அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி!

தேர்தல் முடிவை ஏற்க மறுக்கும் காங்கிரஸ்

இந்தியத் தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள மாநிலம் அரியானா. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. பின்னர் ஜனதா மற்றும் லோக்தளம் கட்சிகள் வென்றன.

கடந்த 2014-ம்  ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்று, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக அடுத்து, 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அந்தக் கட்சியே வாகை சூடியது.

இந்த நிலையில், மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அங்கு மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியது.

எனவே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே இருந்தன. இதனால் அரியானாவில், பாஜகவிடம் இருந்து, காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. முதலில் காங்கிரஸ் 65 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. பாஜக 17 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது.

ஆனால், காலை 9.30 மணிக்கு பிறகு காட்சிகள் மாறின. இரு கட்சிகளும் சமபலத்துடன் இருந்ததால், பரபரப்பு உண்டானது.

காலை 11 மணி அளவில் பாஜக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்தது. முடிவுகள், முழுதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாஜக, மீண்டும் வென்றுள்ளது.

தனித்து ஆட்சி அமைப்பதற்கு, 46 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி அரியானாவில் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களில் வென்றுள்ளது. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் நயாப் சிங் சைனி, லாட்வா தொகுதியில் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அவரது அரசில் இடம்பெற்றிருந்த 8 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். சட்டப்பேரவை சபாநாயகரும் தோற்றுப்போனார்.

ஓட்டு வித்தியாசம்  1 % மட்டும்

ஆட்சி அமைக்க தேவையான இடங்களைக் காட்டிலும் பாஜகவுக்கு கூடுதலாக இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்தத்  தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே உள்ள வாக்குச் சதவீதம் 1% க்கும் குறைவு.  பாஜக 39. 94 % ஓட்டுகள் வாங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 39.09 %.

அரியானாவில் பாஜக வென்றதைத் தொடர்ந்து,  முதலமைச்சர் நயாப் சிங் சைனியை, பிரதமர் மோடி, செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சராக நயாப் சிங் சைனியே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, ‘அரியானா தேர்தல் முடிவை ஏற்க முடியாது’ என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘அரியானா தேர்தல் முடிவுகள், கள நிலவரத்துக்கு எதிராக உள்ளது’ என கூறினார்.

“ஓட்டு எண்ணிக்கை குறித்து பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன – முடிவுகள் மக்களின் மன நிலைக்கு எதிராக உள்ளதால், அரியானா  தேர்தல் முடிவை நாங்கள் ஏற்பது சாத்தியம் இல்லை” என ஜெய்ராம் ரமேஷ் மேலும் தெரிவித்தார்.

அரியானா மாநில காங்கிரஸ் தலைவர்களிடையே காணப்படும் உள்கட்சி மோதலால், அந்த கட்சி வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்ததாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

– மு.மாடக்கண்ணு.

Comments (0)
Add Comment