வாழ்வில் காணும் சில வினோதமான மனிதர்கள். அவர்களின் விபரீத ஆசைகள். அதனால் விளையும் குழப்பங்கள். அதற்கான தீர்வைத் தேடுகிறபோது நடக்கிற விஷயங்களை காமெடியாக சொல்லும் வகையில் பல திரைப்படங்கள் உண்டு.
எக்காலத்திற்கும் பொருந்துகிற வகையில் அப்படங்களின் ‘சாரம்’ இருக்கும். அப்படி வடிவமைக்கப்படுகிற படங்களே ரசிகர்களின் வரவேற்பையும் உடனடியாகப் பெறும்.
அந்த வகையில், சாதாரண மனிதர்கள் எதிர்கொள்கிற அசாதாரணப் பிரச்சனையொன்றைப் பேசுகிறது ‘விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’. ’விக்கி வித்யாவின் அந்த வீடியோ’ என்று இதற்கு அர்த்தம்.
அதனை அறிந்தவுடன் ‘டைட்டிலே கதை சொல்லுதே’ என்று நம் மனதுக்குள் சில விஷயங்கள் ஓடக்கூடும். திரையிலும் அது பிரதிபலிக்கப்படுகிறதா?
ஒரு விபரீத ஆசை!
1997ஆம் ஆண்டு. அப்போதைய உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்த ரிஷிகேஷில் கதை நிகழ்கிறது.
இருவரும் தங்களது வீடுகளில் அதனைச் சொல்லாமல் மறைத்து வருகின்றனர்.
இந்நிலையில், வித்யாவுக்கும் இன்னொருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது. அதனை அறிந்து அங்கு வருகிறார் விக்கி.
அவர் செய்யும் களேபரங்களால் நிகழ்ச்சி தடைபடுகிறது. அதையடுத்து, விக்கிக்கும் வித்யாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடக்கிறது.
நிச்சயதார்த்தத்திற்குப் பெண் வீட்டார் செலவு செய்தனர் என்பதால், திருமணம் மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு என்று முடிவாகிறது.
ஆனால், ஊர் பெரிய மனிதர் சஜ்ஜன் குமார் (முகேஷ் திவாரி) நடத்திவரும் அறக்கட்டளை சார்பாக நிகழும் இலவச திருமண நிகழ்வில் தனது பேரனை மணமகனாக நிறுத்த முடிவு செய்கிறார் அவரது தாத்தா (டிக்கு டால்சானியா). வித்யாவின் பெற்றோருக்கு அது அதிர்ச்சி அளிக்கிறது.
அதையும் மீறி, சில பல ஜோடிகளில் ஒன்றாக விக்கி – வித்யாவின் திருமணமும் நடைபெறுகிறது.
திருமணம் முடிந்ததும், அறக்கட்டளை ஏற்பாடு செய்த ஹோட்டலில் மணமக்கள் தங்குகின்றனர். அடுத்த நாள் விக்கியின் வீட்டுக்குச் செல்கிறார் வித்யா.
’வைஷ்ணவ தேவி கோயிலுக்கு மணமக்கள் சென்றுவர வேண்டும்’ என்று பயணத்திற்கான டிக்கெட்களை தருகிறார் வித்யாவின் தந்தை.
ஆனால், தானும் வித்யாவும் கோவா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் விக்கி.
காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதாக உறவினர்களிடம் சொல்லிவிட்டு, தேனிலவுக்காகப் புதுமணத் தம்பதிகள் கோவாவுக்குப் பறக்கின்றனர்.
அங்கு, ஹோட்டல் அறையில் ஒரு ‘ஐடியா’வை வித்யாவிடம் சொல்கிறார் விக்கி. அதனை கேட்டு வித்யா முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பிறகு சம்மதிக்கிறார்.
தங்களது முதலிரவை வீடியோவாக பதிவு செய்ய வேண்டுமென்பதே அந்த விஷயம்.
மண வாழ்வில் சோகம், விரக்தி, எரிச்சல், ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் ஏற்படும்போது அந்த வீடியோவைப் பார்த்ததும் புரிதலும் காதலும் அதிகமாகும் என்பதே அந்த ஐடியாவுக்கு பின்னிருக்கும் காரணம்.
அவ்வாறே அது பதிவு செய்யப்படுகிறது. அதனை ஒரு சிடிக்கு மாற்றி, அதன் மீது ‘முகேஷின் சோகப் பாடல்கள்’ என்று எழுதி வைக்கிறார் விக்கி.
அதற்கடுத்த நாள், வீட்டில் இருக்கும் சிடி பிளேயரை பயன்படுத்தி விக்கியும் வித்யாவும் அதனைப் பார்க்கின்றனர். அந்த நேரத்தில் தாத்தா அங்கு வர, அதனை ‘ஆஃப்’ செய்கிறார் விக்கி.
பார்வைக் கோளாறு என்பதால், அவர் எதையும் பார்க்கவில்லை. அதனால், இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். பிறகு, இருவரும் தூங்கி விடுகின்றனர்.
