நினைவுக் குமிழிகள்: 1
*
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான முதல் திரைப்படமான ‘பராசக்தி’யைப் பார்த்திருக்கிறீர்களா?
அதில், சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் பின்னாளில் அதே சிவாஜிக்குப் பல படங்களில் அம்மாவாக நடித்தவரான பண்டரிபாய்.
‘பராசக்தி’ திரைப்படத்தில் செப்புச் சிலையைப் போன்ற சிக்கனமான முக வடிவமைப்புடன் பார்ப்பதற்கு அவ்வளவு ‘க்யூட்’டாக இருப்பார்.
மதுரை சடகோபன் ராஜேஸ்வரி என்பதுதான் சுருங்கி எம்.எஸ்.ராஜேஸ்வரி.
1932 ஆம் ஆண்டு பிறந்த ராஜேஸ்வரி, சிறு வயதிலிருந்தே பாடல்களைப் பாடுவதற்கு, நாடக நடிகையாக இருந்த அவருடைய தாயாரும் முக்கியக் காரணம்.
தமிழ் சினிமாவிற்கு எம்.எஸ்.ராஜேஸ்வரியை அறிமுகம் செய்தவர் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்துலு.
1980-களில் சென்னையின் மையப்பகுதியில் இருந்த ஓர் எளிய வீட்டில் சினிமா வார இதழுக்காக எம்.எஸ்.ராஜேஸ்வரியைச் சந்தித்தபோது, அவர் நடுத்தர வயதைத் தாண்டிய தோற்றத்துடன் இருந்தார். ஒரு மகன், ஒரு மகள் என்று எளிய குடும்பம்.
நிறையப் படங்களில் குரல் மூலம் அவர் தலைக்காட்டி இருந்தாலும் கூட, அவரை நேரில் சந்திக்கும்போது, வீட்டின் பொருளாதாரம் அவ்வளவு உயரத்தில் இல்லை.
ஆனால், அது குறித்து சிறிதும் கவலைப்படாத தொனியில் மிகவும் உற்சாகமாகத் தன்னுடைய திரை இசை வாழ்வை இடைஇடையிடையே பாடல்களைப் பாடி அருமையானதொரு நினைவாக்கும் அளவுக்கு இன்னும் இருக்கிறது அந்தச் சந்திப்பு.
பண்டரிபாய்க்கு குரல் கொடுத்ததைப் பற்றிக் கேட்டதும் அவருடைய முகம் முழுக்கப் பரவசம்.
அவர் குரல் கொடுத்த நடிகைகளின் பட்டியல் மிகவும் நீளமாக இருந்தது.
சுதந்திரம் வந்தடைந்த 1947-லேயே தமிழ்த் திரையில் பாட ஆரம்பித்துவிட்டார் ராஜேஸ்வரி.
அஞ்சலிதேவி கதாநாயகியாக நடித்த ‘டவுன் பஸ்’ படத்தில் இவர் குழந்தைத்தனமான கீச்சுக்குரலில் பாடிய “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” என்கிற பிரபலமான அந்த காலத்தியப் பாடலை, வயதின் தளர்வுகளை மீறி அவர் பாடிக் காண்பித்தபோது, ஒருவித குழந்தைத்தனம் எங்களைச் சுற்றி வந்ததைப் போல இருந்தது.
இப்போதும் காந்தி ஜெயந்தி சமயங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “காந்தி மகான்” என்கிற பாடலை இவர் பாடி, அதற்கு அழகாக அபிநயம் பிடித்து ஆடி இருப்பவர், நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற நடிகையான கமலா.
‘வாழ்க்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனுடன் சேர்ந்து இவர் பாடிய “உன் கண் உன்னை ஏமாற்றினால்…” என்று துவங்கும் பாடல் மிகவும் பிரபலம்.
1958 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தில் இடம்பெற்ற “மண்ணுக்கு மரம் பாரமா, மரத்திற்கு இலை பாரமா…?” என்று தாய்மையின் கனிவோடு ராஜேஸ்வரி பாடிய பாடலும் அப்போது பலரை முணுமுணுக்க. வைத்தது.
1960 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டு திரைப்படங்கள் இவருடைய பாடல்களைப் பிரபலப்படுத்தி இவரை உச்சத்திற்குக் கொண்டு சென்றன.
அதில் ஒரு பாடல் ‘படிக்காத மேதை’ படத்தில் சௌகார் ஜானகிக்காக இவர் பாடிய “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு” என்ற பாடல்.
