‘ஜெய்பீம் தந்த டைரக்டரோட சூப்பர் ஸ்டார் படம் பண்றாரா’ என்ற வார்த்தைகளோடு பலரையும் புருவம் உயர்த்த வைத்தது ‘வேட்டையன்’ படத்துக்கான த.செ.ஞானவேல், ரஜினிகாந்த் கூட்டணி. ஒரு வித்தியாசமான படமாக இது இருக்குமா என்ற எண்ணத்தை விதைத்தது.
அழுத்தமான கருத்தை முன்வைக்கிற ஒரு கதையில் ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ பிம்பத்திற்கு இடம் இருக்குமா என்ற கேள்வியையும் கூடவே எழுப்பியது.
தற்போது ‘வேட்டையன்’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. மேற்சொன்ன இரண்டு கேள்விகளும் எந்த வகையில் இப்படத்தில் பிரதிபலித்திருக்கின்றன.
‘வேட்டையன்’ தரும் காட்சியனுபவம் எத்தகையது?
நாயகனின் சுயபரிசோதனை!
சட்டத்தின் முன்னால் கொடூரக் குற்றவாளிகளை நிறுத்தி தண்டனையை வாங்கித் தரும் பொறுமையில்லாமல், ‘என்கவுண்டர்’ மூலமாக உடனடி நீதி (?!) வழங்கத் துடிப்பவர் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அதியன் (ரஜினிகாந்த்).
காவல் துறை வட்டாரத்தில் அவருக்கு ‘வேட்டையன்’ என்ற பெயர் இருக்கிறது.
அந்தளவுக்கு ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆக அறியப்படுபவர்.
இன்னொருபுறம், ஓய்வுபெற்ற நீதிபதியாக இருந்துவரும் சத்யதேவ் (அமிதாப் பச்சன்) ‘என்கவுண்டர் என்பது அவசரப்பட்ட நீதியாகவே இருக்கும்’ என்பது போன்ற கருத்துகளைப் பொதுவெளியில் தெரிவித்து வருகிறார்.
அதற்கு எதிராக, மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்தவர்களோடு இணைந்து போராடி வருகிறார்.
இவர்கள் இரண்டு பேரும் நேருக்கு நேர் நிற்க வேண்டிய சூழலொன்று ஏற்படுகிறது.
சரண்யா (துஷாரா விஜயன்) என்ற இளம்பெண் பேச்சிப்பாறை அரசுப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்.
பள்ளிக் கட்டடத்தைப் போதைப் பொருட்கள் வைக்கும் குடோன் ஆக ஒரு ரவுடி பயன்படுத்த, அது பற்றி அதியனுக்குத் தகவல் தெரிவிக்கிறார்.
போதைப் பொருட்களைக் கைப்பற்றி அந்த ரவுடியின் செயல்பாட்டை முடக்குகிறார் அதியன். அதற்கு, பள்ளிக்குழந்தைகளை அழைத்து வந்து அவருக்கு நன்றி தெரிவிக்கிறார் சரண்யா.
அதையடுத்து, அவருக்கும் அவரது மனைவி தாராவுக்கும் (மஞ்சு வாரியார்) தெரிந்த முகமாகிறார்.
சரண்யா விரும்பியது போன்று, அவருக்குச் சென்னைக்கு மாற்றலாகிறது. சில மாதங்கள் அங்கு பணியாற்றுகிறார்.
ஒருநாள் அதியனுக்கு அவர் போன் செய்கிறார். அந்த நேரத்தில், அவரால் அதனை ‘அட்டெண்ட்’ செய்ய முடியவில்லை. பிறகு, சரண்யாவை அவர் மொபைலில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்.
அதற்கடுத்த நாள், பள்ளியிலுள்ள தண்ணீர் தொட்டியில் சரண்யாவின் சடலம் கிடைத்ததாகச் செய்திகள் வெளியாகின்றன.
அவர் கொடூரமாகப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரிய வருகிறது.
இந்த வழக்கினை ஒரு சிறப்பு படை விசாரணை செய்கிறது. ஆனால், அவர்களுக்கு ‘துப்பு’ ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், காவல் துறையினருக்கு குணா (அசல் கோளார்) என்பவரைப் பற்றிச் சில தகவல்கள் கிடைக்கின்றன.
சரண்யாவிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, சில காணொலிக் காட்சிகளும் தொலைக்காட்சிகளில் வெளியாகின்றன.
அதனைத் தொடர்ந்து, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார். போலீசார் அவரைப் பிடித்தபோதும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகையில் அவர்கள் பிடியில் இருந்து தப்பிக்கிறார்.
சரண்யா கொலையால் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அதியனிடம், குணாவை ‘என்கவுண்டர்’ செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
அதற்காக, அவரும் சென்னைக்கு வருகிறார். சிறப்புப் படைக்குத் தலைமைப் பொறுப்பேற்று, வந்த வேலையைக் கனகச்சிதமாக நிறைவு செய்கிறார்.
