ஆஸ்கருக்கான இந்தியப் படம் தேர்வானது சரியா?

கவிஞர் கரிகாலன் ஆதங்கம்

 

உலக அளவில் இந்திய சினிமா சந்தை பெரியது. இந்திய சினிமா வருமானம் 2024 இல் 4.86 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்திய சினிமாவை பொருட்படுத்துவது போன்று பாவனை செய்கிறது ஆஸ்கர். விளைவு. பாடல், ஒலிக்கோர்வை, நடனம், இசை, இப்படி ஏதாவதொரு ஒரு துறைக்கான விருதை அது இந்திய சினிமாவுக்கும் தருகிறது.

ஆஸ்கர்தான் சிறந்த சினிமாவுக்கான அளவுகோலா? என்றால் இல்லை. ஆஸ்கருக்கு வெளியே உலகின் அற்புதமான படங்கள் நிறைய இருக்கின்றன. இது வேறு. அதேவேளை ஆஸ்கருக்கு அனுப்பப் படுகிற இந்தியப் படங்கள், தேர்வு செய்யப்படுகிற முறை மீது நமக்கு நிறைய சந்தேகம் வருகிறது.

ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (FFI), ஆஸ்கர் போட்டிக்காக வந்திருந்த, 29 இந்தியப் படங்களில் இருந்து, அமீர்கான் மனைவி கிரண்ராவ் இயக்கிய ‘லாபட்டா லேடீஸ்’ (Laapataa Ladies) படத்தைத் தேர்வு செய்திருக்கிறது.

இந்த 28 படங்களில் கேன்ஸ் வெற்றியாளர் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’, இருந்தது. சமீபத்தில் தேசிய விருது பெற்ற ஆனந்த் ஏகர்ஷியின் ‘ஆட்டம்’ படம் இடம்பெற்றிருந்தது.

தமிழில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற வாழை, தங்கலான் போன்ற படங்களும் இடம்பெற்றிருந்தன.

ஆஸ்கர் விருதுக்கு அனுப்பும் படத்தைத் தேர்ந்தெடுக்கும் ஜூரி குழுவில் 13 உறுப்பினர்கள்.

இக் குழுவின் தலைவர் அசாம் இயக்குனர் ஜானு பருவா. படத்தைத் தேர்ந்தெடுக்கும் பணி சென்னையில்தான் நடைபெற்றிருக்கிறது.

லாபட்டா லேடிஸ் படத்தை ஆஸ்கருக்கு தேர்வு செய்தது மூலம் இந்தியத் தேர்வுக் குழுவின் சினிமா ரசனை மீது சந்தேகம் ஏற்படுகிறது.

ஆஸ்கர் விருது பெற்ற படம் cpaernum. இது புலம் பெயரும் சிறுவர்களை மையமாகக் கொண்ட படம். இதற்கு இணையான அரசியலைக் கொண்ட படம்தான் வாழை.

போலவே, ஆடு ஜீவிதம் போன்ற படங்களும் இந்த வரிசையில் இருந்தன. லாபட்டா லேடிஸ் ஓரளவு நல்ல படம்தான். ஆனால் ஆஸ்கருக்கு அனுப்புகிற அளவு இது சிறந்த படமா? எனில் இல்லை.

தமிழிலிருந்து இயக்குநர் வசந்தபாலன் மட்டும்தான் இந்த முடிவை விமர்சித்திருக்கிறார். மற்றவர்கள் இவ்விசயத்தை பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

லாபட்டா லேடிஸ் மட்டுமில்லை. லகான், ரங் தே பாசந்தி, தாரே ஸமீன் பர் போன்ற அமீர்கான் படங்கள் இதற்கு முன்பும் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

RRR எனும் தெலுங்கு படம் நடனத்துக்காக கடந்த ஆண்டு ஆஸ்கர் பெற்றது.

தெலுங்கு, இந்தி மொழிகளுக்கு உள்ளதுபோல் தமிழ்த் திரைப்படங்களுக்கு லாபி செய்ய டெல்லியில், உலக அரங்கில் ஆட்கள் இல்லை.

தமிழ்க் கலைஞர்களிடமும் ஒற்றுமையில்லை.

வசந்தபாலனிடம் செயல்படுகிற இந்த sensitivityயை முக்கியமானதாகப் பார்க்கிறேன்.

அவர் தன் படத்துக்காகப் பேசவில்லை. தன் மொழியில் சிறந்த படம் இருந்தும், இந்தியில் ஒரு சுமாரான படம் ஆஸ்கருக்கு செல்வதுதான் அவரைத் தொந்தரவு செய்கிறது.

லாபட்டா லேடிஸ், கிரேஸி மோகன் டைப் ஆள்மாறாட்ட டிராமா. ஆனால் ஆடு ஜீவிதம், வாழை போன்ற படங்களில் இந்தியாவின் 70% மக்களுடைய வாழ்வின் சாயல் இருக்கிறது. லாபட்டா லேடிஸ் ஓரளவு, பெண்களை முதன்மைப் படுத்தியிருக்கிற படம்.

ஆனால் ஜூரிகளில் ஒருவர்கூட பெண் இல்லை. உள்ளுக்குள் இருக்கும் குறுகிய பிளவுகளை விடுத்து, இனியாவது தமக்கான இடத்தைப் பெற, தமிழ்க் குரல் consolidate அடையவேண்டும்.

நன்றி: ஃபேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment