ஆரோக்கியம் காக்க இனிப்பைத் தவிர்ப்போம்!

அக்டோபர் – 3 : தேசிய சர்க்கரை இல்லாத தினம்

நமது வாழ்க்கை முறையில் மகிழ்ச்சி என்றால் இனிப்புடன் கொண்டாடப் பழகிவிட்டோம். பந்தியில் முதலிடம் வகிப்பது இனிப்பு தான்.

தினமும் காபி, டீ தொடங்கி வெளியில் செல்லும்போது எதோ ஒரு வகையில், இனிப்பு உடலுக்குள் உணவாகச் சென்று விடுகிறது. ஆனால், எல்லோருக்கும் பிடிக்கும் இந்த இனிப்பு உடல் நலனில் எப்படி வேலைசெய்கிறது?

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடலுக்கு நல்லதல்ல என்பதை நினைவூட்டும் வகையில், தேசிய சர்க்கரை இல்லாத தினம், ஆண்டுதோறும் அக்டோபர் 3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் நினைவு படுத்துகிறது.

பொதுவாக வெள்ளைச் சர்க்கரை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொண்டால் பல நன்மைகள் உடலுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், மனிதர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் அளவை விட குறைவாக சர்க்கரை சாப்பிடும்போது என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஆய்வுகளின் கூற்றுப்படி, சர்க்கரையில் எந்தவிதமான உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடையாது. ஆனால் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை வரக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

சர்க்கரை என்பது சுக்ரோஸ் என்னும் மூலக்கூறுகள் நிறைந்தது. அது உடலுக்குள் செல்லும் போது குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்ட்டோஸ் இன்னும் இரண்டு மூலக்கூறுகளாக பிரிந்து வயிற்றுக்குள் செல்கிறது.

இதில் இருக்கும் ஃப்ரக்ட்டோஸ் கல்லீரலுக்கு தீங்கு ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

பொதுவாக வெள்ளை-சர்க்கரை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது இதய நோய், உடல் எடை அதிகரிப்பு, டைப் 2 சர்க்கரை நோய் அதிகரிப்பதாக கூறுகின்றனர்.

அதிகப்படியான வெள்ளை சர்க்கரை உடலில் நோய் எதிர்ப்பு திறன் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுப்படுகிறது.

அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலால் எரிக்கப்படாத சர்க்கரை இரத்தத்தில் கொழுப்பாக மாறுகிறது. இது உடல் எடையை அதிகரித்து பல உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

அதிகப்படியான கொழுப்பு கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது .

மேலும் கடைகளில் விற்கப்படும், சோடாக்கள், குளிர்பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த பழச்சாறுகள் போன்றவை எடுத்துக் கொண்டால் மூளையில் பசியைக் கட்டுப்படுத்தும்.

இவைகளில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் சர்க்கரையை அதிகப்படுத்தி வீக்கம் ஏற்படுவதால், இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

இதைத் தொடர்ந்து வலுவான எலும்பு கூட வலுவிழக்கச் செய்கிறது. ஆண்களை விடவும் குறிப்பாக பெண்களை அதிகம் தாக்கும் ஆஸ்டியோபோராசிஸ், உடல் பருமன், கண் பார்வைக் குறைபாடு, கீல்வாதம், பற்கள் பாதிப்பு என நோய்களின் பட்டியல் அதிக எடுக்கும் வெள்ளைச் சர்க்கரையால் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

அளவுக்கு நஞ்சுக்களின் கலவையில் உருவான சர்க்கரையால் குறைவான வயதில் அதிகப்படியான உடல் பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகின்றனர்.

எனவே வெள்ளைச் சர்க்கரை மனித இனத்துக்கு மெல்லக் கொள்ளும் உயிர்கொல்லி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக இப்போது பயன்படுத்தப்படும் சுகர் ஃப்ரீ கூட உடல் நலத்துக்கு கேடு என்கின்றனர். இதைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு.

இப்போது உள்ள சமுதாயத்தில் மனச்சோர்வு என்பது அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு தீர்வாக பல பேர் வெள்ளை சர்க்கரையை நாடுகின்றனர்.

சாக்லேட், குளிர்பானம், பேக்கரி சுவீட் என எதுவாயினும் அதில் வெள்ளை சர்க்கரை மட்டுமே நிறைந்துள்ளது.

அதனால் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் சர்க்கரை உதவுகிறது.

திடீர் பதட்டம், மனச்சோர்வு ஏற்பட்டால் அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, வெல்லம் எடுத்துக் கொள்வது சிறப்பு.

இது காலகாலமாக நாம் முன்னோர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆகவே, தேசிய சர்க்கரை இல்லாத தினமான அக்டோபர் 3 ம் தேதியான இன்று முதல், இனிப்பு தேவை என்றால் இயற்கை முறையை மட்டுமே நாடுங்கள்.

தேன், பழங்கள், கருப்பட்டி போன்றவை உட்கொள்ளலாம்.

இயற்கை சார்ந்து வாழும்போது உடல்நலப் பிரச்சனைகள் என்பது குறைவாகவே இருக்கும்.

உணவு நாகரிகத்தில் நமது உடல் ஆரோக்கியம் மொத்தமும் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment