ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் செல்லூர் எனும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அன்று பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசவுந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன்.
இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கத் துவங்கினார் அவர்.
1942 ஆம் ஆண்டில் இம்மானுவேல் சேகரன் தனது 18வது வயதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார்.
சிறை வாழ்க்கைக்குப் பிறகு பள்ளியில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நாட்டின் மீது கொண்ட பற்றினால் இம்மானுவேல் சேகரன் 1945-ல் இராணுவத்தில் இணைந்தார். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகளும் பணியாற்றினார்.
ராமநாதபுரம் பகுதி வாழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனது ராணுவப் பணியை 1952இல் துறந்தார். நேரடியான சமூகப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
ராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்தபோது அதற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தினார் இம்மானுவேல் சேகரன்.
கிறித்துவப் பள்ளிகளுக்கு எதிராகப் போர்க் கொடி பிடித்தபோது ‘ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகளே, பள்ளிகளை நோக்கிப் புறப்படுங்கள்’ என பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் வட்டாரங்களில் பிரச்சாரம் செய்தார்.
1953 இல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கி, தனது சமூகத்தினரை மட்டுமல்லாமல், அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கியதாக அவரின் சமூக விடுதலைப் போராட்டங்கள் உருவெடுத்தன.
அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி இயக்க மாநாட்டினை நடத்தினர். இதில் சாதிகளுக்குள் இணக்கம், விதவை மறுமணம் ஆகிய 7 தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றினார்.
மரத்தடிகளிலும், தோப்புகளிலும், வயல்வெளிகளிலும் மக்களைச் சந்தித்தார். தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு சென்று, எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டப் போராட்டம் நடத்தினார்.
தீண்டாமைக்கு எதிராக பெட்ரோமாக்ஸ் லைட் ஏந்தி ஊர்கள் தோறும் தனது ஆதரவாளர்களைத் திரட்டிச் சென்று கூத்துகள், நாடகங்கள் நடத்தி பரப்புரை செய்தார்.
1954இல் இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்தினார். 1956இல் அண்ணல் அம்பேத்கரின் மறைவையொட்டி மாபெரும் இரங்கல் கூட்டத்தை நடத்தினார். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுக்க தொடங்கினார்.
1957இல் அன்று காடமங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் இறக்கிறார். இடுகாட்டுக்குச் கொண்டு செல்ல வேண்டுமெனில் சில தடைகளால் பிரதான பாதைக்கு எதிர்ப்பு ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சனையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வரைக்கும் இம்மானுவேல் சேகரன் கொண்டு சென்றார்.
அதனால் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டு மூதாட்டி உடல் சுமூகமாய் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இதில் இருந்து இமானுவேல் சேகரனுக்கு எதிர்ப்பு உள்ளூரில் ஏற்படுகிறது.
அதன் விளைவாக லாவி என்ற கிராமத்திலுள்ள குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கலவரம் நடக்கிறது. இந்த மோதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பணிக்கர் இந்த கலவரத்தைத் தடுக்க அனைத்து சமூக தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறார்.
அமைதிக் கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பில் இம்மானுவேல் சேகரன் கலந்து கொள்கிறார்.
மறுநாள் காலையில் பரக்குடி பள்ளியில் நடந்த பாரதியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, இரவு 9 மணி அளவில் வீட்டிற்குச் செல்கிறார்.
அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சராமரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்புகிறது. 33 வயது இளைஞனின் எழுச்சிப் பயணம் சாதியக் கும்பலால் தடுக்கப்பட்டது.
12-9-1957 அன்று அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.
அப்போது மயானத்திற்குச் செல்லும் பாதைத் துண்டிக்கப்பட்டதால் 13-9-57ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்தது. இதில் இருதரப்பும் மோதியதில் 85 பேர் பலியாகினர்.
தியாகி இம்மானுவேல் சேகரனை நினைவு கூரும் விதமாக, அவரது நினைவு தினத்தை பட்டியலின சமுதாயத்தினர் குரு பூஜையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
நன்றி : புதிய தலைமுறை இதழ்