அக்கா – தம்பி பாசத்தை முன்வைத்து பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன. எங்க வீட்டுப் பிள்ளைக்கு முன் தொடங்கி சிவப்பு மஞ்சள் பச்சைக்குப் பின்னரும் தொடர்கிறது அந்தப் பட்டியல்.
இதர மொழிப் படங்களிலும் அப்படிப்பட்ட படங்கள் நிறையவே இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
ஏனென்றால், ஒரு திரைப்படம் ரசிகர்களை எளிதில் கவர வேண்டுமானால் அதில் பாசப்பிணைப்புகள் சார்ந்த அம்சங்கள் இடம்பெற வேண்டியது கட்டாயம்.
அப்படிப்பட்ட திரைப்படங்கள் வெறுமனே ‘பேமிலி ட்ராமா’வாக இல்லாமல் ‘ஆக்ஷன்’ வகைமையில் அமைந்தால் எப்படியிருக்கும்? அந்தக் கேள்வியைத் தாங்கி வந்திருக்கிறது ஆலியா பட், வேதாங்க் ரெய்னா நடித்துள்ள ‘ஜிக்ரா’. வாசன் பாலா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
வெளிநாட்டுச் சிறையில் மரண தண்டனையை எதிர்கொள்ளவிருக்கும் சகோதரனைக் காப்பாற்றுவதற்காக ஒரு பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களைக் காட்டுவதாக, இப்படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது.
’ஜிக்ரா’ திரையில் தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?
மனதில் உறுதி வேண்டும்!
உடன் இருக்கும் சகோதரன் அங்குர் ஆனந்த் அதனைக் காணக் கூடாது என்று அவரைத் தனது கைகளுக்குள் அடக்கிக் கொள்கிறார்.
அதே பாசம் வளர்ந்தபிறகும் மாறாமல் இருக்கிறது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு சத்யாவும் அங்குரும் வெளிநாடு ஒன்றில் உறவினர்கள் ஆதரவில் வாழ்ந்து வருகின்றனர்.
உறவினரின் நிறுவனத்தில் சட்டரீதியான பணிகளைச் செய்யும் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார் சத்யா. ஆனால், அவர் மேற்கொள்ளும் பணிகள் எல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக இருக்கின்றன.
இந்த நிலையில், அந்த உறவினரின் மகன் கபீர் ஹான்சி தாவோ எனும் வெளிநாட்டுக்கு வர்த்தகப் பயணம் மேற்கொள்கிறார். தன்னுடன் அங்குர் ஆனந்தையும் அழைத்துச் செல்கிறார்.
பல மாதங்களாக அங்குர் தயார் செய்த வர்த்தகத் திட்டத்தை, அந்நாட்டிலுள்ள சில நிறுவனங்களிடம் பகிர்ந்து புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதே அவர்களது திட்டம். அலுவல் பணிகள் முடிந்த பின்னர், இருவரும் ஒரு பப்புக்கு செல்கின்றனர். அங்கு மது அருந்துகின்றனர்.
அதன்பிறகு, ஒரு நபரிடம் இருந்து போதைப்பொருளைப் பெறுகிறார் கபீர். அதனைத் தனது பேண்ட் பாக்கெட்டில் வைக்கிறார்.
போக்குவரத்து சிக்னலில், அருகில் நிற்கும் காரில் இருவரும் ஒரு பெண்ணைப் பார்க்கின்றனர். அந்த பெண்ணின் பின்னால் காரில் செல்கின்றனர். உண்மையில், அந்தச் செயலில் ஈடுபடுவது கபீர் மட்டுமே.
திடீரென்று அந்த பெண்ணின் கார் பாய்ந்து சென்றுவிட, போலீசார் அவர்களது காரை மடக்குகின்றனர். காரில் இறங்கச் செய்து, இருவரையும் சோதிக்கின்றனர். போதைப்பொருள் வைத்திருந்த காரணத்திற்காகக் கைதாகிறார் கபீர்.
விஷயம் தெரிய வந்ததும், அந்த உறவினரின் குடும்பம் ஆடிப் போகிறது. எப்படியாவது கபீரைக் காப்பாற்ற வேண்டுமென்று அவரது பெற்றோர் நினைக்கின்றனர். அதற்காக, அங்குரின் வாழ்வைப் பலிகடா ஆக்கத் துணிகின்றனர்.
