இயக்குநர் மணிவண்ணன். தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத சாதனையாளர்களில் ஒருவர். கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர்.
‘இவரால் இதுதான் முடியும்’ என்று எதிரே இருப்பவர் வரையறை செய்தால், அதனைத் தகர்த்தெறிந்து தமது தனிப்பெரும் ஆற்றலை வெளிக்காட்டலாம் என்பதற்கான உதாரணமாகத் திகழ்ந்தவர்.
இன்றளவும் கமர்ஷியல் பட இயக்குநர்களுக்கான முன்னோடியாக விளங்குபவர். இப்படி மணிவண்ணனைப் பற்றிப் புகழப் பல வார்த்தைகளைக் கொட்ட முடியும்.
இவையனைத்தும் அவரைத் தெரிந்த, பழகிய, போற்றிய, பின்பற்றியவர்கள் சொன்ன தகவல்களின் தொகுப்பு தான்.
அப்படிப்பட்ட மணிவண்ணனை இயக்குநர் ஆக்கிய படம் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’.
இந்தப் படம் 1982ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதியன்று வெளியானது.
இன்றோடு அப்படம் வெளியாகி நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
மறக்க முடியாத ‘அருக்காணி’!
’கிழக்கே போகும் ரயில்’ பார்த்துவிட்டு, அதன் இயக்குநர் பாரதிராஜாவுக்குப் பக்கம்பக்கமாகக் கடிதம் எழுதி அனுப்பினார் மணிவண்ணன். அந்த எழுத்துகள் இயக்குநர் இமயத்தை ஈர்த்தன.
அதன் விளைவு, கோவையில் இருந்த மணிவண்ணன் சென்னைக்கு வந்தார். பாரதிராஜாவின் உதவி இயக்குநர்களில் ஒருவரானார்.
அந்த வாய்ப்புக்காகத் தவமிருந்தவர்கள் மத்தியில், அது அவரைத் தேடி வந்தது. அதுவே அவரது தனித்துவத்தைச் சொல்லும்.
‘நிழல்கள்’ படத்தின் கதையை உருவாக்கினார் மணிவண்ணன். அன்றைய தலைமுறையின் வாழ்வைப் பிரதிபலித்ததாகச் சொன்னார்கள் படம் பார்த்தவர்கள்.
ஆனாலும், அதன் தோல்வி பாரதிராஜாவை நிலைகுலையச் செய்தது. அது, அவரது சொந்தத் தயாரிப்பும் கூட.
அந்தச் சூழலில், மீண்டும் ‘அலைகள் ஓய்வதில்லை’ கதையை அவரிடம் கொடுத்தார் மணிவண்ணன்.
அந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த தைரியமும் தீர்க்கமான முடிவெடுக்கும் திறனும்தான் அவரது சிறப்பு.
தான் முதன்முறையாகப் படம் இயக்கியபோதும், அதையே தனது மூலதனமாக வெளிக்காட்டினார் மணிவண்ணன்.
காதல் ததும்பும் இளமைக் கொண்டாட்டத்தைப் பிரதிபலிக்க முடியும் என்றபோதும், ஒரு குடும்பச் சித்திரமாக ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தைத் தந்தார்.
காதல் நாயகனாகக் காட்டப்பட்ட மோகனை வில்லத்தனத்துடன் திரையில் காண்பித்தார்.
நவீனத்தின் உருவமாகத் திரையுலகினரால் பார்க்கப்பட்ட சுஹாசினிக்கு கருப்பு வண்ண ஒப்பனையைப் பூசி, அவரது தலைமுடியை நிமிர்த்தி, கிராமத்து அருக்காணியாகத் திரையில் காட்டினார்.
‘நானும் ஒரு பெண்’ உட்படப் பல படங்களின் சாயல் தெரிந்தபோதும், ஒரு வெற்றிப் படத்திற்கான உள்ளடக்கம் சிறுகதை அளவில் இருந்தால் போதும் என்ற தெளிவு மணிவண்ணனிடம் இருந்தது. அதன் விளைவாக, அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
கிராமத்துப் பெண்ணான தனது மனைவியை வெறுக்கும் நாயகன், எவ்வாறு மனம் மாறி அவருடன் வாழ்வில் இணைகிறார் என்பதைச் சொன்னது அப்படம்.
எஸ்.வி.சேகர், வினு சக்ரவர்த்தி, லூஸ் மோகன், செந்தில் என்று நகைச்சுவைக் கலைஞர்கள் பலர், இக்கதையைத் திரையில் சொல்ல மணிவண்ணனுக்கு உதவினர்.
அனைத்துக்கும் மேலாக, இளையராஜாவின் பாடல்கள், இசை ரசிகர்களை ஆனந்த மழையில் ஆழ்த்தின.
கமர்ஷியல் சினிமா வித்தகர்களான ஒளிப்பதிவாளர் ஏ.சபாபதி, படத்தொகுப்பாளர் எல்.கேசவன் துணையோடு அக்காலகட்ட ரசிகர்களுக்கு ஏற்றதொரு படமாக ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தைத் தந்தார் மணிவண்ணன்.
