அடுத்த மாதம் அம்பை அவர்களின் 80-வது பிறந்தநாள் வர இருக்கிறது. இதையொட்டி நண்பர்களுக்கு அம்பை ஒரு விருந்தளித்தார். மேற்கு மாம்பலம் ஒன்லி காஃபியில் இவ்விருந்து நிகழ்வு. நிறைய எழுத்தாளர்களை, கலைஞர்களை இந்நிகழ்வில் காண முடிந்தது.
மிகப்பெரும் எழுத்தாளுமை அம்பை. ஒரு குழந்தையைப்போல் வளைய வந்து அனைவரையும் உபசரித்தார். இந்நிகழ்வில் நானும் தமிழும் கலந்துகொண்டோம்.
மும்பையிலிருந்து தமிழகம் வரும்போதெல்லாம் அம்பை எங்கள் இல்லத்துக்கு வருவார். குழந்தைகளோடு அளவளாவுவார். எனக்கு கதா விருது பரிந்துரைத்தார்.
தமிழுக்கு ஸ்பேரோ விருதளித்து கவுரவித்தார். அவரைப் பற்றிய ஞாபகங்கள் நினைத்து மகிழத்தக்கவை.
அம்பை குறித்து தமிழ், விகடன் தடத்தில் எழுதிய கட்டுரை, அவர் குறித்த எனது முகநூல் குறிப்புகள், இவற்றைத் தொகுத்து களம்புதிது வெளியீடாக ‘விடுதலையை எழுதிய ஆளுமை’ எனும் சிறுநூலை சிறப்பு வெளியீடாகக் கொண்டு வந்தோம்.
25 பக்கங்கள். மல்டி கலர். ஆர்ட் பேப்பர். 15 பிரதிகள் மட்டுமே தயாரித்து அம்பையிடம் வழங்கினோம். (நூல் தயாரிப்பில் உதவிய சகோதரர்கள் லார்க் பாஸ்கரன், அம்பிகா குமாரன், சந்தோஷ் மூவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிப்பது அவசியம்)
அம்பை இன்னும் பல்லாண்டு காலம் நலத்தோடு வாழ்ந்து, தமிழ்ப் படைப்புலகுக்கு வளம் சேர்க்க வேண்டும். அவருக்கு நம் வாழ்த்துகள்.
நன்றி: பேஸ்புக் பதிவு