‘வாழை’ மீட்டிய பால்ய நினைவுகள்…!

ஓவியர் ஜீவானந்தன்

சிறார்கள், படிக்கும் வயதில் கடுமையாகப் பணி புரிவது என்பது எல்லோருக்கும் வாய்க்காது. என் தந்தை சிறுவனாக, மலையிலிருந்து கிழங்கும் விறகும் கூலிக்காக சுமந்து வந்திருக்கிறார். முக்கூடல் ஆணை கட்டும்போது கல் சுமந்திருக்கிறார்.

அவர் அளவுக்கு கஷ்டப்படவில்லை என்றாலும் நானும் பள்ளிப் பருவத்திலிருந்தே பெரிய அளவுள்ள பேனர்களில் பெயிண்ட் அடிப்பது, வரைவது என்று வயதுக்கு மீறிய கடுமையான பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறேன்.

அதனால் 20 வயதிலேயே தொழிற்முறை ஓவியனாக அவதாரம் எடுக்க முடிந்தது.

வாழை பார்க்கும்போது இவையெல்லாம் நினைவுக்கு வந்தன. இதிலும் அந்த பையன் வாழை சுமக்கிறான்… எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்காக.

ஒரு கொடிய விபத்தைக் கதையின் உச்சகட்டமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கின்றனர். வழக்கமான அழகான வெள்ளைத் தோல் நாயகி டீச்சர்.

சிறுவனுக்கும் டீச்சருக்கும் ‘ரதி நிர்வேதம்’ காலத்து நட்பு! எங்கே போய் முடியுமோ என்று நான் பயந்தது உண்மை!

இதில் வாழை சுமக்கும் வலியை டீச்சர் எபிசோடு வெகுவாகக் குறைத்துவிடுகிறது!

கொஞ்சம் புரட்சி வாடை வீசவேண்டும் என்பதற்காக அரிவாள் சுத்தியல் பேட்ஜ் எல்லாம் காட்டுகிறார்கள்.

கடைசியில் பிளாக் & ஒயிட், விபத்தில் இறந்து போனவர்களின் backlight உருவங்கள், பறவைகள் பறப்பது என்று திரும்பத் திரும்ப காட்டுவது ஏதோ surrealistic technic என்று நினைக்கிறேன்.

நெல்லை மொழி அருமையாக அமைந்திருக்கிறது. அந்த பையன் பிரமாதமாக நடித்திருக்கிறான்.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment