இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டுவிழா 07.10.2024 அன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் காலை 11 மணி முதல் 1 மணிவரை இந்திய விமானப்படையின் பல்வேறு விமானங்கள் கலந்துகொண்டு சாகச நிகழ்வுகளை நடத்தின.
இந்த Airshow வை பார்வையிட மொத்தம் 13 லட்சம் பேர் கூடியதாகச் சொல்லப்படுகிறது.
கடற்கரைக்குச் சென்றவர்களில் வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலின் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 250க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
நேற்று சென்னையில் சென்னையில் 36°C வரை வெப்பநிலை இருக்கும் என சனிக்கிழமையே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.3°C ஆகும். வெய்யிலின் தாக்கம் அதிகம் இருந்ததிற்கு முக்கிய காரணம் Wet Bulb Temperature. அதாவது வெயிலுடன் அதீத ஈரப்பதமும் சேரும்பொழுது அது உடம்பில் வெய்யிலின் தாக்கத்தை அதிகரிக்கிறது.
34°C வெய்யில் அடிக்கும் போது ஈரப்பதம் 70% க்கு மேல் இருந்தால் அது 42°C வெய்யிலுக்கு இணையான தாக்கத்தை உடலில் ஏற்படுத்தும். நாம் நமது செல்போன்களில் / கணினிகளில் வெப்பநிலை குறித்தத் தகவல்களைப் பார்க்கும்போது.
Temp 35°C, Feels like 44°C என்று வருவதைக் கவனித்திருப்போம். Wet Bulb காரணமாகதான் அந்த feels like வெப்பநிலை அதிகமாக உள்ளது.
வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதத்தை வைத்துக் கணக்கிடப்படும் Wet Bulb Temperature 30 டிகிரிக்கு மேல் செல்லும்போது அது மனிதர்களுக்கு ஆபத்தான அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Wet Bulb Temperature 30°C எட்டும்போது மனித உடலில் வியர்வை சுரக்கும் தன்மை குறைந்து உடம்பில் இருந்து வெப்பம் வெளியேற முடியாமல் வெப்பம் அதிகரித்து உள் உறுப்புகளைச் செயலிலக்கச் செய்து உயிர் இறக்க நேரிடுகிறது. இதைத்தான் Heat stroke என்கிறோம்.
நேற்று மதியம் சென்னையின் வெப்பநிலை 34.3°C, காற்றின் ஈரப்பதம் 73% ஆகவும் இருந்துள்ளது.
இதை வைத்துப் பார்த்தால் நேற்று சென்னையின் wet bulb temperature 30.1°C ஆகும். 10 லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடி இருந்ததின் விலைவாக local Heat island effect காரணமாக மெரினா பகுதியின் வெப்பநிலை இன்னும் 2°C உயர்ந்து இருந்திருக்கலாம்.
Wet Bulb Temperature 32°C இருக்கும்போது ஆரோக்கியமான மனிதர்கள்கூட அந்த வெயிலை 6 மணி நேரம் மேல் தாங்க முடியாது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஏற்கனவே உடல் பலவீனமானவார்கள் சில மணி நேரத்திலே சுருண்டு விழுந்திருக்கக் கூடும். மெரினாவில் இன்று நடந்திருக்கும் இந்த துன்ப நிகழ்வு நமக்கு Wet Bulb Temperature னால் வரும் காலங்களில் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பாதிப்புகளுக்கான எச்சரிக்கை மணி.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்கனவே Wet Bulb Temperature உயிரிழப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன.
பாகிஸ்தான் அரசு மருத்துவமனைகளில் heat stroke காரணமாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கென அங்கு பிரத்தியேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் wet bulb temperature அதிகமாக இருக்கும் நாட்களில் / நேரங்களில் மக்கள் நலன் கருதி பொது விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாததில் மட்டும் மெக்காவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்களில் 1300 பேர் கடுமையான வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில்கூட நடப்பாண்டில் வெப்பதினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெப்ப அலையின் காரணமாக இந்த ஆண்டு கோடையில் 733 பேர் இந்தியாவில் உயிர் இழந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது வட இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 58 பேர் வெப்ப அலையின் தாகத்தினால் உயிரிழந்தனர். அதில் 33 பேர் தேர்தல் பணி செய்துவந்த தேர்தல் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Wet Bulb Temperature மையமாக வைத்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த CSE ஆய்வறிக்கைகூட மும்பை, டெல்லியைவிட தமிழ்நாட்டில்தான் வெப்பத்தின் தாக்கம் அதிகம் என்று எச்சரித்திருந்தது.
Wet Bulb Temperature ஆல், தமிழ்நாட்டிற்கு வர இருக்கும் ஆபத்துக்கள் குறித்து பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டு முதல்வர்கூட கடந்த ஆண்டு Wet Bulb Temperature பாதிப்புகள் குறித்து பேசியிருந்தார்.
இவ்வளவு எச்சரிக்கைகள் நம் முன் விடுக்கப்பட்டிருந்தும், ஈரப்பதம் அதிகம் இருக்கும் சென்னை மெரினா கடற்கரையில், அதுவும் உச்சி வெய்யிலின்போது திறந்த வெளியில் 10 லட்சம் பேருக்கு மேல் கூட்டியது நிச்சயம் ஒன்றிய அரசின் தவறுதான்.
விமானங்களை இயக்க சாதகமான வானிலை தேவை, அதில் கவனம் செலுத்திய விமானப் படை மக்களின் நலன் குறித்து சிந்திக்கத் தவறியது ஏன் எனும் கேள்வி எழுகிறது.
இந்திய விமானப்படைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்த கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்திருக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தை நம் அரசுகள் இன்னும் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
இதே சென்னையில் 2017ல் பல லட்சம் பேர் ஒரு வாரக்காலம் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வெய்யிலில் கூடியிருந்தார்கள்.
2013ல் பல ஆயிரம் மாணவர்கள் காலை முதல் மாலை வரை சுடுமணலில் அமர்ந்து போராட்டம் செய்தார்கள்.
ஆனால் அது (1°C world). இப்போது நாம் இருப்பது (1.2°C world). இந்த வித்தியாசத்தை நாம் புரிந்தாக வேண்டும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் இதுவரை உலகில் பதிவானதிலே அதிகமான வெப்பநிலை பதிவான ஜூன் மாதமாகும்.
அதேபோல் இந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் அந்த அந்த மாதத்திற்கான இதற்குமுன் இல்லாத அதிகபட்ச வெப்பநிலையை எட்டியுள்ளது.
2030ம் ஆண்டிற்குள் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5°C யை எட்டிவிடும் என்கிறது 160 நாடுகளின் அறிவியலாளர்களை உள்ளடக்கிய IPCC யின் 6வது மதிப்பீட்டு ஆய்வறிக்கை.
இனி பூமியில் அதிகரிக்கப்போகும் ஒவ்வொரு 0.1°C க்கும் நாம் சந்திக்கப் போகும் பாதிப்புகள் பல மடங்கு இருக்கும்.
விமான சாகச நிகழ்ச்சியோ, விமான நிலையமோ, காலநிலை மாற்றத்தைப் பொருட்படுத்தாமல் இனி அரசின் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டால் அது நிச்சயம் மக்களையும் சூழலையும் கடுமையாகப் பாதிக்கும். அதற்கான எச்சரிக்கை மணியே இந்த Airshow.
– பிரபாகரன் வீர அரசு
நன்றி: பூவுலகின் நண்பர்கள் இணையதளம்