தலைமை வழக்கறிஞர் ஹான்சி தாவோவுக்குச் செல்கிறார். கபீரைச் சந்திக்கிறார். ‘இந்த போதைப்பொருளை உன்னிடம் தந்தது அங்குர் தான் என்று சொல். அதைத் தவிர நீ உயிர் பிழைக்க வேறு வழியில்லை’ என்கிறார். பாதி மனதோடு அவரும் சம்மதிக்கிறார்.
அதேபோல, அங்குரைச் சந்திக்கிறார் அந்த வழக்கறிஞர். ‘அந்த போதைப்பொருளை வைத்திருந்தது நீ தான் என ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்கிறார்.
சில மாதங்கள் சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுதலை ஆகிவிடுவாய் என்று பொய் சொல்கிறார்.
அதனை நம்பி, நீதிமன்றத்தில் அங்குர் குற்றத்தைத் தான் செய்ததாக ஒப்புக்கொள்கிறார். அதையடுத்து, நீதிபதி அளிக்கும் தீர்ப்பு அவரது இதயத்தைச் சுக்குநூறாக்குகிறது.
‘மூன்று மாத காலத்திற்குப் பிறகு மின்சாரம் பாய்ச்சி மரண தண்டனையைச் செயல்படுத்த வேண்டும்’ என்று அவர் தீர்ப்பளிக்கிறார். அதனைக் கேட்டதும் அங்குர் அலறித் துடிக்கிறார்.
’என்னால் எதுவும் செய்ய முடியவில்லை’ என்று உறவினர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞர் சொல்ல, அதனைக் கேட்டு தனது ஆத்திரத்தை வெளிப்படுத்த இயலாத நிலையில் இருக்கிறார் சத்யா.
சகோதரனை மீட்கத் தானே அந்நாட்டுக்குச் செல்வது என்று முடிவு செய்கிறார்.
ஹான்சி தாவோ (கற்பனையான நாடு) சென்ற சத்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சட்டரீதியான எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட தம்பியைக் காப்பாற்ற, சட்டவிரோதமாகச் செயல்பட்டு சிறையில் இருந்து அவரை வெளியே கொணர்வதுதான் ஒரே வழி என்று அவர் நினைக்கிறார்.
மரண தண்டனையை விதிக்கப்பட்ட மகனைக் காக்கப் போராடும் முன்னாள் கேங்க்ஸ்டர் சேகர் பாட்டியாவும் (மனோஜ் பாஹ்வா), தனது தவறான அனுமானத்தால் மரண தண்டனைக்கு ஆளான ஒருந் அபரைப் போராடும் முன்னாள் போலீஸ் அதிகாரி முத்துவும் (ராகுல் ரவீந்திரன்) சத்யாவுடன் கைகோர்க்கின்றனர்.
அவர்கள் நன்றாகத் திட்டமிட்டு, சில ஏற்பாடுகளைக் கச்சிதமாகச் செய்து, ஒரு பண்டிகை நாளன்று அந்த மூன்று பேரையும் சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எண்ணுகின்றனர்.
ஆனால், அதற்கு முன்னதாக அந்தக் கைதிகள் வேறு சிலரோடு சேர்ந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.
அதில் தோல்வியுற்று சிறைக்காவர்களிடம் மாட்டிக் கொள்கின்றனர். அதையடுத்து, அவர்களது மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிடுகிறார் சிறையின் தலைமை அதிகாரி ஹன்ஸ்ராஜ் லண்டா (விவேக் கோம்பர்).
அதன்பிறகு என்னவானது? தம்பி அங்குர் ஆனந்தைச் சத்யா காப்பாற்றினாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
உறுதியான மனதுடன் தான் நினைத்ததைச் செயல்படுத்துகிற துணிச்சலை சத்யா கைக்கொண்டாரா, இல்லையா என்பதுடன் இப்படம் முடிவடைகிறது.
முழுமையற்ற காட்சியனுபவம்!
