பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (86) நேற்று (09.10.2024) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கூகிள் சிஈஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், முகேஷ் அம்பானி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மகாராஷ்டிர அரசால் அரசு இறுதிச் சடங்கு வழங்கப்பட்டது.
ரத்தன் டாடா பார்சி இனத்தைச் சார்ந்தவர். பார்சிகள் தங்களது வழக்கப்படி இறந்த பின் உடலை புதைக்கவோ எரிக்கவோ மாட்டார்கள். மனித உடலை இயற்கையின் பரிசாகக் கருதும் அவர்கள் உடலை இயற்கைக்கே திருப்பித் தர வேண்டும் என்னும் நம்பிக்கை உடையவர்கள். உடலை எரிப்பதோ, புதைப்பதோ நிலம் நீர் காற்று ஆகியவற்றை மாசு படுத்தும் என கருதுபவர்கள்.
நஸ்ஸேலர்கள் என்பவர்கள்தான் பார்சி மதத்தில் இறந்தவர்களின் உடலை கையாளுவார்கள். இதன்படி உடலை சுத்தம் செய்த அவர்கள், உடலை ‘சுத்ரே’ என்னும் பருத்தி உடுப்பை போர்த்தி, ‘குஸ்தி’ என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளை கயிறு மூலம் காட்டுவார்கள்.
அதன் பின் பார்சி பாதிரியார்களால் பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாதம் செய்யப்படும். இந்த சடங்குகள் இறந்தவரின் ஆன்மாவை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு சுமூகமாக மாற்ற உதவுவதாக நம்புகின்றனர். இதில் ரத்தன் டாடாவின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
பாரம்பரியமாக, அமைதி கோபுரம் எனப்படும் THE TOWER OF SILENCE க்கு உடல் கொண்டு செல்லப்படும், அவர்கள் முறைப்படி இறந்தவரின் உடல் ‘அங்குள்ள குவி மாடத்தில் வைக்கப்பட்டு உடல் உறுப்புகள் பறவைகள், கழுகுகளுக்கு இரையாக கொடுக்கப்படும். எஞ்சியுள்ள எலும்புகள் இறுதியில் கோபுரத்தின் மையக் கிணற்றில் விழும், அங்கு அவை மேலும் சிதைந்துவிடும். இதனால் இயற்கை பாதிக்காது.
தற்போதைய சுற்றுச்சூழல் மற்றும் நடைமுறை சவால்கள் மற்றும் அருகி வரும் கழுகுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 2008-க்கு பிறகு இந்த பழக்கம் பார்சிகளிடையே வெகுவாக குறைந்துவிட்டது. எனவே ரத்தன் டாடா உடலுக்கு வழக்கமான பார்சி சடங்குகள் செய்யப்பட்டாலும் அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பார்சிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் பெர்சியாவில் (ஈரான்) இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள். இந்தியாவின் முக்கிய தொழில் குடும்பங்களான டாடா குடும்பம், கோட்ரெஜ் குடும்பம், வாடியா குடும்பம், பூனவாலா குடும்பம் ஆகியோர் பார்சி ஆவர்.
மேலும் சுதந்திர போராட்ட வீரர் தாதாபாய் நௌரோஜி, இந்திய அணுசக்தி தந்தை ஹோமி ஜஹாங்கீர் பாபா, இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி, நடிகை அமைரா தஸ்தூர் பிரபல வழக்கறிஞர் பாலி நரிமன் ஆகியோர் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள்.
#ரத்தன்_டாடா #ratan_last_ritual_parsi_style #பெர்சியா #பார்சி #ratan #ratan_last_ritual