471 நாட்கள் சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி!

கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, தனது அரசியல் பயணத்தை திமுகவில் இருந்து தொடங்கினார். வைகோ, மதிமுகவை ஆரம்பித்ததும், அந்தக் கட்சியில் இணைந்தார். கொஞ்ச காலத்திலேயே அதிமுகவில் ஐக்கியமானார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த 2014-ம் ஆண்டு, போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி மீது, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குப் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி தற்போது வரையில் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருந்து வருகிறார்.

ஏற்கெனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா அமர்வு இன்று (வியாழக்கிழமை) அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

செந்தில் பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் விவரம்:

* செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது – வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்டகாலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

* ஜாமீனுக்காக செந்தில் பாலாஜிக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு பேர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும் – திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்- சாட்சிகளைக் கலைக்கக் கூடாது -வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது

இந்தத் தகவல்களை செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏதேனும் நிபந்தனை விதித்துள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

‘எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை – செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எத்தகைய சட்டப்பூர்வத் தடையும் இல்லை’ என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

ஸ்டாலின் வரவேற்பு

செந்தில் பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது – எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது.

அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன – கைது செய்து சிறையிலேயே வைத்து விடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள் – முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வரவேற்கிறேன்’ என ஸ்டாலின் கூறியுள்ளார்.

விரைவில் ஜாமீனில் வெளிவரும் செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சர் ஆவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

– மு.மாடக்கண்ணு

#செந்தில்_பாலாஜி #திமுக #வைகோ #மதிமுக #அதிமுக #செந்தில்_பாலாஜி #ஜெயலலிதா #சென்னை #உயர்நீதிமன்றம் #vaico #mdmk #admk #senthil_balaji #jayalalitha #c_m_stalin #chennai #highcourt #மு_க_ஸ்டாலின் #dmk

Comments (0)
Add Comment