தான் ஒரு கதை வசனகர்த்தாவாக இருந்தபோதும், இப்படத்தின் கதையைக் கலைமணியிடம் இருந்து பெற்றார். அந்த திறன் தான் மணிவண்ணனின் சிறப்பம்சம்.
வெவ்வேறுவிதமான படங்கள்!
மோகன் அறிமுகப்படுத்திய புதுமுக இயக்குநர்களில் ஒருவராக இடம்பெற்றார் மணிவண்ணன்.
பின்னாட்களில் அவரைக் கொண்டு ‘ஜோதி’, ‘இளமைக் காலங்கள்’, ‘நூறாவது நாள்’, ’24 மணி நேரம்’, ’அம்பிகை நேரில் வந்தாள்’, ‘தீர்த்தக் கரையினிலே’, ‘மனிதன் மாறிவிட்டான்’ போன்ற படங்களைத் தந்தார்.
‘விடிஞ்சா கல்யாணம்’ படத்தில் ‘த்ரில்’ தந்த கையோடு, ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தில் புரட்சி பேசுவார்.
‘சின்னதம்பி பெரியதம்பி’யில் கமர்ஷியல் காக்டெயில் கலக்கியவர், அதே சூட்டோடு யதார்த்தம் ததும்பும் ‘இனி ஒரு சுதந்திரம்’ தருவார்.
‘ஜல்லிக்கட்டு’, ‘கல்யாணக் கச்சேரி’, ‘கனம் கோர்ட்டார் அவர்களே’, ‘வாழ்க்கைச் சக்கரம்’, ‘சந்தனக் காற்று’ என்று மணிவண்ணன் தொடர்ச்சியாகத் தந்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் இருக்கும்.
இது தவிர்த்து தெலுங்கு, இந்தியில் சில ‘ஆக்ஷன் த்ரில்லர்’களை தந்திருக்கிறார். அவை, அந்த காலகட்டத்தில் வந்த படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதை நம்மால் உணர முடியும்.
மணிவண்ணன் தான் மற்றவர்களிடம் பேசும் பாணியை, அப்படியே திரையில் சத்யராஜிடம் தெரியச் செய்தார். பிறகு அதுவே அவரது நடிப்பு பாணியாக மாறிப்போனது.
தான் நடிக்க வந்தபோது, ‘அது தன்னை விமர்சிக்க முதல் காரணமாக இருந்தது’ என்று பின்னாட்களில் நட்பு வட்டாரத்தில் சொல்லிச் சிரித்தவர் மணிவண்ணன்.
‘கண்டியூனிட்டி’ என்பது சினிமாவில் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை. ‘பேட்ச் ஒர்க்’ என்ற பதமும் அது தொடர்பாகவே பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய சூழலில் அது செலவு பிடிக்கும் ஒரு வார்த்தை. ஆனால், தயாரிப்பாளருக்கு எந்த வருத்தமும் இல்லாத வகையில், ‘எங்கோ ஒரு லொகேஷனில் எடுத்த ஷாட்டை, இன்னொரு இடத்தோடு பொருத்திப் பார்க்கும் வகையில் படமெடுக்கத் தெரிந்தவர் மணிவண்ணன்’ என்பது அவரோடு பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குனர்கள் சொல்வது.
அது மட்டுமல்லாமல், கதையும் காட்சிகளும் இல்லாமல் படப்பிடிப்புத்தளத்திற்குச் சென்றாலும் நேர விரயம் இல்லாமல் படமெடுக்கும் திறன் அவருக்கு உண்டு.
கண்ணதாசனுக்குக் கவிநயம் போல, ஒரு படத்திற்கான காட்சிகளை மிக விரைவாக எழுத்தாக்கம் செய்து காட்சிப்படுத்துகிற வல்லமை அவரிடத்தில் இருந்தது.
அவ்வாறு அவர் தந்த படங்கள் வெவ்வேறு காட்சியனுபவத்தை நமக்கு வழங்குகின்றன.
அதுவே, இயக்குநர் கரு.பழனியப்பன் போன்று பல இயக்குநர்கள் அவரைத் துரோணச்சாரியார் ஆகவும், தங்களை ஏகலைவர்களாகவும் எண்ணக் காரணமாகின்றன.
பட உருவாக்கம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் பல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பவராக விளங்குபவர் மணிவண்ணன். அவரை ஒரு ஆளுமையாகத் திரையுலகம் அறிமுகப்படுத்தி 42 ஆண்டுகள் ஆகின்றன என்பது நம்பக் கடினமான உண்மையாகத்தான் இருக்கிறது.
அவர் தந்த படைப்புகள் அந்தக் கால இடைவெளியைக் காணாமல் போகச் செய்யும் மாயாஜாலத்தை நிகழ்த்துவல்லவை. அதனை ரசிப்பதே, அவருக்கு நாம் செய்யும் மரியாதை..!
– உதய் பாடகலிங்கம்