ஒரு கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு மரத்தடியில் உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தனர்.
அந்த இடத்தில் என்ன கூட்டம் என்று விசாரித்தேன். இங்கு மட்டன் பிரியாணி செய்கின்றார்கள், பொதுமக்களுக்கு விருந்து கொடுக்க என்றார் அங்கு நின்று கொண்டிருந்த மனிதர்.
எதற்காக என்றேன்? உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது, அதில் இந்த விருந்தை ஏற்பாடு செய்திருப்பவர் போட்டியிடப் போகிறார், அதற்காகத்தான் என்றார். இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறதே, இப்போதே இவர் ஆரம்பித்து விட்டாரே என்றேன்.
ஆம். இது ஒரு அறிமுக விருந்துதான், இங்கிருந்து ஆரம்பித்து தேர்தலுக்கு முதல் நாள் மதுபானம், பரிசுகள், பணம் என பல வினியோகங்கள் நடைபெறும். அனைவருக்கும் கொண்டாட்டம்தானே என்றார்.
எதற்கு இவ்வளவு செலவு செய்து இந்தப் பதவியைப் பிடிக்க வேண்டும்? என்றேன்.
அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் இங்கு வாருங்கள் நான் விளக்கம் கூறுகிறேன் என்றார்.
அவர் ஒரு பெருங்கல்லின்மேல் அமர்ந்திருந்தார். அங்கு சென்றேன். ஐயா என்னால் நிற்க முடியாது, உட்கார்ந்து கொண்டுதான் பேசுவேன், மன்னிக்கவும் என்றார்.
பரவாயில்லை, “எதோ விளக்கம் தருவதாக அழைத்தீர்களே, கூறுங்கள்” என்றேன். பொதுவாக பதவிகளைப் பிடிக்க அனைவரும் அலைவது மக்களைப் பாதுகாக்கவோ மேம்படுத்தவோ, மக்களுக்குத் தொண்டு செய்யவோ அல்ல. இன்று இந்த உண்மையை எவரும் மறைப்பதில்லை.
நீங்கள் ஏன் அரசியலுக்குச் செல்லுகின்றீர்கள் என்று யாரைக் கேட்டாலும் அனைவரும் கூறுவது, மற்றவர்கள் அரசியலில் என்ன செய்கின்றனரோ, அதைத்தான் நானும் செய்யப் போகிறேன் என்று கூறுகின்றனர்.
அரசியல் செய்வோர் வாழ்வு எவ்வளவு வளமாக இருக்கிறது என்பதை பொதுமக்கள் பார்த்து வியக்கின்றனர்.
அந்த அளவுக்கு வீடு, வசதி, கார், உடை, உதவியாளர்கள், சொத்து என வளமும், வசதிகளும் வந்த வண்ணம்தான் இருக்கின்றன.
இது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் உள்ளாட்சியில் பதவிக்கு போட்டி போடுபவர் அனைவரும் பணம் சம்பாதிக்க என்று நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதே நேரத்தில் போட்டிப் போடுபவர்கள் அனைவரும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைத்து பதவிக்குத் துடிக்கவில்லை. பலரும் பல குறிக்கோள்களை வைத்துக்கொண்டுதான் எந்தப் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எண்ணி போட்டிப் போடுபவரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இன்று அப்படிச் செய்வோர் அரைப் பைத்தியமாக இருப்பார்கள். அப்படிச் செயல்படுகின்றவர்கள் வெற்றி பெறுவதும் மிகவும் குறைவு.
தற்போது கிடா விருந்து வைக்கிறாரே அவர் சம்பாதிக்க இந்தப் பதவியைப் பிடிக்க நடத்துகிறார் என்று நினைக்காதீர்கள்.
அவரிடம் அவர் செய்யும் தொழில் மூலம் சம்பாதித்த பணம் கோடியில் வைத்திருக்கிறார்.
ஆனால் அந்தப் பணத்தால் அவருக்கு எந்த பெருமையும், மரியாதையும், அந்தஸ்தும் கிடைக்கவில்லை.
எனவே இந்த தலைவர் பதவியைப் பிடித்துவிட்டால், அவர் அந்தப் பதவியால் மதிக்கப்படுவார். அவரை மக்கள் தேடி வருவார்கள்.
தலைவர், தலைவர் என அனைவரும் அழைப்பார்கள், அவரிடம் பல உதவிகளைப் பெற பலரும் அவர் வீட்டுக்குச் செல்வார்கள்.
அப்பொழுது அவர் வீட்டைப் பார்ப்பார்கள், அவர் வைத்திருக்கும் விலையுயர்ந்த கார் மற்றும் பொருள்களைப் பார்த்து வியந்து அவரைப் பற்றி ஒரு உயர்வான பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு செல்வார்கள்.
பல அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கும். இதன் மூலம் தனக்கு ஒரு விளம்பரம் கிடைக்கும்.
