புரதச்சத்து அதிகமுள்ள முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வோம்!

 அக்டோபர் – 11: உலக முட்டை தினம்

சமையல்களில் எளிமையாக சமைக்க ஏற்றது முட்டை. இதைப் பிடிக்காத நபர்கள் என்றால் சற்று குறைவுதான்.

புரதச் சத்து அதிகம் நிறைந்து காணப்படும் முட்டையை தினமும் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்று முட்டை தினம் அனுசரிக்கப்படுகிறது.

1996 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமை, உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

முட்டையின் நன்மைகள் குறித்தும், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் முக்கியத்துவங்கள் மக்களுக்கு உணர்த்துவதே இந்த நாளின் நோக்கம்.

பொதுவாக கோழி முட்டை தான் அதிகம் நாம் எடுத்துக் கொள்வோம். இருந்தாலும் உலகளவில் முட்டைக்கான சந்தையில், கோழி முட்டை மட்டுமன்றி வாத்து, காடை, கௌதாரி முட்டைகளும் கிடைக்கின்றன.

கிராமப்புறங்களில் மட்டுமே கிடைத்த காடை, வாத்து என பிற முட்டைகள் தற்போது நகரங்களிலும் பிரபலமாகி வருகின்றன.

நடுத்தரக் குடும்பங்களும் குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்துக் கொண்ட உணவு என்றால் அது முட்டை மட்டும் தான்.

எனவே, வளரும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும், வைட்டமின் சத்துக்களும் முட்டையில் நிறைந்து இருக்கிறது.

குறிப்பாக, வைட்டமின் – ஏ, பி 12, பி 2, பி 5, இ போன்றவைகளும் கோலின், சீயாந்தீன் ஆகிய கனிமச்சத்துக்களும் முட்டையில் காணப்படுகிறது.

பொதுவாக மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து அதிகம். இதைத் தவிர்த்து புரதச் சத்து அதிகம் நிறைந்த வெள்ளை பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

இதயத்தில் பிரச்சனை இருப்பவர்கள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றோர் மஞ்சள் கருவைத் தவிர்த்து மற்றவை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக நம்மிடம் ஒரு பழக்கம் உண்டு. பெண் குழந்தைப் பருவம் அடைந்த உடன் பச்சை முட்டையைக் குடிக்க வைப்பது. இது பாக்டீரியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர்.

நாம் எடுத்துக் கொள்ளும் முட்டையில் அதிகப் புரதம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், வைட்டமின் ஏ, ஈ மற்றும் பி 6 அதிகமாக உள்ளது.

இது நம்முடைய தசை, திசுக்கள் மற்றும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.

பச்சையாகக் குடிப்பதற்கு பதில் முட்டையை வேகவைத்து சாப்பிடலாம். இதில் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கியுள்ளன.

ஆகவே, தினமும் உங்களுடைய உணவில் வேகவைத்த முட்டைகளைச் சேர்த்துக் கொள்வது மூளையைப் பலப்படுத்த உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் எடை குறைக்க உதவும்

முட்டையில் 77 கலோரிகள் மற்றும் 5 கிராம் கொழுப்புகள் இதில் அடங்கி இருப்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் மற்ற உணவுகளைக் குறைத்துக் கொண்டு வேகவைத்த முட்டையை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆஃப்பாயில் தவிர்த்து அதற்கு பதிலாக வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து ஆம்லெட் போட்டு முழுமையாக வேக வைக்காமல் எடுத்துக் கொண்டால் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

முட்டையில் நிறைந்திருக்கும் புரதம்

முட்டையில் 9 வகையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. ஒரு பெரிய முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது. இது தசைகளின் வளர்ச்சி மற்றும் பழுது பார்க்கும் வேலையைச் செய்கிறது.

வைட்டமின்கள் செயல்பாடுகள்:

முட்டையில் இருக்கும் வைட்டமின் பி-12 இரத்த சிவப்பணு உருவாக்கம் மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கிறது. அதே நேரத்தில் வைட்டமின் டி எலும்பு மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

முட்டையில் இருக்கும் தாதுக்கள்:

முட்டையில் இரும்பு, துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற முக்கியமான தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல இரும்பும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு மற்றும் காயத்தை குணப்படுத்துவதற்கு துத்தநாகமும் முக்கியமாக தேவைப்படுகிறது.

முட்டையில் இருக்கும் கோலின் மற்றும் ஒமேகா 3 இருப்பதால் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நினைவாற்றல் மற்றும் தசைக் கட்டுப்பாட்டில் ஈடுபடும் நரம்பியக் கடத்தியான அசிடைல்கொலின் உற்பத்திக்கு கோலின் மற்றும் ஒமேகா சத்துக்கள் உதவுகின்றன.

கர்ப்ப காலத்தில் முட்டை எடுத்துக் கொள்ளும் போதும் ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் வளரும் கருவை பாதுகாக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கோலின் ஒரு முக்கிய ஊட்டச் சத்தான உணவாகும்.

மேலும், இதில் ஃபோலேட் இருப்பதால் பிறப்பு குறைபாடுகளைத் தடுத்து ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆகவே, ஆரோக்கியம் காக்கும் முட்டையை தினமும் எடுத்துக் கொள்வோம் என இந்த உலக முட்டை தினத்தில் உறுதியேற்போம்.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment