ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்கே பாதுகாப்பும், மரியாதையும் இல்லாதபோது திருநர்களின் வாழ்க்கைப் பற்றிச் சொல்லவே வேண்டும்! அவர்களின் வலிகளை நினைத்துப் பார்க்கையில் மனம் பதைபதைக்கிறது. அவர்களின் வாழ்க்கை பெண்களைவிட வலி மிகுந்தவை.
அவர்களின் வலிகளை கண்டுகொள்ளாத பால் மேலாதிக்கச் சமூகம் திருநரை அவமதிப்பதில் மட்டும் முன் நிற்கிறது.
பாலின சமத்துவம் என்பது ஆண் பெண் சமத்துவம் என்பதுடன் சுருங்கக் கூடியதல்ல, நாங்களும் இருக்கிறோம் என்பதை திருநர்கள் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களின் குரலை இங்கு யாரும் கேட்கத் தயாரில்லை. திருநர் சமூக விடுதலைப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஜில்லு திரைப்படத்தை இயக்கியுள்ளார் திவ்ய பாரதி.
ஜில்லு திரைப்படம் நம்மிடம் ஆழமாக உரையாடுகிறது. இப்படத்தின் மூலம் திருநரும் அங்கீகரிக்கப்பட வேண்டிய பாலினத்தவரே என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
பொது இடங்களில் திருநர்களைக் காணும்போதும் அவர்கள் தங்கள் பசிக்காக யாசிக்கும் போது ஆண்களும் பெண்களும் அவர்களைக் கண்டு முகம் சுளிக்கின்றனர்.
அவர்களின் உடல் மொழியும், பேச்சும், குணமும் ஆண் பெண் சமூகத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம். ஆனால் அவற்றிற்கு பின்னால் ஆயிரமாயிரமாய் சொல்லப்படாத வலிகளும் ஒடுக்குமுறைகளும் மறைந்துள்ளன. அவற்றை எல்லாம் இச்சமூகம் பொருட்படுத்துவதில்லை.
அவர்களின் தொழில், தினசரி வாழ்வு, வலிகள், ஆண்களால் அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், குடும்ப மற்றும் சமூகப் புறக்கணிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக திருநர் பிரச்சனையை படமாக்கும்போது ஆண்களையே திருநர் வேசமிட்டு நடிக்க வைப்பார்கள்.
திருநர் சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பால் மேலாதிக்கம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்களைத் திருநர்களாக நடிக்க வைப்பது அச்சமூகத்திற்கு துரோகம் இழைப்பதாகாதா?
அதனைத் தான் தமிழ்த் திரையுலகம் தொடர்ச்சியாக செய்துவருகிறது.
ஆனால், ஜில்லு திரைப்படத்தில் திருநர்களே தங்கள் வலிகளை வெளிப்படுத்துவதாக இயக்கியிருப்பது படத்திற்கும் திருநர்களுக்கும் நியாயம் சேர்க்கிறது.
சொந்த வீடு, வெளிநாட்டில் சுற்றுலா என்றெல்லாம் கனவு காணும் பலர் இருக்கும் இச்சமூகத்தில் தான், இரவு முழுவதும் நிம்மதியான உறக்கம் என்பதைப் பெருங்கனவாக திருநர்கள் சுமக்கிறார்கள் என்பதை படம் காட்சிப்படுத்துகிறது.
திருநர்கள் பிச்சை எடுப்பதையும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் கண்டு இச்சமூகம் முகம் சுளிக்கிறது. அவர்கள் என்ன வீம்புக்கா இத்தொழில்களில் ஈடுபடுகிறார்கள்? பசியை போக்க வேற எந்தத் தொழிலும் இல்லாதபோது அவர்கள் என்ன செய்வார்கள்?
இரவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளையும் அச்சுறுத்தலும் எவ்வளவு மோசமானவை என்பதை ஜில்லு உணர வைக்கிறார்.
திருநருக்கான கிடைமட்ட இடஒதுக்கீட்டை வலியுறுத்தி இன்று வரை போராட்டம் தொடர்கிறது.
திருநர்களின் கல்வியையும் வேலை வாய்ப்பையும் பறித்துவிட்டு அவர்கள் வயிற்றுப் பசிக்காக செய்யும் வேலைகளை கேவலமாகப் பேசும் மனசாட்சியற்ற மிருகங்களாக நாம் மாறி வருகிறோம்.
பெண்கள் இயற்கையாகவே உடலளவில் பெண்மையை சுமக்கிறார்கள். பெண்மையின் காரணமாக பல சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகிறார்கிறார்கள்.
ஆனால் திருநங்கைகள் பெண்மை உடல் உறுப்புகளை சுமக்கவே உயிரை பனையம் வைக்கிறார்கள்.
மனதால் பெண்ணாகவும், உடலால் ஆணாகவும் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமால் உயிர்வலியைச் சுமந்து பெண் உடலை அடைகிறார்கள்.
பெண்கள் பிரசவத்தில் குழந்தை பெற்றெடுப்பது மறுப்பிறப்பு என்றால், திருநர்கள் மறை உறுப்பு அறுவைசிகிச்சைக்குப் பின் மறுபிறப்பெடுக்கிறார்கள்.
பிரசவமும், மறை உறுப்பு அறுவை சிகிச்சையும் தாங்க முடியாத வலியை கொடுக்கும்.
இவ்வலிகளைச் சுமக்கும் பாலினங்களைத் தான் ஆணாதிக்கச் சமூகம் இரண்டாம்பட்ச மனிதர்களாக பார்க்கிறது என்று இடித்துரைக்கிறது ஜில்லு திரைப்படம்.
சாதியின் பெயரால் கொல்லப்படுவது மட்டும் ஆணவப்படுகொலை அல்ல. பாலினத்தின் பெயரால் கொல்லப்படுவதும் ஆணவப் படுகொலையே.
பால் மேலாதிக்க சமூகத்தினால் பல திருநர்கள் கொல்லப்படுகிறார்கள், தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
அனைத்து உயிர்களுக்கு இருப்பது போலவே திருநர்களுக்கும் காதல் உணர்வு உள்ளது.
அவர்களின் காதலையும் பால் மேலாதிக்கத்தினர் தங்களின் லாபத்திற்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகின்றனர்.
இக்கொடுமைகளையெல்லாம் திரைப்படத்தில் நேர்மையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விரும்பியதை செய்ய முடியாதவர்களாக, பகல் உலகை பார்க்க முடியாதவர்களாக, காதலிக்க உரிமையில்லாதவர்களாக, பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழும் திருநர் சமூகத்தின் வலிகளைப் பொதுச் சமூகத்திற்கு எடுத்துரைத்து ஜில்லு திரைப்படமும், திரைப்பட குழுவினரும் தன்னளவிலான நியாயத்தை சேர்த்துள்ளனர்.
ஜில்லு படம் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
- கு.சௌமியா