அது மட்டுமல்ல தனக்குக் கிடைக்கும் தொடர்புகள் மூலம் தன் வணிகத்திற்கும் ஒரு பாதுகாப்பு, மற்றும் வணிக விரிவாக்கத்திற்கு உதவிகளும் கிடைக்கும் என்றுகூட நினைத்து போட்டியிடலாம்.
இவரைப் போன்றே மற்றவர்களும் இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் தற்போது தலைவர்களாக இருப்பவர்கள் எவ்வளவு சம்பாதித்து விட்டனர் என்ற நோட்டம் பார்த்து, அந்த இடத்தை நாம் ஏன் பிடித்து பதவிக்கு வரக்கூடாது என்று நினைத்து போட்டிபோடுபவரும் உண்டு.
இன்னும் சிலர் அந்தப் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது எனவே அதை தன் மனைவியை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அந்த அதிகாரத்தை நாம் கையில் வைத்துச் செயல்பட்டு நம் அரசியலை வியாபித்துக் கொள்ளலாம் என்று போட்டியில் இறங்குவதும் உண்டு.
எனவே பதவி என்பது பணம் சம்பாதிக்க மட்டுமே என்று நாம் நினைப்பது தவறு என்று விளக்கினார்.
அதே நேரத்தில் அனைவரும் மக்களுக்குச் சேவை செய்ய எண்ணி போட்டியிடுகிறார் என்றும் நாம் எண்ணிவிடக் கூடாது.
நான் பிரியாணி போடுகிறேன், வந்து உண்டுவிட்டுப் போங்கள் என்று கூறுவது, மக்களை அவமானப்படுத்துவது ஆகாதா? என்றேன். அவர் சற்று உற்றுப் பார்த்துவிட்டு, ஐயா, பசியும், வறுமையும் எதையும் இழக்க வைக்கும்.
இதை அரசியலில் ஒரு முப்பது ஆண்டு காலமாக நாம் பார்த்து வருகிறோம். தற்போது சாப்பாடு அல்ல கிடா விருந்து என பெயர் வைத்து வந்து உணவு உண்பவர்களை விருந்து சாப்பிடுகிறார்கள் என்று சற்று கவுரவமாக நடத்துகிறார்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதில் காவு கொடுக்கப்படுவது சுயமரியாதைதான். அதை இவர் ஆரம்பிக்கவில்லை.
கட்சிகள் ஆரம்பித்து இன்று பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் வரை கொண்டுவந்து நிறுத்திவிட்டனர். பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு இதுபோன்று பல விருந்து நடந்ததை தாங்கள் பார்க்கவில்லையா” என்றார்.
“மக்கள் பிரியாணி சாப்பிடுவதை ஒளிப்படம் எடுத்து யூடியூப்பில் போட்டுக் காண்பித்தார்கள்” என்றார்.
இந்த பிரியாணி சாப்பிடுவதில் மட்டுமா சுயமரியாதை போனது, என்று கட்சித் தலைவரை அண்டி வாழ்ந்தால்தான் பதவிகள் கிடைக்கும், பதவிக்கு வந்தால்தான் சம்பாதிக்க முடியும்,
பதவியில் இருந்தால்தான் தன் மக்களுக்கு நல்ல வேலைகள் வாங்க முடியும் என்ற நிலை வந்ததோ, அன்றே அனைவரும் தன்மானத்தை இழக்கத் தயாராகிவிட்டோம்.
அது எதோ ஏழை எளிய மக்கள்தான் சுயமரியாதை இழந்து விட்டதாக நீங்கள் நினைக்கின்றீர்கள், பதவிகளைப் பெற்றவர்கள், தலைமைக்கு அஞ்சி நடுங்குவதையும், எந்த அவமானத்தையும் தாங்கிக் கொண்டு பதவிகளில் ஒட்டிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா” என்றார்.
ஏன் இந்த நிலை என்றேன். அதற்கும் அவர் சளைக்காமல் ஒரு கருத்தை முன் வைத்தார்.
“ஒரு காலத்தில் பதவிகளைவிட நம் தலைவர்கள் உயர்ந்து நின்றார்கள். அவர்கள் தன்மானம், சுயமரியாதை, தியாகம், சேவை என்பதில்தான் தோய்ந்திருந்தார்கள்.
அவர்களின் உயரம் பதவிகளின் உயரத்தைத் தாண்டியது. அவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்கள்.
மக்களின் அன்பைப் பெற்றவர்கள். அவர்களால் பதவி பெருமையடைந்தது. ஆகையினால் பதவிகள் அவர்களுக்கு சிறிது, துச்சம்.
எப்போதும் தூக்கி எறிய தயார் ஆனார்கள். பதவியால் அவர்கள் பெற்றது எதுவும் இல்லை. அவர்கள் வகித்த பதவியால் பயன் அடைந்தவர்கள் பொதுமக்கள்.