அடுத்த நாள் காலையில் இருவரும் கண் விழிக்கும்போது, திருடன் வந்து எல்லாவற்றையும் திருடிவிட்டதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார் தாத்தா. ஒருவழியாகப் பேசி, அவரைச் சமாதானப்படுத்துகிறார் விக்கி.
அப்போதுதான், அவருக்கு ஏதோ ஒன்று உறுத்தலாகத் தோன்றுகிறது. தங்களது அறைக்கு அவசரம் அவசரமாகத் திரும்புகிறார்.
அங்கு, சிடி பிளேயர் இல்லை. விக்கியின் மனதில் பூகம்பமே நிகழ்கிறது. அதனுள் இருக்கும் முதலிரவு வீடியோவை யாரேனும் பார்த்தால் என்னவாகும்?
அந்த எண்ணமே, வித்யாவிடம் அவ்விஷயத்தைச் சொல்லாமல் மறைக்கத் தூண்டுகிறது.
விக்கியின் வீட்டில் காணாமல் போன பொருட்கள் என்னென்ன என்று ‘லிஸ்ட்’ எடுக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாட்லே (விஜய் ராஸ்).
விக்கியின் சகோதரி சந்தா ராணியைக் (மல்லிகா ஷெராவத்) கண்டதும் அவர் மனதில் காதல் பூக்கிறது. அதனால், அந்த வழக்கை ‘ஸ்பெஷலாக’ கருதுகிறார்.
ஒருபக்கம் திருடனைத் தேடி லாட்லேவும் கான்ஸ்டபிள்களும் அலைகின்றனர். இன்னொரு பக்கம், ‘அந்த சிடியை யாரும் பார்த்துவிடக் கூடாதே’ என்று பதைபதைக்கிறார் விக்கி. அந்த சிடி பிளேயர் திருடனைத் தேடுகிறார்.
அதன்பிறகு என்னவானது என்று நகர்கிறது இப்படத்தின் மீதி.
நாயகன், நாயகியின் விபரீத ஆசையையும், அது ஏற்படுத்தும் விளைவுகளையும் சொல்கிறது இப்படம்.
வெறுமனே ‘மைண்ட்லெஸ் காமெடி’யாக இல்லாமல் கிளைமேக்ஸில் சமூகத்திற்குத் தேவையான கருத்தையும் பதிவு செய்கிறது. அந்த வகையில் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
படம் நெடுக சிரிப்பு!
‘விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’வை நாம் தியேட்டரில் காண்பதே சிறப்பு.
ஏனென்றால், சில காட்சிகளில் நடிகர் நடிகைகளின் இருப்பே சிரிப்பே வரவழைக்கிறது. பல இடங்களில் வசனங்கள் சிரிப்பூட்டுகின்றன. மொத்தத்தில் படம் நெடுக சிரித்துக் கொண்டே இருக்கலாம் என்பதுவே இதன் யுஎஸ்பி.
இயக்குனர் ராஜ் சாண்டில்யா ஏற்கனவே ட்ரீம் கேர்ள் முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்களைத் தந்திருக்கிறார்.
சிறு நகரமொன்றில் வசிக்கும் மிகச்சாதாரண மனிதர்களைத் திரையில் காட்டி, அதன் வழியே ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான கதையைச் சொல்கிறார். நகைச்சுவையே அதனைச் சொல்ல சிறந்த வழி என்று நம்பியிருப்பதே அவரது பலம்.
யூசுஃப் அலி கான் உடன் இணைந்து இதன் கதையை எழுதியிருக்கிறார்.
இதன் திரைக்கதையை இவர்கள் இருவருடன் இணைந்து இஷ்ரத் ஆர்.கான், ராஜன் அகர்வால் எழுதியிருக்கின்றனர்.
ராஜ் சாண்டில்யாவின் வசனங்கள் பல இடங்களில் சிரிப்பை எளிதில் வரழைக்கின்றன.
‘இதுவே வேறொரு இன்ஸ்பெக்டரா இருந்திருந்தா இப்படித்தான் சொல்லியிருப்பார்’ என்று விஜய் ராஸ் வசனம் பேசுகிற இடங்கள் அப்படிப்பட்டவை.
அசீம் மிஸ்ராவின் ஒளிப்பதிவு, காமெடிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு கமர்ஷியல் படத்தில் எந்தளவுக்கு சினிமாத்தனம் இருக்குமோ அதனை திரையில் வெளிப்படுத்துகிறது.
பழைய படங்களின் காட்சிகளை, பாடல்களை ‘ஸ்ஃபூப்’ செய்கிற இடங்களில் அவரது பங்களிப்பு அருமை.
அக்காட்சிகளில் மட்டுமல்லாமல், இக்கதை நிகழும் 1997ஆம் ஆண்டைக் காட்டுவதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர் தயாரிப்பு வடிவமைப்பளர்கள் ரஜத் பொடார் மற்றும் பரிஜத் பொடார்.
