நூல் அறிமுகம்: சூழலும் சாதியும்!
ஹாலிவுட் திரைப்படம் மாதிரி நக்கீரன் ஐயா. அடுத்த வரியில் என்ன இருக்கும் என்ன சொல்ல வருகிறார் என்ற தேடலைத் தருகிற சூழலியல் புத்தகம் அவர்.
அமாவாசைகளுக்கு மட்டுமே அதிகம் தேடப்படுகிற இந்தக் காக்கைகள் பாவம் மற்ற நாட்களில் எல்லாம் தீண்டாமையால் ஒதுக்கப்பட்டிருப்பதைப் போல்தான் இருக்கிறது இந்தப் புத்தகத்தை வாசித்தப் பிறகு.
ஆரியர்கள் யார்? எப்படி வந்தார்கள் இந்த மண்ணிற்கு? தன்னை எப்படி நிறுத்திக் கொண்டார்கள். மன்னிக்கவும் உயர்த்திக் கொண்டார்கள்?
சாதியின் வேர் வாடிவிடாமலும் பட்டுப்போய் செத்து விடாமலும் பார்த்துப் பார்த்து தண்ணீர் ஊற்றி செழித்து வளர வைக்கிறவர்கள் யார்?
எவ்வளவு முட்டாளாய் நாமும் கூட இவற்றிற்குள் எப்படி மெய்மறந்து நிற்கிறோம்?
இவர்கள் எவ்வளவு அழகாய் ஐம்பூதத்திற்கும் சாதிய வர்ணம் பூசியிருக்கிறார்கள். காக்கா, குருவிக் கதையை கருத்துப் புரியாமல் தான் நாமும் பலருக்கும் சிரிக்கச் சிரிக்கக் சொல்லித் தந்தோமா என்றெல்லாம் யோசிக்க வைக்கிறது நூல்.
அறிவுக் கண்ணைத் திறந்துவிடுகிறது இந்தப் புத்தகம் அழகாய். இன்னும் நாம் அடிமைகளாகத்தான் இருக்கிறோம் என்பதையும் சொல்கிறது புத்தகம்.
உயர்வு தாழ்வு சமநிலைக்கு வரும்போது காக்கையும் காதலிக்கப்படும். கறுப்பும் வெள்ளையும் அழகான வர்ணம் மட்டும்தான் என்பதுவும் புரியும். இந்தப் புத்தகத்தை கட்டாயம் வாசிக்க வேண்டும்.
*****
புத்தகம் : சூழலும் சாதியும்!
ஆசிரியர் : நக்கீரன்
காடோடி பதிப்பகம்
பக்கங்கள் : 88
விலை: ரூ.104/-