்’ என்பதற்கான இலக்கணம் எல்லா காலமும் மாறிக்கொண்டே வருகிறது.

ஒரு கல்வி நிறுவனத்தில், ஒரு ஆசிரியரிடத்தில், குறிப்பிட்ட கால அளவில் ஏதேனுமொன்றைக் கற்றுக்கொள்பவரே மாணவர் ஆவார் என்பது பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும்.

மிகச்சுருக்கமாகச் சொன்னால், எந்தவொன்றையும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் அனைவருமே மாணவர்கள் என்று சொல்லிவிடலாம். அதன் மூலமாக காலம், இடம் அனைத்தையும் கடந்த ஒரு கற்றலை நிகழ்த்த முடியும்.

இன்றைய சூழலில் அன்றாடம் கற்றுக்கொள்ளும் மனநிலையே சிறந்தது. வயதில் மிகச்சிறியவர் கூட நமக்கு ஆசிரியர் ஆகலாம்.

எந்தச் சம்பந்தமும் இல்லாதவர் கூட நமக்குத் தெரியாத ஒன்றைச் சொல்லிச் செல்லலாம்.

அதனை ஏற்பதற்கான மனநிலையை கைக்கொள்வது மட்டுமே நம் தரப்புக்கானதாக இருக்க வேண்டும்.

படிப்பு, வேலை, சம்பாத்தியம், ஓய்வு என்று ஒரு வட்டத்திற்குள் அடைந்துவிடாமல் இருப்பதற்காக, வெவ்வேறு விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் சிலர்.

அதன் மூலமாக வயது மூப்போடு உடன் வரும் வெறுமையைத் துரத்தியடிக்க முயற்சிக்கின்றனர்.

புதிதாக ஒரு கலை, விளையாட்டு, மொழி, தொழில்நுட்பம் மற்றும் இதர பலவற்றைக் கற்றுக்கொள்வதன் மூலமாகத் தம்மை இளமையாக்கிக் கொள்கின்றனர்.

அதனால், அவர்கள் மனதோடு உடலும் பொலிவாகிறது; துடிப்புடன் இயங்கத் தயாராகிறது. ஒரு மனிதர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேறென்ன தேவை?

இன்றைய தலைமுறை ‘எதிலும் வேகம், எங்கும் வேகம்’ என்றிருக்கிறது. ஒரு சிகரத்தில் ஏறிய பிறகு இன்னொரு சிகரம் ஏறுவது என்றிருந்தாலும், வெகுசீக்கிரத்தில் வெறுமைப் பரப்பு நோக்கி நகர்ந்து செல்கிறது.

தோல்வி குறித்த பயம் மட்டுமல்லாமல் வெற்றிகளால் வரும் சலிப்பும் அதற்குக் காரணமாக உள்ளது. அது போன்றதொரு நிலையைக் கடந்துவரத் தம்மை ஒருவர் மாணவனாகக் கருதுவது எளிய தீர்வு.

ஆக, வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் தம்மை மாணவராகக் கருதுபவருக்கே இவ்வுலகம் சிவப்புக் கம்பள வரவேற்பைத் தரக் காத்திருக்கிறது. அதனை நம்பினாலே போதும்; ஒவ்வொரு விடியலும் இனிதாக மாறும்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment