மதுவால் அழிக்கப்படும் மனிதவளம்!

முனைவர் தொல்.திருமாவளவன் வேதனை

தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பெண்களும் ஆண்களும் பங்கேற்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த மாநாட்டின் துவக்கத்தில், விசிக கொடியைக் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான முனைவர் தொல். திருமாவளவன் ஏற்றி வைத்து 13  தீர்மானங்களை வாசித்தார்.

அதன்படி, மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்,  மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்,

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும், மதுவிலக்கு விசாரணை ஆணையத்தை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும்,

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும், தமிழ்நாட்டில் போதைப் பொருட் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து மது ஒழிப்புக்கான இணையதள கையெழுத்து இயக்கத்தையும் முனைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், அய்யா வைகுண்ட இயக்கத் தலைவர் பால.பிரஜாபதி அடிகளார்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார், கட்சியின் பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் உள்ளிடோர் பங்கேற்றனர்.

அதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் வாசுகி,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணி தேசிய செயலாளர் ஆனி ராஜா, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா,

மதிமுக துணைப்பொது ச்செயலாளர் ரொஹையா ஷேக் முகமது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அணி மாநிலச் செயலாளர் பாத்திமா முசபர்,

மனிதநேய மக்கள் கட்சியின் மகளிர் அணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் பேசிய முனைவர் தொல்.திருமாவளவன், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு விசிகவின் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் என்றும் இந்த மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்ட மாநாடு அல்ல என்றும் பேசினார்.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர்,

மதுப் பழக்கத்தால் மனிதவளம் அழிந்துபோகும் எனவும் எச்சரித்தார்.

மது விலக்குக் கொள்கையில் திமுகவுக்கும் உடன்பாடு உள்ளது எனக் கூறிய முனைவர் தொல்.திருமாவளவன்,

விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கோரிக்கையாக ஏற்று மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கையாக வைத்தார். 

அவரைத் தொடர்ந்து பேசிய விசிக எம்.பி துரை.ரவிக்குமார், தமிழ்நாட்டில் மது குடிக்கும் ஆண்கள் 33 சதவிகிதம் என்றும் பெண்கள் பத்து சதவிகிதம் என்றும் கூறினார்.

Comments (0)
Add Comment