ஆனால், இன்று பதவிகளில் இருக்கக் கூடியவர்களை, அதைவிட்டு வெளியே வந்துவிட்டால், போலீஸ்காரர்களும் பாதுகாப்புத் தரும் கருப்புப் பூனைகளும் வெளியே சென்றுவிட்டால், தன்பின் அணி வகுக்க கார்கள் இல்லை என்றால், இவர்களை தங்கள் வீட்டில் உள்ள வேலைக்காரர்கள்கூட மதிக்க மாட்டார்கள். இவர்கள் மிகக் குள்ளமானவர்கள்.
அன்றைய தலைவர்கள் தன் சிந்தனையாலே, திறத்தாலே, நேர்மையாலே, ஒழுக்கத்தாலே. இவர்கள் அடைந்திருக்கும் பதவி அதிகாரத்தாலே உச்சம் பெற்றது.
ஆனால் இவர்களோ சாதாரண மனிதர்களைவிட உயரம் குறைவானவர்கள் தங்கள் நடத்தையாலே.
இவர்களால் இந்த பதவிகள் உயரவில்லை என்றாலும் தாழாமல் இருக்கலாம். ஆனால், முடியாது. காரணம், இவர்கள் தாழ்நிலைச் சிந்தனையும் நடத்தையும் செயல்பாடுகளும் கொண்டவர்கள்.
ஆகையால் அவர்கள் வகிக்கின்ற பதவியும் சிறுமைப்பட்டு விடுகிறது. காமராஜ் என்ற மனிதர் 28 ரூபாய் வைத்துவிட்டுச் சென்றார். அதுதான் அவரிடம் இருந்த சொத்து. ஆகையால்தான் அவரைப் பற்றிய புத்தகங்கள் எழுதுகின்றார்கள்.
இன்று நம் தலைவர்கள் அரசியலில் பிரவேசிக்கும்பொழுது உணவுக்கும், பயணத்துக்கும் யாராவது உதவ வேண்டும் என்ற நிலையிலிருந்து, பதவியைப் பிடித்த பிறகு நம் நாட்டில் கல்விக் குழுமங்கள், தொழில் குழுமங்கள், வெளிநாடுகளில் சொத்துக்கள் முதலீடுகள், சொகுசு வாழ்க்கை என போகத்தில் மூழ்கிப்போய் இருக்கின்றார்கள்.
எனவே பதவி என்பது இன்று காசு சம்பாதிக்க, அதைப் பாதுகாக்க என்று ஆனபிறகு சுயமரியாதை என்பது தேவையற்றதாக வாழ்வியல் தர்மங்கள் தேவையற்றதாக மாறிவிட்டன” என்று கூறினார்.
அந்த நேரத்தில் யாரோ அவரை அழைத்தனர். பிரியாணி தயார் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
இதில் அந்த முதியவர் கூறவந்தது ஒரே ஒரு செய்திதான். இன்றுள்ள தலைவர்களுக்கு தலைமைத்துவத்துக்கான தகுதியோ, ஆற்றலோ, திறனோ, ஆளுமையோ தியாகமோ எதுவும் கிடையாது. இவர்கள் தங்கள் வைத்திருக்கும் பதவியினால்தான் அறியப்படுகிறார்கள்.
இவர்களுக்கு இந்தப் பதவிகள் அதாவது அதிகாரம் தரும் பதவிகள் இல்லை என்றால் இவர்கள் அனைவரும் வெற்று மனிதர்கள்.
இன்றைய தலைவர்களுக்கு மக்கள்மேல் நம்பிக்கை, கரிசனம், மரியாதை எதுவும் கிடையாது. அதன் விளைவுதான் மக்களை பிரியாணிக்கும் குவாட்டருக்கும், பணத்துக்கும் விலைபேசி அவர்களின் தன்மானத்தை இழக்க வைக்கின்றார்கள்.
இந்த அரசியல்வாதிகளுக்கு மக்களின் மனோபாவம் என்பது வறுமையில் மேன்மை, உயர்வு என்ற விழுமியங்களை இழக்கத் தயாராக இருப்பது சாதகமாக இருக்கின்றது. இழந்தது இருவருமேதான்.
வீழ்ந்ததும் இருவருமேதான். இதிலிருந்து மீள நாம் அதிகாரத்தை நாடாமல் நம்மை நாம் உயர்த்த நமக்கு நாமே தலைவராவோம்.
நம்மை நாம் வழி நடத்த தயாராகினால் நாம் சமூகத்திற்கு வழிகாட்ட முடியும்.
எனவே இன்று நமக்குத் தேவை அதிகாரம் அல்ல, அறம் சார்ந்த சமூக வாழ்வு. அதற்கான புரிதல், தெளிவு, ஆற்றல் பெருக்கம். அதுதான் இன்றைய தேவை.