ஆனால், அப்போது அதியனுக்கு எதிராகக் களமிறங்குகிறார் சத்யதேவ். ‘நீங்கள் ஒரு அப்பாவியை என்கவுண்டர் செய்திருக்கிறீர்கள்’ என்கிறார்.
குணா அப்பாவி என்றால், சரண்யா கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார்?
அதனை அதியன் தலைமையிலான சிறப்பு படை கண்டறிந்ததா?
இறுதியில் என்னவானது என்று சொல்கிறது ‘வேட்டையன்’ படத்தின் மீதி.
’என்கவுண்டர் சரிதான்’ என்று நாயகன் தான் கொண்டிருக்கும் கருத்தில் இருந்து முரண்படும் சூழல் உருவாகிறது. அதுவே கதையின் திருப்பமாகவும் இருக்கிறது.
உண்மையைச் சொன்னால், படம் தொடங்கிச் சரியாக அரை மணி நேரத்தில் திரைக்கதையில் அந்த திருப்பம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், அதற்கு முன்பான ‘பில்டப்’ காட்சிகள் கதையின் அடிப்படையை நீர்த்துப்போக வைக்கின்றன.
அதேநேரத்தில், ரஜினி போன்ற ஒரு நட்சத்திர நாயகனைத் திரையில் சுயபரிசோதனை செய்துகொள்ளும் பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது சாதாரண விஷயமல்ல என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
கலவையான அனுபவம்!
‘பேட்ட’ படத்தில் இல்லாத அளவுக்கு ‘வேட்டையன்’னில் இளமையாகத் தெரிகிறார் ரஜினிகாந்த்.
மிகச்சில ஷாட்கள் தவிர்த்து, அதற்குப் பொருத்தமான உடல்மொழியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவே அவரது நடிப்புத்திறனுக்குச் சான்று.
தொண்ணூறுகளில் தான் நடித்த படங்களில் தந்த நடிப்பை, இன்று ரஜினியால் வெளிப்படுத்த முடியாது என்பதே உண்மை. இதிலும் அதுவே நிகழ்ந்துள்ளது.
அதையும் மீறி, அவரது ‘திரை இருப்பு’ நம்மை ஈர்க்கிறது. ‘குறி வச்சா இரை விழணும்’ என்று ‘பஞ்ச்’ வசனம் பேசும் இடங்களை விடச் சாதாரணமாக அவர் உதிர்க்கும் வார்த்தைகள் கைத்தட்டலை வரவழைக்கின்றன.
மஞ்சு வாரியாருக்கு இப்படத்தில் பெரிதாக வேலையில்லை. ‘கணவர் என்கவுண்டர் நடவடிக்கையில் இறங்கினார்’ என்ற தகவல் கேட்டு மனதுக்குள் வருத்தப்படுகிற இடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பகத் பாசில் இதில் ரசிகர்கள் கொண்டாடுகிற ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது பாத்திரத்தின் பெயர் ‘பேட்ரிக்’.
‘ரொம்ப வித்தியாசமானது’ என்று ‘வேட்டையன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன அளவுக்கு இல்லை என்றபோதும், ரசிகர்களைப் படத்துடன் ஒன்ற வைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது அப்பாத்திரம்.
சரண்யாவாக வரும் துஷாரா விஜயன், இதில் நம்மை எளிதாக ஈர்க்கிறார்.
வில்லனாக வரும் ராணா டாகுபதி கம்பீரமாகத் திரையில் தெரிகிறார். கொஞ்சமாகப் பயமுறுத்துகிறார்.
அபிராமி, ரோகிணிக்குப் பெரியளவில் ‘ஸ்கோர்’ செய்ய வாய்ப்பில்லை என்றபோதும், தாங்கள் ஏற்ற பாத்திரங்களுக்குத் திரையில் நியாயம் செய்திருக்கின்றன.
இவர்கள் தவிர்த்து ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங், அசல் கோளார், ராவ் ரமேஷ், கிஷோர், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், ரக்ஷன், சாபுமோன் அப்துசமத், சுப்ரீத் ரெட்டி, ஷாஜி, ஆர்.அரவிந்த்ராஜ், ’விக்ரம்’ வசந்தி என்று பலர் இதிலுண்டு.
நீதிபதியாக ஒரு காட்சியில் மலையாள நடிகர் அலென்சியர் லே லோபஸ் வந்து போயிருக்கிறார்.
மலையாள, தெலுங்கு ரசிகர்களைக் கவரும் வகையில் சில நடிகர் நடிகைகளைத் திட்டமிட்டுப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.