’ஜிக்ரா’ முழுக்கவே ஆலியா மயமாக இருக்கிறது. அந்தளவுக்குப் பல காட்சிகளில் அவரது இருப்பு வியாபித்திருக்கிறது. அந்தப் பொறுப்பைத் தன் தோள்களில் தாங்கும் அளவுக்குத் திரையில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆலியா பட்.
சகோதரராக நடித்துள்ள வேதாங்க் ரெய்னா தான் இக்கதையின் பிரதானம் என்றபோதும், அவருக்கான ஷாட்கள் படத்தில் குறைவு.
சிறை அதிகாரியாக வரும் விவேக் கோம்பர் கம்பீரமாகவும் மிரட்டலாகவும் தோன்றியிருக்கிறார். அடுத்தடுத்து இவரைத் தமிழ், தெலுங்கு படங்களில் வில்லனாகப் பார்க்க நேரிடலாம்.
கேங்க்ஸ்டராக வரும் மனோஜ் பாஹ்வா ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ராகுல் ரவீந்திரன் இக்கதையில் முக்கியப் பாத்திரமாக வந்தாலும், இறுதியில் அவரது இருப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது.
அதனை அப்படிச் சித்தரித்திருக்கத் தேவையில்லை அல்லது அதற்கேற்ற காட்சிகளைத் திறம்பட எழுதியிருக்கலாம்.
இவர்கள் தவிர்த்து படத்தில் சிலர் தலைகாட்டியிருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் ஸ்வப்னில் சோனேவானே தனது திறமையைத் தொடக்கத்தில் வரும் 20 நிமிடக் காட்சிகளிலேயே வெளிப்படுத்தி விடுகிறார்.
உறவினர் திருமண நிகழ்வில் அலுவல்ரீதியிலான ஆடை அணிந்தவாறே ஆலியா பட் அங்குமிங்கும் நடமாடுவதைக் காட்டும்போது, அவரது கேமிராவுடன் நாமும் பயணிக்கும் உணர்வை உருவாக்கியிருக்கிறார்.
பின்பாதிக் காட்சிகளிலும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார். அதனால், இப்படத்தின் ஒளிப்பதிவு தரம் அருமை என்றே சொல்ல வேண்டும்.
படத்தொகுப்பாளர் பிரேர்னா சைகல், ஒவ்வொரு காட்சியையும் சரியான கால அளவில் நறுக்கியிருக்கிறார். ஆனால், அதற்கேற்றவாறு திரைக்கதை கனகச்சிதமாக எழுதப்படாதது இப்படத்தின் குறை.
முகுந்த் குப்தாவின் தயாரிப்பு வடிவமைப்பு, விக்ரம் தாஹியாவின் சண்டைக்காட்சி வடிவமைப்பு உட்பட இப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் பல தொழில்நுட்ப அம்சங்கள் அமைந்திருக்கின்றன.
அதில் குறிப்பிடத்தக்கது, பின்னணி இசை தந்துள்ள அச்சிந்த் தாக்கரின் பங்களிப்பு. காட்சிகளில் நிறைந்துள்ள
பரபரப்பை மேலும் அதிகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறது அவர் தந்திருக்கும் இசை. அதே நேரத்தில், பாடல்கள் சுமார் ரகம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒரு நட்சத்திர நடிகையை முன்னுறுத்துகிற திரைக்கதைக்குப் பெரும் பொருட்செலவில் உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வாசன் பாலா.
வழக்கத்திற்கு மாறானதொரு காட்சியனுபவத்தைப் பார்வையாளர்கள் பெற வேண்டுமென்று நினைத்திருக்கிறார். ஆனால், அதற்கேற்ற எழுத்தாக்கத்தைக் கையாளத் தவறியிருக்கிறார்.
அதனால், நாம் பெறும் திரையனுபவம் முழுமையற்றதாக இருக்கிறது. அதற்குக் காரணம், பாத்திரங்களும் காட்சிச்சூழல்களும் முழுமையற்று இருப்பதுதான்.
தனது சகோதரனைக் காப்பாற்ற எதிரில் நிற்கும் நூறு பேரை நாயகி காப்பாற்றுவதாகச் சொல்வதை ரசிகர்கள் எளிதில் ஏற்றுக்கொள்வார்கள்.
