தமிழ் சினிமாவில் தனித்துவமான வசன உச்சரிப்புகளால் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு வெற்றி நடை போட்டவர் நடிகர் சத்யராஜ்.
காலம் யாரையும் எப்படியும் மாற்றும் என்பதற்கு ஏற்ப ‘சட்டம் என் கையில்’ என்ற திரைப்படத்தில் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய சத்யராஜ் பின் நாட்களில் வில்லன் கதாபாத்திரத்திலேயே தனக்கென ஒரு நடிப்புபாணியை ஏற்படுத்தும் அளவுக்கு தன் திறமையை வெளிப்படுத்தினார்.
பொதுவாக வில்லன் கதாபாத்திரம் என்றாலே ஆக்ரோஷமான வசனங்களும் இறுக்கமான உடல் மொழியுமாக இருப்பதை உடைத்து அதனை நக்கல், நையாண்டி கலந்ததாக மாற்றியவர் சத்யராஜ்.
வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த சத்யராஜுக்கு முதன் முதலாக வெளிச்சத்தை தேடி தந்தது ‘நூறாவது நாள்’, ’24 மணி நேரம்’ என்ற இரண்டு திரைப்படங்கள்தான்.
1984-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் தனது வில்லன் பயணத்தை தொடங்கியவர் அதே வில்லத்தனத்தை வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுத்தி சிறப்பாக நடிக்க தொடங்கினார்.
அதன் விளைவு 1984-ம் ஆண்டிலேயே கிட்டத்தட்ட 12 படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 1985-ம் ஆண்டு அதையும் தாண்டி ஒரே ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 28 படங்கள் நடித்தார்.
வில்லன் கதாபாத்திரங்களில் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருந்து இவரை முதன்முதலாக காதல் நாயகனாக அறிமுகம் செய்தது கடலோரக் கவிதைகள் என்ற திரைப்படம். வில்லன் கதாபாத்திரங்களில் வெளுத்துக்கட்டியவரா இவர் என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு உருகி உருகி காதல் காட்சிகளில் நடித்திருப்பார்.
அதன் பின் இவருடைய பாதை மாறி கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். ‘மந்திரப்புன்னகை’, ‘பூவிழி வாசலிலே’, ‘ரிக்சா மாமா’, ‘புது மனிதன்’, ‘தாய் மாமன்’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘நடிகன்’ என இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் படைப்பில் உருவான சாதிகளை வேரறுக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்ட ‘வேதம் புதிது’ என்ற படம் இவரின் திரையுலக வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அதற்கு காரணம் இவர் ஏற்று நடித்திருந்த பாலு தேவர் என்ற கதாபாத்திரம். சாதிய வேறுபாடுகள் உடைந்து மனிதம் உயிர்த்தெழுவதைத் திரைப்படத்தில் மிக அருமையாக காட்சிப்படுத்தி இருப்பார் பாரதிராஜா.
இவ்வாறு சத்யராஜ் கதாநாயகனாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த வேளையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பான ஒரு வெற்றி படமாக அமைந்தது தான் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அமைதிப்படை’ திரைப்படம். பாமர மக்களுக்கும் புரியும் வகையில் அரசியல் நிலைமைகளை அக்குவேறு, ஆணிவேராக பிரித்துக் காட்டிய இத்திரைப்படம் மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
அரசியல் நிலைமைகளை விளக்கக்கூடிய படமாக இன்றும் மக்கள் முன் இத்திரைப்படம் வந்து போகிறது என்றால் அதற்கு அவர் ஏற்று நடித்திருந்த ‘அமாவாசை’ கதாபாத்திரமும் ஒரு காரணம். அரசியலின் அடிப்படை கூறுகள் என்ன? என்பதை அரசியல்வாதியின் நிலையில் நின்று மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர் மணிவண்ணன். அன்றைய காலகட்டங்களில் மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணி மிகவும் தனித்துவமான படைப்புகளாக இருந்தது. கிட்டத்தட்ட 25 படங்களில் ஒன்றாக இணைந்த இந்த வெற்றி கூட்டணியில் 12 படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது.
இவர் நடித்த ‘குங்கும பொட்டு கவுண்டர்’ என்ற படத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய பாமர, பாசக்கார தந்தையாக அருமையாக தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் சத்யராஜ், மணிவண்ணன் கூட்டணி எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு சத்யராஜ், கவுண்டமணி நடித்த காட்சிகளும் ரசிகர்களிடம் மிகுந்த அளவு வரவேற்பை பெற்றது. அந்த காலகட்டங்களில் இந்த இருவரின் காமெடிக்கென்று தனி ரசிகர் படையே இருந்தது. இவ்விருவரும் இணைந்து நடித்த ‘புது மனிதன்’ படத்தில் இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டிக்கு ஒரு அளவே இல்லையா! என்று கேட்கும் அளவுக்கு அவ்வளவு நகைச்சுவையாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
நடிப்புத் துறையில் கதாநாயகனாக இவருக்கு ஒரு இடைவேளை ஏற்பட்டபின்பு மீண்டும் இவரை உலக அளவில் திறமையான நடிகராக வெளிப்படுத்திய படம் தான் ‘பாகுபலி’. வீரமும் விவேகமும் நிறைந்த கதாபாத்திரமாக இவர் ஏற்று நடித்த ‘கட்டப்பா’ கதாபாத்திரம் இன்றளவும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகத் தான் உள்ளது. பெரியார் கொள்கைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட சத்யராஜ் ஏற்று நடித்த ‘பெரியார்’ திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றதோடு, பெரியார் மீது இவருக்கு இருந்த தனிப்பட்ட ஈடுபாட்டையும் காட்டும் விதமாக அமைந்தது.
நடிப்பின் மீது கொண்ட மிகுதியான ஈடுபாட்டால் 10 ரூபாய் சம்பளத்தில் நாடகக் கலைஞராக தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சத்யராஜ் தன்னுடைய முழுமையான ஆர்வத்தாலும் ஈடுபாட்டாலும் தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொண்டு இன்றுவரை தமிழ் சினிமாவில் கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரின் திரை பயணங்கள் மென்மேலும் தொடரட்டும்!
– நன்றி: கல்கி இதழ்
#sathyaraj #நடிகர்_சத்யராஜ் #சட்டம்_என்_கையில் #காக்கிச்சட்டை #மிஸ்டர்_பாரத் #வில்லாதி_வில்லன் #கடலோரக்_கவிதைகள் #மந்திரப்_புன்னகை #பூவிழி_வாசலிலே #ரிக்சா_மாமா #புது_மனிதன் #தாய்_மாமன் #வால்டர்_வெற்றிவேல் #நடிகன் #பாரதிராஜா #வேதம்_புதிது #sattam_en_kaiyil #kaakki_sattai #mr_bharath #villathi_villan #kadalora_kavithagal #manthira_punnagai #rikshaw_mama #puthumanithan