சத்யராஜ் 70 – மலைக்க வைக்கும் திரைப்பயணம்!

தமிழ் திரையுலகில் பல்வேறுபட்ட நடிகர், நடிகைகள் தங்களது பங்களிப்பைத் தந்து சென்றிருக்கின்றனர். ஒரு பறவை வானில் பறக்கும் காலம் என்பது போன்று அந்த காலகட்டம் அமையும். அவர்களது சிறகசைப்புகள் ரசிகர்களை மகிழ்விக்கும்.

மிகச்சிலருக்கு மட்டும், அந்த ‘பறத்தல் காலம்’ பல ஆண்டுகளாக நீளும். அதற்கேற்ப, அவர்கள் வலம் வரும் விதத்திலும் மாற்றங்கள் நிகழும். அந்த ‘தங்க வாய்ப்பினை’ப் பெற்றவர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ்.

அவர் இன்று (அக்டோபர்-3) தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் என்பது இன்னொரு ஆச்சர்யம்.

மூன்று கட்டங்கள்!

கோவை காந்திபுரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்து, நல்லதொரு கல்வி மற்றும் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர் சத்யராஜ்.

நடிப்பின் மீதான ஆர்வம், அந்த பின்புலத்தைத் துறந்துவிட்டு சென்னை நோக்கி வரச் செய்தது.

அந்த காலகட்டத்தில், அவரைத் தாங்கிப் பிடிக்க ஆயிரம் கைகள் இருந்தாலும் தன் கைகளால் ‘கரணம்’ அடிப்பதையே அவர் விரும்பினார். அதனைச் செய்தும் காட்டினார்.

அன்றைய காலகட்டத்தில், இந்தியில் அமிதாப்பச்சன் போன்ற ஒரு சில நாயகர்களே ஆறடி உயரத்தோடு ஆஜானுபாகுவாகத் திரையில் தோன்றினர்.

ஆனால், அங்கும் கூட அவருக்கான வாய்ப்பு பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகே கிடைத்தது.

காரணம், அப்போது திரைத்துறையில் பின்பற்றப்பட்ட சில இலக்கணங்கள். அதனைக் கடந்துவர, நேரடியாக நாயகன் ஆவது சரியான முடிவல்ல என்பதை சத்யராஜ் முன்பே உணர்ந்திருந்தாரா என்று நமக்குத் தெரியாது.

ஆனால், அத்துறையின் செயல்பாடு குறித்து ஆதி முதல் அந்தம் வரை தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். தயாரிப்பு நிர்வாகம், கதை விவாதம் மற்றும் பட உருவாக்கத்தில் பங்கேற்பு, சிறு வேடங்களில் நடிப்பு என்று கோடம்பாக்கத்தை வலம் வந்துகொண்டே இருந்தார்.

கல்லூரியில், தான் வசித்த பகுதியில் தெரிந்த முகங்கள் சில நாயக அவதாரம் எடுத்தபோதும், அவர் மட்டும் அமைதியாகத் தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

சட்டம் என் கையில் படத்தில் சிறு பாத்திரத்தில் தோன்றியவர், அதன்பின் வில்லன்களின் அடியாளாக, எடுபிடியாக, உறவினராகப் பல படங்களில் நடித்தார்.

மணிவண்ணன் இயக்கிய ‘நூறாவது நாள்’ அதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவரே மெயின் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.

மெல்ல ‘சாவி’யில் ’ஆன்ட்டி ஹீரோ’ ஆனார் சத்யராஜ். அதன்பிறகு ’கடலோர கவிதைகள்’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ’விடிஞ்சா கல்யாணம்’, ‘மந்திரப் புன்னகை’, ‘பூவிழி வாசலிலே’, ’சின்னதம்பி பெரியதம்பி’ என்று அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் ‘நாயக பயணத்தை’ வெற்றிகரமானதாக ஆக்கியது.

ஆக, சத்யராஜ் தனது வாழ்வில் வாய்ப்புகளுக்காக அலைந்த காலம், அதனைப் பயன்படுத்தி வில்லனாக முன்னேற்றம் கண்ட காலம், அதைக் கடந்து நாயகனாக மாறிய காலம் என்று மூன்று கட்டங்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டார்.

வழக்கத்திற்கு மாறான பாத்திரங்கள்!

ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு என்று நட்சத்திரப் பட்டாளம் வெற்றிகளை மாறி மாறி அள்ளிக் குவித்த காலத்தில், தமிழ் திரையுலகில் நான்காவது முக்கிய நடிகராக வலம் வந்தவர் சத்யராஜ்.

‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘மக்கள் என் பக்கம்’, ‘அண்ணாநகர் முதல் தெரு’, ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என்று மலையாளப் படங்களின் ரீமேக்கில் மிக எளிதாகப் பொருந்தி நின்றார் சத்யராஜ்.