அதேநேரத்தில், சிறை தகர்ப்பினால் இன்ன பிற கைதிகளும் வெளியே வருவார்கள் என்பதை அறிந்தபின்னும் அதனைச் செய்ய அவர் தயாராகிறார் என்பதை ஏற்க முடிவதில்லை. காரணம், இதுவரை நாம் பார்த்த திரைப்படங்களின் தாக்கமாக இருக்கலாம்.
இந்தக் கதையில் அந்த உறவினர்களும் வில்லத்தனம் நிறைந்தவர்கள் தான். அவர்கள் என்னவானார்கள் என்பது பற்றிய குறிப்புகள் திரைக்கதையில் இல்லை.
‘சிறை தகர்ப்பு’ என்பது சாத்தியமில்லாத ஒரு விஷயம். அதனைத் திரையில் காட்டும்போது மிகுந்த ‘பில்டப்’ உடன் காட்டினால் மட்டுமே ரசிகர்கள் மலைத்துப் போவார்கள். இதில், இயக்குனர் அதனை நிகழ்த்தவில்லை.
போலவே, நாயகி உள்ளிட்ட்ட சிலரது முயற்சி தோல்வியில் முடிவதையும் திரையில் அடிக்கோடிட்டுக் காட்டவில்லை.
இக்கதையில் வரும் சிறை அதிகாரி உடன் அந்த பெண்ணின் சகோதரன் மோதுகிறார். அதனால் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகிறார்.
அவரை நாயகி நேரில் எதிர்கொள்வது போலவோ அல்லது அந்த சகோதரன் அவர் மோதுவது போன்றோ ‘க்ளிஷே’வான காட்சிகள் இதில் இல்லை. ஆனால், அதனைப் பெருமையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
உயிரினும் மேலான சகோதரனைக் காப்பாற்ற வாழ்வின் எந்த எல்லைக்கும் ஒரு பெண் செல்வார் என்பதுதான் இக்கதையின் மையம்.
அதனைச் சொல்லும்போது, அறத்திற்கும் காட்சியமைப்பில் இடம் தந்திருக்க வேண்டும். அப்போது, அது பார்வையாளரோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்தியிருக்கும்.
அதனைத் தவறவிட்ட காரணத்தால், அலங்கரிக்கப்பட்ட ஒரு உயிரற்ற உடலாகவே இத்திரைக்கதை இருக்கிறது.
இதே போன்ற காட்சியமைப்போடு, ஆங்கிலத்தில் ‘தி நெக்ஸ்ட் த்ரீ டேஸ்’ எனும் ஆங்கிலப் படம் உண்டு.
ரஸ்ஸல் க்ரோ நடித்த அப்படமே, ‘எனிதிங் ஃபார் ஹெர்’ எனும் பிரெஞ்ச் படத்தின் தழுவல்தான்.
அதில், சந்தர்ப்பவசத்தால் சிறையில் தண்டனை அனுபவிக்கும் தனது மனைவியைக் காப்பாற்ற ஒரு கணவன் படும் பாடு விலாவாரியாக விவரிக்கப்பட்டிருக்கும்.
அக்காட்சிகள் நம் நெஞ்சத்தைத் தொடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்த உள்ளடக்கத்தில் பாதி கூட ‘ஜிக்ரா’வில் இல்லை.
‘திரையில் யாருக்கு முதலிடம் தருவது’ என்கிற பிரச்சனை இப்படத்தின் ஆக்கத்தில் எழுந்திருக்கலாம்.
அதனாலேயே இப்படியொரு காட்சியனுபவத்தை ரசிகர்கள் பெறுகின்றனர் என்றால் அதற்கான முழுப்பொறுப்பும் இயக்குனர், தயாரிப்பாளருடையது.
ரசிகர்களின் வரவேற்பை விட ஒரு நட்சத்திரத்தின் பிம்பம் அந்தளவுக்கு உயர்ந்ததா? ‘ஜிக்ரா’ போன்ற படங்களின் வெற்றியும் தோல்வியுமே அக்கேள்விக்கான பதிலைத் தீர்மானிக்கும்..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்