பிரமாண்டமான கமர்ஷியல் படம் என்பதைத் தாண்டி, திரையில் வரும் சில நிகழ்வுகளோடு ரசிகர்களை ஒன்றிணைக்கிற முயற்சியைச் செய்திருக்கிறது எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு.
தொடக்கத்தில் வரும் 20 நிமிடக் காட்சிகள் மற்றும் இறுதியாக வரும் பத்து நிமிடக் காட்சிகளுக்குப் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் தாராளமாகக் ‘கத்திரி’ போட்டிருக்கலாம்.
ஆனால், அதுதான் சாதாரண ரசிகர்களைக் கவரும் என்று விட்டிருக்கிறது படக்குழு. உண்மையில் அதுவொரு இமாலயத் தவறு.
தயாரிப்பு வடிவமைப்பாளர் கதிர், இப்படத்தின் காட்சிகளுக்கேற்ற சூழலைத் திரையில் உருவாக்க மெனக்கெட்டிருக்கிறார். அவரது குழுவினரின் கடின உழைப்புக்கு ஏற்றவாறு, காட்சிகள் பல்வேறு களங்களுக்குத் தாவுகின்றன.
இன்னும் ஒப்பனை, ஒலிப்பதிவு, விஎஃப்எக்ஸ், டிஐ என்று இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகச் சில தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
திரைக்கதையின் நடுப்பகுதியில் கொலைக்குக் காரணமானவர்கள் குறித்த விசாரணை காட்சிகளின்போது, அனிருத்தின் இசை அருமை. அக்காட்சிகளை நகர்த்திச் செல்லும்விதமாக அவரது பங்களிப்பு அமைந்துள்ளது.
‘மனசிலாயோ’ தவிர்த்து மற்ற பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. அதேநேரத்தில், பெரும்பாலான ரசிகர்கள் அவரது பாடல்களுக்கு ‘கூஸ்பம்ஸ்’ அடைகின்றனர் என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
பா.கிருத்திகாவோடு இணைந்து இப்படத்தின் திரைக்கதையை ஆக்கியிருக்கிறார் த.செ.ஞானவேல். ‘தான் எடுத்துக்கொண்ட கதையில், ரஜினிக்கான முக்கியத்துவம் வேண்டும்’ என்ற நோக்கோடு அவர் வலியத் திணித்த காட்சிகள் ‘துருத்தலாக’ தெரிகின்றன.
அதேநேரத்தில், சமகால நிகழ்வுகளைத் தான் சொல்ல வந்த கருத்தோடு பொருத்திக் கதை சொல்லும் பாங்கில் நம்மைக் கவர்கிறது அவரது உத்தி.
இவ்விரண்டும் ஒன்று சேர்ந்து, ‘வேட்டையன்’ படமான நமக்குக் கலவையான அனுபவங்களைத் தரக் காரணமாகின்றன.
இதெல்லாம் வேண்டுமா?
இனி வரும் விஷயங்கள் ‘ஸ்பாய்லர்’ ரகம் என்பதால், ’அது வேண்டாமே’ என்பவர்கள் தவிர்த்துவிடலாம்.
‘தான் செய்த என்கவுண்டர் தவறானது’ என்று தெரிந்தபிறகு நாயகன் வருத்தப்படுவதாக, இதிலொரு காட்சி உண்டு.
ரஜினியை அப்படியொரு காட்சியில் நடிக்கச் சம்மதிக்க வைத்த இயக்குனர், ஏன் இதனை ‘சூப்பர் ஸ்டாரின் வழக்கமான ஆக்ஷன் படமாக’க் காட்ட முனைந்தார்? அது படக்குழுவினருக்கே வெளிச்சம்.
‘மாஸ்டர்’ படத்தில் மது போதைக்கு அடிமையாகிச் சுயத்தை இழந்து கொண்டிருக்கும் விஜய்யின் நாயக பாத்திரம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு ஆசிரியராகச் செல்வதுதான் அக்கதையின் முதல் திருப்பம்.
அக்காட்சியில் இருந்து திரைக்கதையைத் தொடங்காமல், ‘இவர் எப்பேர்ப்பட்ட ஆசிரியர் தெரியுமா’ என்று லோகேஷ் கனகராஜின் திரைக்கதை அமைந்திருந்தது.
த.செ.ஞானவேலும் இதில் அதே தவறைச் செய்திருக்கிறார். ‘வேட்டையாடு விளையாடு’ கமல் பாணியில் ரஜினிக்கு ஒரு அறிமுகத்தைத் தந்திருக்கிறார்.
பிறகு, ‘மனசிலாயோ’ பாடல் ஏன் வருகிறது என்றே தெரியவில்லை.
குணா பாத்திரத்தைத் தீவிரமாகத் தேடக் காவல்துறையினர் முயற்சிக்கும்போது, அவருக்கு எதிரான சாட்சியங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதற்குத் திரைக்கதையில் விளக்கங்கள் இல்லை.