அடுத்து இவரையும், படத்தில் இவருக்காக வாயசைத்த கமல்ஹாசனையும் உச்சிக்குக் கொண்டு சென்ற பாடல், ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் இடம்பெற்ற “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” பாடல்.
படத்தில் அந்தப் பாடல் காட்சியில் சட்டை அணியாத உடம்புடன், கும்பிட்டபடி அனாதை இல்லத்தில் பாடும் குழந்தையாக கமல் நடித்திருப்பார்.
அந்தப் படத்தின் வெற்றி விழாவுக்காக, படம் வெளியான திரையரங்குகளுக்கு, கமலை படக் குழுவினர் அழைத்துச் சென்றபோது பலரும் விரும்பிக் கேட்ட பாடல் “அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே…”.
அந்தப் பாடலைப் பாடியது குறித்து, நேரில் அந்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டபோது அவருடைய மெலிதான புன்னகை.
“வழக்கமா நான் அப்போ எல்லாருக்கும் பாடறபடி தான் அந்தப் படத்திலும் பாடியிருந்தேன். ஆனால், படத்தில் குட்டிக் குழந்தையாக வரும் கமலுக்கு அந்தக் குரல் மிகவும் பொருந்தி இருந்ததாகப் பலர் சொன்னபோது, மனதுக்குச் சந்தோஷமாக இருந்தது.”
இந்தப் பாடலை மனதில் வைத்தோ என்னவோ மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடித்து, 1987-ல் வெளிவந்த ‘நாயகன்’ திரைப்படத்தில் ஜமுனா ராணியுடன் இணைந்து இளையராஜா இசையில் இவர் பாடிய பாடல் “நீ சிரித்தால் தீபாவளி”.
தமிழ்த் திரை இசையில் டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, ஜேசுதாஸ் என்று பலருடன் இணைந்து, பல பிரபலமான பாடல்களைப் பாடி இருக்கிற எம்.எஸ்.ராஜேஸ்வரி, குழந்தைத்தனமான குரலுடன், தத்துவச் சாயல் கொண்ட பல பாடல்களையும் பாடியிருக்கிறார்.
பின்னாளில் நாட்டியத்திற்கென்றே சில பாடல்கள் பாடப்படுவது மாதிரி, ‘பராசக்தி’ படத்தில் தனக்கு அடையாளமான குரலில் இவர் பாடிய பாடல் தற்போது வரை பலரால் பாடப்படுகிறது.
அந்த பாடல் இதுதான்,
“ஓ ரசிக்கும் சீமானே வா… ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம்…”.
இந்தப் பாடலை மென்மையான வெளிச்சம் கசிந்த வீட்டின் உட்பகுதியில் அமர்ந்தபடி என்னிடம் பாடிக் காட்டியபோது, அடிக்கடிச் சிரித்துக்கொண்டார்.
சிரித்தாலும் பாடுவதில் எந்த இடைவெளியும் விழவில்லை.
நிறைவாக அவர் அதே சிரித்த முகத்துடன் “மியாவ் மியாவ் பூனைக் குட்டி, வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி” என்ற பாடலை கிசுகிசுத்த குரலுடனும், குழந்தைமைத்தனத்துடனும், பிரத்தியேகமாகப் பாடிக்காட்டிய அந்த பொழுது, அழகான இசைப் பொழுதாக இன்னும் மனதுக்குள் நிழலாடுகிறது, காதுக்குள் மெல்லிய இளம் தூறல் விழுந்தது போல.
அவர் மலர்ந்த முகத்துடன் பாடி முடித்ததும், அந்தக் கணத்தின் நிறைவுடன் “பாடலைப் பாடிய நீங்க குழந்தையைப் போலத் தெரியுறீங்க, அதைக் கேட்ட என்னைப் பார்த்தாத் தான் பூனைக்குட்டி மாதிரி இருக்கு” என்று குரலைக் கீழிறக்கி நான் சொன்னபோது, அவர் சிரித்த அமர்க்களச் சிரிப்பிலும், குழந்தைத்தனம் ஒட்டியிருந்தது.
*
– மணா
#பண்டரி_பாய் #நடிகர்_திலகம் #சிவாஜி_கணேசன் #பராசக்தி #எம்எஸ்_ராஜேஸ்வரி #பிஆர்_பந்துலு #தை_பிறந்தால்_வழி_பிறக்கும் #படிக்காத_மேதை #கமல்ஹாசன் #களத்தூர்_கண்ணம்மா #pandari_bai #sivaji #parasakthi #ms_rajeshwari #pr_bandalu #thai_piranthal_vazhi_pirakkum #padikkatha_methai #kamalhassan #kalathur_kannamma