பிரகாஷ் சந்தர சாஹுவின் படத்தொகுப்பில், திரையில் கதை சீராக விரிகிறது.
இன்னும் ஆடை வடிவமைப்பு, சண்டைக்காட்சி வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, நடன வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ், டிஐ என்று பல அம்சங்கள் இயக்குனர் காட்டிய உலகம் உருப்பெற வழி வகுத்திருக்கின்றன.
பின்னணி இசை அமைத்துள்ள ஹித்தேஷ் சோனிக், காட்சிகளில் இருக்கும் நகைச்சுவையைப் பன்மடங்காக ஆக்க உதவியிருக்கிறார்.
சச்சின் ஜிகரின் இசையில் பாடல்கள் துள்ளலாட்டம் போட வைக்கின்றன. ’தும் ஸே மிலே ஹோ’, ’முஷ்கில் ஹை’, ’மர்ஜானியா’, படத்தின் முடிவில் வரும் ‘சும்மா’ பாடல்கள் முதல்முறை கேட்கையிலேயே ஈர்க்கின்றன.
அவற்றைத் தாண்டி ’வொயிட் நாய்ஸ் கலெக்டிவ்ஸ்’ஸின் ‘சஜ்னா வே சஜ்னா’ பாடலும், தலேர் மெஹந்தியின் ’நா நா நா நா நா ரே’வும் குஷியில் குதிக்க வைக்கின்றன. ரீமிக்ஸ் பாடலான ‘தும்ஹே அப்னா பனானே’வும் அதில் அடக்கம்.
இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பே, இதன் கதை சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்னர் நிகழ்வதாக வடிவமைத்திருப்பது தான்.
அதனால், இந்தி திரையுலகின் வெற்றிப்படங்களை, ஜாம்பவான்களை பிரதியெடுத்துக் காட்டுவதன் மூலமாகச் சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
இந்தி திரையுலகில் இப்போதுள்ள நடிகர்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்குபவர் ராஜ்குமார் ராவ்.
கருத்து தெறிக்கிற படங்கள், கமர்ஷியல் படங்கள் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் ‘சீரியசாக’ தனது நடிப்பை வெளிப்படுத்தி வருபவர். இதிலும் அதையே கையாண்டிருக்கிறார்.
’அனிமல்’ படத்தில் அழகுப்பதுமையாக வந்து போன ட்ரிப்தி டிம்ரி இதில் அபாரமாக நடித்திருக்கிறார். காமெடி மட்டுமல்லாமல் சீரியசான காட்சிகளிலும் சிறப்பாக வந்து போயிருக்கிறார்.
இந்த படத்தின் ஆகப்பெரிய சிறப்பு, விஜய் ராஸ் – மல்லிகா ஷெராவத் ஜோடியின் ‘காமெடி அட்ராசிட்டி’.
’காக்கி சட்டை’ வில்லனான விஜய் ராஸ் காமெடியில் பட்டையைக் கிளப்புவது ரசிகர்களுக்குத் தெரிந்த விஷயம்.
ஆனால், தனது உடல் கவர்ச்சியை நம்பியது போதும் என்ற எண்ணத்துடன், நடிப்பை நம்பி மல்லிகா களமிறங்கியிருப்பதுதான் இப்படம் தரும் ஆச்சர்யம்.
இவர்கள் தவிர்த்து அர்ச்சனா புரன் சிங், மஸ்த் அலி, முகேஷ் திவாரி, அஸ்வினி கல்சேகர் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
’ஒரு நகைச்சுவைப் படம்’ என்பதைத் தாண்டி, சமூகத்தில் தற்போது நிகழ்கிற ஒரு விஷயத்தையும் பிரதிபலிக்கிறது இந்த ‘விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’.
ஆபாச வீடியோக்களை சாதாரண மக்களில் சிலர் தேடித் தேடிப் பார்ப்பதும், அதனை உருவாக்க ஒரு கும்பல் வேட்கை கொண்டு திரிவதும், அவ்வப்போது செய்திகளில் நாம் பார்த்த விஷயம் தான்.
அந்த போக்கைக் கேள்விக்கு உட்படுத்துகிறது இப்படம்.
அந்த காட்சியில் மட்டும் ‘தீவிரமான கதை சொல்லலை’ கையாண்டிருக்கிறார் இயக்குனர் ராஜ் சாண்டில்யா.
‘படம் முழுக்க காமெடியா நிறைச்சிட்டு கடைசியில இப்படிப் பண்ணீட்டீங்களே’ என்று கேட்க முடியாத வகையில் நேர்த்தியாக அதனை வடிவமைத்திருக்கிறார்.
அந்த சாமர்த்தியமும் திறமையும் சாதாரணமாகக் கைவராது. அதற்காகவே, ‘விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’ படத்தை இயக்கியிருக்கும் ராஜ் சாண்டில்யாவையும், அவருக்கு உறுதுணையாக இருந்த குழுவினரையும் பாராட்டலாம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்