’ஜல்லிக்கட்டு’, ‘வேதம்புதிது’, ‘கனம் கோர்ட்டார் அவர்களே’, ‘ஜீவா’ போன்ற படங்களும் வேறு நாயகர்களுக்கான பாத்திரங்கள் அல்ல இவை என்று பறை சாற்றின.

இந்தப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பே, அவருக்கான ரசிகர்களையும் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.

தொண்ணூறுகளில் சத்யராஜ் நடித்த வாத்தியார் வீட்டுப் பிள்ளை, வேலை கிடைச்சிடுச்சு, வாழ்க்கை சக்கரம், மல்லு வேட்டி மைனர், நடிகன், பிரம்மா போன்ற படங்களின் இன்னொரு நாயகனை நாம் பொருத்திப் பார்ப்பது கடினம்.

வால்டர் வெற்றிவேல் படத்தில் மிகை நடிப்பை வெளிப்படுத்திய அதே சத்யராஜ் தான், ‘ஏர்போர்ட்’ படத்தில் துளி கூட அதீதம் என்று சொல்ல முடியாதபடி தோன்றியிருந்தார்.

ஆனால், ‘நடிகன்’ உள்ளிட்ட சில படங்களில் நக்கலும் நையாண்டியுமாக நடித்தது அவரது அடையாளமாகிப் போனது.

அதனை விடாமல் பின்பற்ற வேண்டிய கட்டாயம் அதிகமானபோது, அதுவே சுமையாகிப் போனது.

தொண்ணூறுகளின் பிற்பாதியில், சத்யராஜ் நடித்த பல படங்கள் தோல்வியடைவதற்கும் அதுவே காரணமானது.

2000ஆவது ஆண்டுக்குப் பிறகும் கூட, நாயக பாத்திரங்களில் நடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் சத்யராஜ். அதற்கேற்ப, பதின்ம வயதுப் பிள்ளைகளின் தந்தையாகத் தோன்றினார்.

ரொம்பவே வயது முதிர்ந்த தங்கைகளுக்கு அண்ணாக நடித்தார். ’அடிதடி’யில் மீண்டும் ‘ஆன்ட்டி ஹீரோ’ ஆனவர், அதே ஜோரில் சில திரைப்படங்களில் தலைகாட்டினார். சிபிராஜின் தந்தையாகவும் நடித்தார்.

ஒருகட்டத்திற்குப்பிறகு அதுவும் போரடிக்க, ‘இனிமேல் குணசித்திர பாத்திரங்களில் நடிக்கலாம்’ என்று இறங்கினார் சத்யராஜ். ஆனால், அந்த முடிவுதான் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கும் தெரிந்த ‘கட்டப்பா’வாக அவரை மாற்றியது.

நண்பன், ஆயிரம் விளக்கு, நண்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, இசை, சிகரம் தொடு போன்ற படங்களில் வித்தியாசமான பாத்திரங்களில் அவரைக் காணச் செய்தது.

’இந்தப் படத்தில் சத்யராஜின் பாத்திரம் எப்படிப்பட்டதாக இருக்கும்’ என்ற எதிர்பார்ப்பினைத் தக்க வைத்திருக்கிறது. அடுத்து வரவிருக்கும் ‘கூலி’ திரைப்படம், அதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது.

மீண்டும் ஒரு இன்னிங்ஸ்!

எழுபது வயதிலும் இடைவிடாது நடித்து வருவது நிச்சயம் ஒரு சாதனையே. குணசித்திர பாத்திரங்களை ஏற்றபோது, நடிப்பு வாழ்வில் நான்காம் கட்டத்தை அடைந்தார் சத்யராஜ். அந்த இன்னிங்ஸ் தான் ஒரு ’கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச்’ பார்க்கும் உற்சாகத்தை நமக்குத் தந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் ஆடிய டெஸ்டில் எப்படிப்பட்ட சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்குத் தந்ததோ, அது போன்றதொரு அனுபவத்தைத் தருகிறது சத்யராஜின் திரை இருப்பு.

இந்த இன்னிங்ஸ் பல நடிகர், நடிகைகளுக்கு வாய்க்காத ஒன்று.

அந்த வகையில், ’தானும் ஒரு ஜாம்பவான்’ என்பதை மௌனமாக உணர்த்தி வருகிறார் சத்யராஜ்.

வளர்ந்த தேக்கு மரம் போலத் தனது உடலையும் உள்ளத்தையும் பொலிவுடன் பராமரித்து வைத்திருக்கிறார்.

ஆதலால், மேலும் பல ஆச்சர்யங்கள் அவரிடத்தில் இருந்து வெளிப்படும் என்பது நிச்சயம் அதிர்ச்சிகரமான செய்தியல்ல. அதற்கான வல்லமையுடன் இனி வரும் நாட்களிலும் அவர் திகழ வேண்டும் என்பதே நம் ஆசை.

சத்யராஜுக்கு 70-வது பிறந்தநாள் வாழ்த்துகள்!

  • மாபா
Comments (0)
Add Comment