அப்பாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ‘கறுப்பாடு இவர் தான்’ என்று இன்னொரு பாத்திரத்தைச் சந்தேகத்தோடு நோக்கினால், அந்த கணிப்பு சரி என்ற வகையில் பின்பாதி காட்சிகள் நகர்வது இன்னொரு பலவீனம்.
‘அதெல்லாம் பரவாயில்லை’ என்பது போல, கிளைமேக்ஸில் வரும் 20 நிமிடக் காட்சிகள் இருக்கின்றன.
‘ஹீரோ ஜெயித்துவிட்டார் என்று நினைக்கும்போது விடாமல் வில்லன் உயிர்த்தெழுந்து’ வரும் ஹாலிவுட் படங்கள் போன்று இதிலும் சில காட்சிகள் உண்டு.
பொழுதுபோக்கு என்கிற பெயரில் நாயகர்களை ‘சைக்கோதனம்’ கொண்டவர்களாக இப்படம் சித்தரிக்கவில்லை. ரஜினி இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் கோரம் வெளிப்படவில்லை.
ஆனால், துஷாரா பாத்திரம் கொலையுறுவதாக சொல்லப்படும் இடம், அதற்கெல்லாம் சேர்த்துவைத்து மோசமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் படத்தைப் பார்க்கக் குழந்தைகளும் வருவார்கள் என்பதால் இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி, ‘என்கவுண்டருக்கு எதிரான படம்’ என்ற வகையில் கவனம் பெறுகிறது ‘வேட்டையன்’. அதில் ரஜினி போன்ற ஒரு நட்சத்திரத்தை நடிக்க வைத்திருப்பது சிறப்பு.
இங்க வசிக்கிறவங்க ரவுடிங்க.. இந்த மதத்தைச் சேர்ந்தவங்க தீவிரவாதிங்க.. இவங்க ஜோக்கருங்க.. சிவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது போன்ற முன்முடிவுகள் வேண்டாம் என்று சொன்ன வகையிலும் கவர்கிறது இப்படம்.
‘வேட்டையன்’ படத்தின் பின்பாதி திரைக்கதையில் சொல்லப்படுகிற சில விஷயங்கள், இன்று பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதனால், அது போன்ற விஷயங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் இப்படத்தை வரவேற்கலாம்.
முக்கியமாக, ஊடகச் செய்திகளைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு முடிவுக்கு வருவது தப்பு என்று சொல்கிறது ‘வேட்டையன்’.
அதிலும், அவசரப்பட்டு ‘இவங்களையெல்லாம் என்கவுண்டர்ல சுட்டுக் கொல்லணும்’ என்ற வார்த்தைகளை உதிர்ப்பதைத் தவறு என்கிறது.
‘என்கவுண்டரில் எந்த பணக்காரனாவது உயிரிழந்ததா தகவல் உண்டா’ எனக் கேள்வி எழுப்புகிறது.
போலவே, அமிதாப் பச்சன் தமிழில் நடித்த படம் என்ற சிறப்பையும் பெறுகிறது. அதற்காகவே, பிரகாஷ் ராஜ் வழங்கிய இரவல் குரல் ‘ஏஐ’ நுட்பத்தில் அமிதாப்பின் குரலாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஒருவேளை அமிதாப்புக்குத் தமிழில் ‘டப்’ செய்யும் நிழல்கள் ரவியின் குரல் ஒலித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ, என்னவோ?!
தன் கேரியரில் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகள், பக்காவான மசாலா திரைக்கதைகள் என்ற மெல்லிய வேறுபாட்டுக்கு நடுவே, இரண்டும் கலந்தாற் போன்று சில படங்களில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அந்த வரிசையில் மேலுமொன்றாக இணைந்திருக்கிறது இப்படம்.
’ரஜினி படம்’ என்ற வார்த்தையை மனதில் தாங்கிக் கொண்டு தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக வருகிறவர்கள் எண்ணிக்கை இன்றும் கணிசம்.
கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, திரையை நோக்கி பூக்களையும் காகிதங்களையும் பறக்கவிடுகிற ரசிகர்களின் ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்தபிறகே அவர்கள் தியேட்டர்களுக்குள் நுழைவார்கள்.
அந்த கூட்டத்தைத் திருப்திப்படுத்தினால் மட்டுமே எந்தவொரு படமும் ‘ப்ளாக்பஸ்டர்’ அந்தஸ்தை அடையும்.
அதனை குறியாகக் கொண்டு இரை தேட முயற்சித்திருக்கிறது ‘வேட்டையன்’. குடும்பங்கள் இதனைக் கொண்டாடுமா என்று நமக்குத் தெரியுமா?
ஆனால், அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இப்படம் நிச்சயமாக அடிக்கோடிட்டுக் காட்டும்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்